நாம் வாக்களிக்கும் முஸ்லிம் அரசியல்வாதி, கொண்டிருக்க வேண்டிய 10 குணாதிசயங்கள்
அஷ்ஷெய்க் எம்.ஐ.எம் அன்வர் (ஸலபி⁄மதனி)
இலங்கை அரசியல் வரலாறு ஆரம்பித்த காலம் முதல் இலங்கை முஸ்லிம்களிடையே தோன்றிய ஆரம்ப கால அரசியல்வாதிகள் அனைவரும் பெரும்பான்மை கட்சிகளுடனேயே ஒன்றித்து செயல்பட்டதுடன் அவர்களால் வழங்கப்படும் சலுகைகளில் பூரண திருப்தியடைந்ததுடன் தனது சமூகத்தையும் ஏதோ ஒரு வகையில் திருப்திப்படுத்த முயன்றனர். அதில் வெற்றியும் பெற்றனர்.
கடந்த எழுபது வருட சுய நிர்ணய அரசியல் வரலாறு இவ்வாறே தொடர்ந்தது. இத்தகைய தருணத்திலேயே மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் இத்தகு முஸ்லிம் சமூகத்தின் அரசியல் போக்கை மாற்றி முஸ்லிம்களுக்கான தனித்துவ அடையாள அரசியல் கட்சியை முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரில் உருவாக்கினார்.
இன்று அந்த முஸ்லிம் அடையாள அரசியல் கட்சி வரலாற்று நிலைமாறுகையில் பல காங்கிரஸ்களாக உருமாறி எங்கே வந்து நிற்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் முஸ்லிம் எம்.பி ஒருவர் தான் ஆதரவு தெரிவித்த வேட்பாளருக்கான பிரசார மேடையில் குறித்த வேட்பாளரின் பெயரைச் சொல்லி ‘அவர் மாத்திரம் வெற்றி பெறும் பட்சத்தில் உங்கள் ஊருக்கு ஒரு புதிய அரசியல் கட்சி உதயமாகும் என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்’ என்று முழங்கினார். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஆதரவாளர்கள் ‘அல்லாஹு அக்பர் நாரே தக்பீர்’ என்ற முழக்கத்துடன் பதில் குரல் எழுப்பினர். இத்தனைக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் பிறப்பிடத்திலேயே அந்த சம்பவம் நடந்தது எனும் போதுதான் வேதனை இரட்டிப்பாகியது.
இத்தகைய பின்னணியில் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலின் சூடு ஆறுவதற்கு இடையில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான தபால் மூல வாக்குகள் நடைபெற்று முடிந்திருக்கின்றன. தேசிய அரசியலில் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வரலாற்று மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு உடனடுத்ததாக நடக்கின்ற பொதுத் தேர்தலில் முஸ்லிம் சமூகம் தனது பிரதிநிதித்துவத்தில், சமூகத்திற்கு உதவாத காலாவாதியான அரசியல் ஒழுங்கில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதா என சிந்திக்கவேண்டிய கட்டத்தில் உள்ளது.
கடந்த காலங்களில் இந்நாடு ஆட்சியாளர்களின் படுமோசமான நிர்வாக முறை மற்றும் ஊழல் மோசடிகள் போன்றவற்றினாலும், பொருத்தமற்றவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்தமை, தொடர்ச்சியாக குறிப்பிட்டவர்களை மூவின மக்களும் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்தமை ஆகியவற்றினாலும் தான் பொருளாதார ரீதியாக அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றது. கடன்படுகின்ற சதவீதமும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றது என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். கடந்த காலத்தில் பொதுவாக நாட்டு மக்களும் குறிப்பாக முஸ்லிம்களும் வாக்களிக்கும் போது எடுத்த தவறான நிலைப்பாடுகளால் இழந்தவற்றையும், பெறத்தவறியவற்றையும் மனதில் வைத்துக்கொண்டே இத்தேர்தலை பொறுப்புணர்வுடன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் பெரும்பான்மை மக்களும் பாராளுமன்றத்துக்கு புதியவர்களை அனுப்பவேண்டும் என்று சிந்திக்கின்றனர்.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னாள் எம்.பிக்களின் கால் நூற்றாண்டு கால உருப்படாத அரசியலால் மனம் வெறுத்துப்போயுள்ள முஸ்லிம் மக்களுக்கு முன்னாலும் தம்முடைய எம்.பிக்களை தெரிவு செய்யும் நடைமுறையை மறுசீரமைக்க வேண்டிய ஆன்மிக, தார்மிக பொறுப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த பாராளுமன்றங்களில் 20 வரையான முஸ்லிம் எம்.பிக்கள் பதவி வகித்தனர். இது வெளிப்படையாக பெரும் பலமாக பார்க்கப்பட்டது. இருப்பினும் முஸ்லிம்களுக்கு எதிராக அரச இயந்திரத்தின் முழு அனுசரணையோடு பல அநியாயங்கள், இனவாத நெருக்குவாரங்கள், கருத்தியல் ரீதியான போர்கள் பேரின சக்திகளால் முன்னெடுக்கபட்டபோது, இந்த மிகப்பெரிய பலம் சரியாக உபயோகிக்கப்பட்டதற்கான வரலாற்று ஆதாரங்கள் இல்லை. கடந்த காலத்தில் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்காத, முஸ்லிம்களுக்கு பாதகமான அரசியலமைப்பு திருத்தஙகள், கோவிட் ஜனாஸா எரிப்பு ஆகிய விவகாரங்களுக்கு முரட்டுத்தனமாக முட்டுக்கொடுத்த, சமூகப் பிரக்ஞையோடு கருமமாற்றாது தமது பதவிகளில் மாத்திரம் குறியாய் இருந்த அதன் மூலமாக சுய இலாபங்களை தேடிக்கொண்ட முன்னாள் முஸ்லிம் எம்.பிக்கள் மீண்டும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். முஸ்லிம் அரசியல் அணிகள் சார்பிலும், என்.பி.பி மற்றும் எஸ்.ஜே.பி உள்ளிட்ட பெரும்பான்மை கட்சிகள் சார்பிலும் பல புது முகங்கள் தேர்தலுக்காக வேண்டி களமிறங்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் பழைய முகங்களும் முகப்பூச்சி பூசிக்கொண்டு களம் காண வந்திருக்கின்றன.
கிழக்கு மாகாணத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் ஊருக்கு ஒரு எம்.பி என்ற கோஷத்தை முன்வைத்தே தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். அண்மையில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் தனது சொந்த ஊரில் தேர்தல் பிரசார மேடையில் பேசும்போது ‘இந்த ஊரின் பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற வேண்டியது உங்கள் அனைவர் மீதும் உள்ள பொறுப்பு’ என்று கூச்சலிடுகிறார். அதுவே பிறிதொரு ஊரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தொடர் ஒன்றில் உரையாற்றுகையில் அவர் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியின் பெயரைச் சொல்லி அந்தக் கட்சியால் மாத்திரமே இந்த மாவட்டத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் காப்பாற்றப்படும் எனக் கூக்குரல் எழுப்புகிறார். அதே போன்று ஒரு குறிப்பிட்ட வேட்பாளர் தமது ஊரின் வாக்குகள் பிற ஊருக்கு அளிக்கப்படுவது ஹராம் என்கிறார். ஆனால், அவரோ தனது வெற்றி வாய்ப்பை உறுதிசெய்வதற்காக அருகிலுள்ள ஊரில் நடைபெற்ற கூட்டமொன்றில் தனக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் ஆணை கோருகிறார். முஸ்லிம் சமூகத்தில் அரசியல் வியாபாரம் புரியும் மொத்த வியாபாரிகளாக இவர்கள் மாறியிருப்பது மாத்திரம் வெளிச்சமாகிறது.
இன்று முஸ்லிம் அரசியல்வாதிகள் விஷேடமாக கிழக்கு அரசியல்வாதிகள் முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை காப்பாற்றுங்கள் என்று கூறி மக்களிடம் மடிப் பிச்சை கேட்கும் நிலை வந்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் குறிப்பாக பெரும்பான்மை மக்கள் தூய அரசியல் கோட்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நாட்டில் மாபெரும் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளார்கள்.
கடந்த ஏழு தசாப்தகால இலங்கை அரசியல் வரலாறு நிலை மாறுகைக்கு வித்திட்ட இந்த தூய அரசியல் சித்தாந்தம் இம்முறை பாராளுமன்ற தேர்தலிலும் தொழிற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பின்னணியில் தமது அரசியல் காலத்தில் தூய அரசியல் செய்ததை மக்கள் முன் நிரூபிக்க முடியாத முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறையும் மக்களை அரசியல் ஏமாற்று வித்தைகளை பயன்படுத்தி முட்டாள்களாக்க முனைகின்றனர். ஆனால், இம்முறை அந்த வித்தைகள் பலிக்காது என்பதை மானசீகரீதியாக அவர்கள் உணர்ந்துள்ளனர்.
நாடு முழுவதும் தூய அரசியல் பாதையை தெரிவு செய்திருக்கும் இந்த தருணத்தில் இலங்கை முஸ்லிம்கள் தமது பாராளுமன்ற பிரதிநிதித்துவ தெரிவின் போது யாரை எமது பிரதிநிதியாக தெரிவு செய்யவேண்டும் என்பதை தீர்க்கமாக சிந்திக்க வேண்டியுள்ளது.
தாம் ஆதரவு வழங்கும் பாரம்பரிய அரசியல் கட்சியின் வேட்பாளராயினும் அல்லது இம்முறை புதிதாக களம் காணும் புது முக வேட்பாளராயினும் தமது தனிப்பட்ட, பிரதேச, கட்சிரீதியான குறுகிய மனோ நிலைகளிலிருந்து விடுபட்டு தமது வேட்பாளர்களிடத்தில் பின்வரும் குணாதிசயங்கள் உள்ளனவா? என்பது பற்றி மீள் வாசிப்பு செய்ய வேண்டியுள்ளது.
01. இலஞ்சம் ஊழலில் ஈடுபடாத, அது தொடர்பில் எந்தவித குற்றச்சாட்டுகளும் எதிர்கொள்ளாத சமூக அங்கீகாரம் பெற்ற நன்னடைத்தை உடையவராக இருத்தல் வேண்டும்.
02. சந்தர்ப்பம் பார்த்து குரங்கு மரம் விட்டு மரம் தாவுவதைப் போல அடிக்கடி கட்சி தாவாத, மாறாத ஒருவராக இருத்தல் வேண்டும்.
03. தமது அரசியல் வாழ்வில் குற்றவியல் சார்ந்த தவறொன்றுக்கு சிறைத்தண்டனை அனுபவிக்காதவராக, அது தொடர்பில் நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாகாதவராக இருத்தல் வேண்டும்.
04. நாட்டின் அபிவிருத்திக்கும், மக்களின் நல் வாழ்விற்கும் தடையாக அமையும் கடத்தல் (போதைப் பொருள்⁄தங்கம்⁄மண்⁄மரம்) உள்ளிட்ட விவகாரங்களில் ஈடுபடாதவராகவும், தமது பினாமிகளுக்கு அதற்கு உடந்தையாக இல்லாதவராகவும் இருத்தல் வேண்டும்.
05. இதற்கு முன்னர் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக வேண்டி அரிசி பேக்குகளோ, பண சுருக்குப் பைகளோ வழங்காதவராக இருத்தல் வேண்டும்.
06. பொதுவாக இலங்கை நாட்டுக்கெதிராகவும் குறிப்பாக இலங்கை முஸ்லிம்களுக்கெதிராகவும் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்காதவராகவும் இருத்தல் வேண்டும்.
07. தனது அரசியல் தவறுகளை மறைப்பதற்காக வேண்டி மார்க்கத்தையும், முஸ்லிம் சமூகத்தையும் பகடைக்காய்களாக பயன்படுத்தாத அவற்றை அற்ப கிரயங்களுக்காக விற்று பிழைப்பு நடத்தாத ஒருவராக இருத்தல் வேண்டும்.
08. பாராளுமன்ற சட்டங்கள் தொடர்பாகவும், நாட்டின் சட்ட திட்டங்கள் தொடர்பாகவும் அறிவு கொண்டவராகவும், தெளிவு உடையவராகவும் இருத்தல் வேண்டும். மேலதிகமாக, கல்வித் தகுதி உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
09.தேர்தல் காலங்களில் மாத்திரம் தமது பிரதேசத்திற்கு வருகை தருபவராகவும், மக்களுடன் கூடிக் கொஞ்சிக் குலாவுபவராகவும் இல்லாமல் இருத்தல் வேண்டும். ஏனைய காலங்களில் தலைநகரில் இருந்துகொண்டு சுகபோகம் அனுபவிக்காதவராகவும் இருத்தல் வேண்டும்.
10.எக்காரணத்தைக் கொண்டும் மக்களால் கிடைக்கும் அரசியல் அதிகாரத்தை தனிப்பட்ட நலன்களுக்காக துஷ்பிரயோகம் செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.
மேற்படி குணாதிசயங்கள்; இருப்பர்கள் மாத்திரமே தமது பிரதிநதிகளாக இருக்க தகுதியானவர்கள் என்பதை முஸ்லிம் சமூகம் உணர்ந்து கொள்ளவேண்டும். முஸ்லிம் பிரதிநிதிகள் என்போர் இஸ்லாத்தையும், முஸ்லிம் சமூகத்தையும் முன்வைத்து தமது சுய அரசியல் இலாபங்களை அடைந்து கொள்;ள முயலும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை குறிக்கவில்லை என்பதை முஸ்லிம் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். மாறாக, மேற்கண்ட தகுதிகளைக் கொண்ட தூய அரசியல் செய்யும் முஸ்லிம் அரசியல் புரியும் கனவான்களையே அது குறிக்கிறது என்பதை மனங்கொள்ள வேண்டும்.- Vidivelli
Post a Comment