NPP, UNP, JVP, சிலிண்டருக்கு வாக்களித்த அனைவரும் SJB க்கு வாக்களிக்க சஜித் வேண்டுகோள்
பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், தேங்காய் வாங்குவதற்கு கூட மக்கள் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாத்துறைக்கு ஆபத்து நேர்ந்துள்ளது. சுற்றுலா நமக்கு அன்னியச் செலாவணியைத் தரும் ஒன்றாக காணப்படுவதால், அது பாதிக்கப்படாது என்று பிரார்த்திக்கிறேன். இந்நிலையில் இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பலமாக விளங்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கும் கூட இது பாதிப்பை ஏறப்படுத்துகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மஹரகம நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி வரிச்சுமையை குறைப்பதாக உறுதியளித்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடிய போதிலும், அரசாங்கத்தால் வரிச்சுமையை குறைக்கவும், வரி சூத்திரத்தை மாற்றங்களை ஏற்படுத்தவும் முடியவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் உடன்பாடு இல்லாமல் வரி சூத்திரத்தை மாற்ற முடியாது என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர், ஐக்கிய மக்கள் சக்தி பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி, வரி சூத்திரத்தை மாற்றும் நடவடிக்கைக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் வரிச்சுமையை குறைக்க எதிர்பார்த்தோம். ஆனால் மக்கள் எமக்கு அதிகாரத்தை வழங்கவில்லை. எனவே இப் பொதுத் தேர்தலில் பாராளுமன்ற பெரும்பான்மை கிடைத்தால் வரிச்சுமையை குறைத்து, மக்கள் மீதான அழுத்தத்தை குறைக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை திருத்தப்படும் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2028 முதல் கடனை அடைப்போம் என்று IMF உடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். ஆனால் IMF எங்கள் அரசாங்கத்திடம் கடன் செலுத்துதல் காலத்தை 2033 முதல் செலுத்தினால் போதுமானதாக இருக்கும் என்று கூறியிருந்தது. நாமாகவே சென்று இந்த கால எல்லையை குறைத்துக் கொண்டோம். இது முன்னைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் எடுத்த தீர்மானமாகும். இந்தக் கடனை இன்னும் நான்கு வருடங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும். எனவே இன்னும் நான்கு வருடங்களில் மக்கள் மீண்டும் வரி செலுத்த வேண்டியுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சியின் காரணமாக மக்களிடம் பணப் புழக்கம் காணப்பட வேண்டும். ஆனால் முன்னைய அரசாங்கம் பொருளாதாரத்தை சுருக்கியது. இந்த சுருங்கிய பொருளாதாரத்தைக் கொண்டு எம்மால் கடன்களை செலுத்த முடியாது. எனவே இந்நாடு எதிர்கொள்ளும் கடுமையான சவால்களை ஐக்கிய மக்கள் சக்தியால் நிவர்த்திக்க முடியும். எனவே இவற்றை யதார்த்தமாக கையாளக் கூடிய பொருத்தமான அணியை வெற்றி பெறச் செய்யுமாறு சஜித் பிரேமதாச இங்கு வேண்டுகோள் விடுத்தார்.
எனவே ஐ.தே.க., ஜே.வி.பி, என்.பி.பி மற்றும் சிலிண்டருக்கு வாக்களித்த அனைவரும் நாடு குறித்து சிந்தித்து ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.
Post a Comment