Header Ads



தினமுரசு ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள்


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


தினமுரசு வாரமலர் பத்திரிகையின் ஸ்தாப ஆசிரியரும், நாடாளுமன்ற உறுப்பினரும் அற்புதன் என்று வாசகர்களினால் அறியப்பட்டவருமான நடராஜா அற்புதராஜா படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.


அவர் 1999ஆம் ஆண்டு நொவெம்பெர் மாதம் 02 ஆம் திகதி கொழும்பில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.


தினமுரசுப் பத்திரிகையை ஜனரஞ்சகப் பத்திரிகையாக மாற்றிய பெருமை அன்னாரையே சாரும். மிகக் குறுகிய காலத்தில் அவர் தினமுரசுப் பத்திரிகையை சூடு சுவை சுவாரசியம் என பிரபல்யப் படுத்தி ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகையாக மாற்றியிருந்தார். தினமுரசுப் பத்திரிகையின் ஜனரஞ்சக எழுத்தாற்றல் வாசகர்களை நின்று நிதானித்து உற்று நோக்க வைத்தது.


தேசிய தமிழ் பத்திரிகைகளுக்கு மாற்றாக, தினமுரசு அற்புதமான ஒருpடத்தைத் தனக்க வைத்துக் கொண்டது. அரசியல், கலை, இலக்கியம், சினிமா, தொடர் கட்டுரைகள் என பல பகுதிகளிலும் வாசக நெஞ்சங்களுக்கு எது தேவையோ அவை தினமுரசுப் பத்திரிகையில் பிரசுரமானது.  விஷேடமாக கூறப்போனால் இதில் வெளியாகிய அரசியல் கட்டுரைகளும் அரசியல் தொடர்களும் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவை.


வாராவாரம் எக்ஸ்ரே ரிப்போர்ட் என்ற பெயரில் அந்த நாட்களில் நடந்துகொண்டிருந்த ஈழப் போரியல் சம்பந்தமான கள நிலவரங்களை தினமுரசு வாரமலர்  பத்திரிகை பிரசுரித்து கொண்டிருந்தது.


எந்தப் பத்திரிகையிலும் இல்லாதபடி துல்லியமான கணிப்புகளும் களத்தின் அருகே நின்று பார்த்ததுபோல விவரிப்புகளும் இருந்தன. ஒவ்வொரு வாரமும் எக்ஸ்ரே ரிப்போர்ட் படித்தாலே போதும் வேறு எந்த கட்டுரைகளும் படிக்கத் தேவையில்லை என்ற நிலை உருவானபோது தினமுரசு பத்திரிகைக்கான மவுசு ஏறிக்கொண்டே போனது.


படுகொலை செய்யப்பட்ட தினமுரசுப்’ பத்திரிகை ஆசிரியர் நடராஜா அற்புதராஜாவின் நினைவாக  விசேட செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ள ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தனது இதய அஞ்சலிகளையும் அவருக்குத் தெரிவித்துள்ளார்.


அவரது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 'ஈ.பி.டி.பி. கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒருவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கிய தோழர் ரமேஸ்(நடராஜா அற்புதராஜா) எம்மை விட்டு பிரிக்கப்பட்டு இன்றுடன் (02.11.1999) 25 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்த வேளையில், அவருடைய செயற்பாடுகளையும், எனக்கும் அவருக்கும் இடையிலான புரிந்துணர்வினையும் எண்ணிப் பார்க்கிறேன். ஆரம்ப காலம் தொடக்கம் என்னுடைய நிலைப்பாடுகளையும் நியாயங்களையும் வலுப்படுத்தும் வகையிலேயே செயற்பட்டவர் தோழர் ரமேஸ். அவர், கட்சி சார்பான கருத்தாடல்களின்போது, ஆரோக்கியமான வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டு  கட்சியின் செல்நெறியில் காத்திரமான பங்களிப்பினை வழங்கி வந்தார்.


அதேபோன்று, அவரிடம் காணப்பட்ட பல்துறை திறமைகளை ஊக்கப்படுத்திய நான், அதற்கான சந்தர்ப்பங்களையும் உருவாக்கி கொடுத்தேன்.


அந்தவகையில், தினமுரசு வாரமலர் என்ற வாரப் பத்திரிகைக்கான ஒத்துழைப்பினையும் வழங்கியிருந்தேன். அதனை சிறப்பாக செயற்படுத்தியவர், தமிழ் மக்கள் மத்தியில் கருத்துருவாக்கம் செய்யுமளவிற்கு தினமுரசை மக்கள் மனங்களில் இடம்பிடிக்கச் செய்திருந்தார்.


தினமுரசின் வளர்ச்சி, தங்களுடைய பாஸிச நிலைப் பாடுகளுக்கு பாதகமானது என்பதை உணர்ந்தவர்களினால் அவர் சுட்டு வீழ்த்தப்பட்டு இப்பொழுது 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.


தோழர் ரமேஸின் நினைவுகளை மனதில் சுமந்து,.. அவரும் நானும், எம்மோடு கரம்கோர்த்த சக தோழர்களும் கண்ட கனவை நனவாக்குவதற்கான எமது பயணம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது" என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.