Header Ads



பொதுத்தேர்தல் 2024 யாருக்கு வாக்களிப்பது..? ஒரு தகுதிகாண் முறைமை


அன்புக்குரிய எமதருமை நாட்டின் வாக்காளப்பெருமக்களே, 


நாம் வெளிநாடுகளில் வாழும் இலங்கையைச்சேர்ந்த, கட்சி சார்பற்ற தொழில்நிபுணர் குழுமம் ஒன்றாவோம். அமைதியான, செல்வ வளம்மிக்க, நீதியான இலங்கை நாடு ஒன்றை நாம்  விரும்பி அதற்காக எமது பங்கைச்செலுத்த விளைகின்றோம்.


நம்மெல்லோருக்கும் தெரிந்தவாறு, சரித்திரத்தில் மிக முக்கியமான, நாட்டின் எதிர்காலத்தைத்தீர்மானிக்கும் ஒரு தருணத்தில் நாம் இன்று நிற்கிறோம். மாற்றத்திற்கான மக்கள் ஆணை அசைக்க முடியாத வகையில் திண்ணமாக பயணிக்கிறது.  அதே நேரத்தில் பல்லின, பன்மொழி, பல்மத நாட்டில் பன்முகத்தன்மை வாய்ந்த பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை தொடர்ந்தும் உறுதிப்படுத்த வேண்டிய தேவையும் எம்முன் எப்போதும் இல்லாத வகையில் இருக்கின்றது.


இதன்காரணமாக, ஊழலில் ஊறித்திளைத்த, சமூகங்களுக்கிடையில் பிரிவினையை ஊட்டி வளர்த்த, வினைத்திறன் அற்ற, முன்னாள் அரசியல் நிலையமைப்பை நாம்  நிராகரிக்கின்ற அதே வேளையில் எமது காத்திரமான பல்கட்சிப்பாராளுமன்ற அரசியல் கலாச்சாரத்தை பாதிப்படையாதவகையில் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்போகின்றோம் என்ற கேள்வியும் எம்முன் எழுகின்றது.


சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் கட்சிகளுக்கு எதிராகவும் பல விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. இவர்களுக்கென தனிப்பட்ட விசேடமான கொள்கைகள் கிடையாது; இவர்களுக்கென தனிப்பட்ட விசேடமான தேர்தல் விஞ்ஞாபனம் கிடையாது; வேறு கட்சிகளின் கொள்கைகளைப்பரப்பியே இவர்கள் சில மாவட்டங்களில் வாக்குக்கேட்கின்றனர்; நேரத்திற்கு நேரம் இவர்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுகின்றது; இவர்கள் தீர்த்துத்தருவதாகக் கூறுகின்ற பிரச்சினைகள் பல இவர்களாலேயே உருவாக்கப்பட்டவை; இவர்கள் இழக்கப்பட்டதாகக்கூறி, பெற்றுத்தருவதாகக் கூறுகின்ற சில உரிமைகள் இவர்களின் கடந்தகால திறமையீனம் காரணமாகவே இழக்கப்பட்டவை; இவர்கள் எதனையும் கடந்த கால்நூற்றாண்டில் சாதித்தது கிடையாது என்பன போன்றவை அந்த விமர்சனங்கள் ஆகும். எனினும், பல இழப்புகளை விலையாக கொடுத்து உருவாக்கப்பட்ட அந்த தனித்துவக் கட்சிகளை முற்றாக புறக்கணிக்க முடியாது எனும் கருத்தும் முன் வைக்கப்படுகிறது. 


இந்தத் தேர்தல் எவ்வளவு முக்கியமானது என்பது உங்களுக்கு தெரியும். இது எமது எதிர்காலம் பற்றியது. எமது பிள்ளைகள், எமது கனவுகள் மற்றும் நாம் கட்டி எழுப்ப முனையும் எமது தேசம் பற்றியது. சுயநலம் பிடித்த தலைவர்கள் எம்மை கட்டுப்படுத்த இனியும் விட முடியாது.


வேறுபடும் அடிப்படைக்கொள்கைகளைக் கொண்ட பல்வேறு கட்சிகளிலிருந்து மிகவும் பொருத்தமான வேட்பாளர்களை மட்டுமே தெரிவு செய்ய வேண்டிய கட்டாயம் உங்கள் முன் உள்ளது. இந்த சற்றுக்கடினமான, மயக்கமேற்படுத்தக்கூடிய பணிக்கு உதவும் வகையில் சில வழிகாட்டும் சிந்தனைகளையும் தெரிவுக்குப்பயன்படுத்தக்கூடிய ஒரு தகுதிகாண் முறைமையையும் வாக்காளர்களாகிய உங்களுக்கு வழங்க நாங்கள் விளைகின்றோம்.

அடிப்படைக் கோட்பாடுகள்:


நேர்மைக்கு முன்னுரிமை அளித்து ஊழலை நிராகரியுங்கள்

சமத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் கட்சிக்கு வாக்களியுங்கள்

பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் வாக்களியுங்கள்

தேசத்திற்கும் நீங்கள் சார்ந்த சமூகத்திற்குமுகாக வாக்களியுங்கள்


நாம் பிரேகரிக்கும் தகுதிகாண் முறைமை

முதற்கண், ஒவ்வொரு மாவட்டத்தையும் சேர்ந்த வாக்காளர்கள், ஒரு கட்சியை பின்வரும் கொள்கை விவகாரங்களில் அக்கட்சி பிரகடனப்படுத்தியிருக்கும் கொள்கையையும் அக்கட்சி இவ்விவகாரங்களில் கடந்த காலத்தில் நடந்து கொண்ட வகையையும் கருத்தில் கொண்டு வாக்களிப்பதற்காகத்தெரிவு செய்யுமாறு நாம் வேண்டுகிறோம்.


அந்த கொள்கை விவகாரங்களாவன:

1 ஊழல் பற்றிய அக்கட்சியின் கொள்கையும் கடந்தகால நடத்தையும்

2 அனைவருக்கும் சம உரிமை மற்றும் இனப்பிரச்சினை தீர்வு பற்றிய அக்கட்சியின் கொள்கையும் கடந்தகால நடத்தையும்

3 அக்கட்சியின் பொருளாதாரக் கொள்கையும் அதன் கடந்தகால சாதனைகளும்

4 உங்கள் பிரதேசம் சார்ந்த, உங்கள் சமூகம் சார்ந்த விவகாரங்கள் சம்பந்தமான அக்கட்சியின் கொள்கையும் கடந்தகால நடத்தையும்


நீங்கள் ஒவ்வொரு கட்சிக்கும் சம்பந்தப்பட்ட கொள்கை விவகாரத்திற்காக புள்ளிகளை வழங்கலாம். அவ்வாறு அதிகூடிய புள்ளியை பெறும் கட்சியை உங்கள் மதிப்பீட்டில் நீங்கள் தெரிவு செய்யலாம். அதன் பிற்பாடு அக்கட்சியின் மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இருந்து மிகச்சிறந்த மூன்று வேட்பாளர்களை பின்வரும் தகுதிகாண் அடிப்படையில் தெரிவு செய்யுங்கள்.


அதற்காக பின்வரும் வகையான கடந்தகால வரலாறு கொண்ட வேட்பாளர்களை முதலில் நிராகரியுங்கள்.


ஊழலில் ஊறித்திளைத்தவர்கள் - இதைத்தீர்மானிப்பதற்கு அரசியலுக்கு வரும்முன்னரும் வந்தபின்னும் அவர்களதும் அவர்களைச் சேர்ந்தவர்களதும் சொத்துக்களையும் செல்வங்களையும் ஒப்பிட்டுப்பாருங்கள். 


இனவாதத்தைக் கக்குபவர்கள் - இனவாதவாதத்தையே தங்களது ஒரே மூலதனமாகக் கொண்டவர்களை அடியோடு நிராகரியுங்கள்


தங்கள் மக்களுக்காக எதையுமே சாதிக்காத வினைத்திறன் அற்றவர்கள் - இந்த வேட்பாளர்கள் முன்பு அதிகாரப்பதவிகளில் இருந்தவர்களாயின் அந்தக்காலவேளையில் எதனை சாதித்தார்கள் என்பதை பாருங்கள். எதனையும் சாதிக்காதவர்களை நிராகரியுங்கள்


நேர்மையற்றவர்கள் - அடிக்கடி கட்சி மாறியவர்களையும் போலியான கல்வித்தகமைகளை கூறிக் கொள்பவர்களையும் பொய் பேசுவதையே வழக்கமாகக் கொண்டவர்களையும் நிராகரியுங்கள்.


இவ்வாறானவர்களை நிராகரித்ததன் பிற்பாடு எஞ்சியோரிலிருந்து மிகச்சிறந்த மூன்று வேட்பாளர்களை தெரிவு செய்யுங்கள். இதற்காக பின்வரும் தகைமைகளின்கள் அடிப்படையில் அவர்களை நீங்கள் மதிப்பிடலாம்

விவேகம் 

தலைமைத்துவத்திறன்

 நாட்டுக்கும் பிரதேசத்திற்குமான தூரப்பார்வை

நேர்மையும் தூய்மையும் 

கடந்தகால சாதனைகள் 

உள்ளூர் விவகாரங்கள் பற்றிய நல்லறிவு 

சமூக நல்லுறவு 

கல்வித்தகைமைகள்


இதிலும் புள்ளி அடிப்படையில் அவர்களை நீங்கள் மதிப்பிடலாம். நீங்கள் தெரிவு செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உங்களது பிரதிநிதிகளே அன்றி உங்களது எஜமானர்கள் அல்ல. உங்களது சொத்தான அரச நிதியில் இருந்தே அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. ஆகவே நாட்டுக்காக இதய சுத்தியுடனும் மாறாத உறுதிப்பாட்டுடனும் சேவை செய்யக்கூடிய, தொடர்ந்தும் வாக்காளர்களுடன் தொடர்பில் இருந்து  உண்மையான  பிரதிநிதித்துவத்தை  பேணக்கூடிய பிரதிநிதிகளை தெரிவு செய்யுங்கள். நாம் கனவு காணும் வளமான எதிர்காலத்தை ஒன்றாக நாம் கட்டமைப்போம்.


பாராளுமன்ற பிரதிநிதிகளைத்தெரிவு செய்யும் தகுதிகாண் முறைமை



No comments

Powered by Blogger.