Header Ads



மாணவர்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் - அவசர நிலை ஏற்பட்டால் 177 க்கு அழையுங்கள்


உயர்தரப் பரீட்சை தினங்களில் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாடுகளையும் செய்ய வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


இன்று (25) காலை 8.30 மணியளவில் நாடளாவிய ரீதியில் 2,312 நிலையங்களில் உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகியுள்ள நிலையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை மக்கள் விதியாக இல்லாமல் உணர்வுடன் செய்ய வேண்டுமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


"இந்தக் பிள்ளைகளுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதைத் தீர்க்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


ஒவ்வொரு  பிள்ளைகளும் நல்ல சூழ்நிலையில் இந்த பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.


தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். அந்த வகையில் எனக்கு அனைவரின் ஆதரவும் தேவை.


இந்தச் சமயங்களில் உங்கள் ஆதரவை அந்தக் பிள்ளைகளுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


மேலும், பரீட்சை நேரத்தில் இவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் எதையும் செய்யாதீர்கள்.


இது தொடர்பாக, காவல்துறையினருடன் பேசி, தேவையான திட்டத்தை தயாரித்துள்ளோம்,'' என்றார்.


அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இன்று காலை நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் நான்கு பரீட்சை பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.


எனுனும் கடற்படையும் இராணுவமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் சென்றதாக அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.


உயர்தரப் பரீட்சை மாணவர்களின் வாழ்க்கையில் முக்கியமான பரீட்சை என்பதால், டிசம்பர் 20 ஆம் திகதி வரை அந்தக் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறும் பரீட்சை ஆணையாளர் கேட்டுக்கொண்டார்.


ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 177 என்ற இலக்கத்திற்கு அழைப்பதோடு, பரீட்சை திணைக்களத்தின் 1911 என்ற இலக்கத்திற்கு அழைத்து பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.


இதேவேளை, பரீட்சை தொடர்பான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் பாடசாலை பரீட்சை அமைப்புக் கிளையின் 0112 785 922 / 0112 784 537 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்தார்.


இந்த வருடம் 333,185 பரீட்சார்த்திகள் கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.


No comments

Powered by Blogger.