Header Ads



NPP யின் தேசியப் பட்டியல் வேட்பாளர் M.N. இக்ராம் - யார் இவர்...?


சகோதரர் எம்.என்.இக்ராம் BA (Per), PGD in Education, M.Ed.(OUSL) அவர்கள் இம்முறை பாராளுமன்றத்திற்கு NPP சார்பாக தேசிய பட்டியல் அபேட்சகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.


தற்போது குருநாகல் சியம்பளாகஸ் கொட்டுவ மதீனா தேசிய பாடசாலையில் உயர்தர கலைப் பிரிவில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர் குருநாகல் மாவட்டம் பண்ணவ பிரதேசத்தை பிறப்பிடமாகவும் பண்ணவ முஸ்லிம் மத்திய கல்லூரி, கம்பளை ஸாஹிரா  கல்லூரி, கெகுனகொள்ள தேசிய பாடசாலை மற்றும் ஜாமியா நழீமியாவின் பழைய மாணவரும் ஆவார்.


இவர் ஜாமிஆ நளீமியாவின் பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பட்டத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் பட்டப் பின் டிப்ளோமா பட்டத்தையும் நிறைவு செய்துள்ளார். தொடர்ந்தும் தன் கல்விப்பயணத்தில் கல்வித்துறையிலேயே முதுமாணிப் பட்டத்தையும் நிறைவு செய்து அதே துறையில் MPhil பட்டப் பின்படிப்பையும் அதே பல்கலைக்கழகத்தில் தொடர்கின்றார்.


அவர் எழுத்தாளராக, கல்வியலாளராக, ஊடகவியலாளராக, பேச்சாளராக,

கலைஞராக,

ஊக்குவிப்புப் பேச்சாளராக (motivational speaker )விமர்சகராக, சமூக செயற்பாட்டாளராக, மொழிபெயர்ப்பாளராக என பன்முகத் தளங்களில் தனக்கான அடையாளத்தை தக்கவைத்து வருகிறார்.


கல்வித்துறையிலும் சமூக அரசியல் பரப்பிலும் சுமார் 20 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட சகோதரர் இக்ராம் அவர்கள் நீண்ட கால கற்பித்தல் அனுபவம் கொண்டவர்.


அவரது எழுத்துக்கும் பேச்சுக்கும் 

விரிந்த ஆழமான பன்மொழி வாசிப்பு களமமைத்து வருகிறது எனலாம்.


மீள்பார்வை பத்திரிகையின் துணை ஆசிரியராகப் பணியாற்றிய அவர், அதன் துணை வெளியீடான வைகறை சஞ்சிகையின் ஆசிரியராகவும் கடமையாற்றினார். அதேபோல் குருநாகல் குரீகொட்டுவ ஹாதியா இஸ்லாமிய பெண்கள் கலாநிலையத்தில் விரிவுரையாளராகவும், உதவி அதிபராகவும் அதன் பிறகு முகாமைத்துவப் பிரதிநிதியாகவும் நீண்ட காலம் பணியாற்றினார். அத்துடன் திஹாரி பாதிஹ் உயர் கல்வி நிறுவனத்திலும் விரிவுரையாளராக பணியாற்றிய நீண்ட அனுபவம் பெற்றவர்.


கலைத்திட்ட அபிவிருத்தி துறையிலும் ஈடுபாடு கொண்ட அவர் கல்வி அமைச்சோடு இணைந்து தேசிய கலைத்திட்டத்துக்கு அமைய சமயப் பாட துணைக் கலைத்திட்ட உருவாக்கத்தில் வளவாளராக பணியாற்றியுள்ளார்.


அத்தோடு இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தோடு இணைந்து அல் ஆலிம் தேசிய பரீட்சை மதிப்பீட்டாளராகவும் பணியாற்றி இருக்கின்றார் . 


இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் உத்தியோகபூர்வ கலைஞராக  தெரிவு செய்யப்பட்ட இவர் கலை, ஊடகத்துறையிலும் கடமை ஆற்றி வருகின்றார்.


அத்தோடு கல்விப் புலத்தில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் master teacher ஆக மேற்பார்வை பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.


இப்படி தன்னை பல்துறை யிலும் இற்றைப் படுத்திக் கொண்டே கல்வித் தளத்தின் சகல தரப்புகளோடும் இணைந்து சேவைகளை வழங்கி வரும் நிலையில் சம தளத்தில் அரசியல் சமூக செயற்பாடுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபடுகின்றார். மாற்று அரசியல் தளத்தில் முனைப்புடன் பயணித்து வருகின்றார்.


கடந்த காலங்களில் இலங்கையின் பல முற்போக்கு சிவில் சமூக நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றி சமூகப் பணியில் பழுத்த அனுபவத்தைப் பெற்றவர்.


தேசம், சமூகம் பற்றிய விழிப்புணர்வோடு பல தளங்களிலும் சமூகத்தை ஊடறுத்து அதன் விமோசனத்திற்காக குரல் எழுப்புகின்ற பணியை ஆற்றி வருகின்ற அவர், கல்வித்துறை சார்ந்து தன்னை முழுமையாக இற்றைப் படுத்திக் கொள்வதற்காக எண்ணற்ற பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்திருப்பதோடு, வளவாளராக பல பாடசாலைகளிலும் சமூக நிறுவனங்களிலும் நிகழ்ச்சிகளை நடாத்தி அனுபவம் பெற்றவர்.


அதேபோல் இவர் ஆய்வுத் துறையிலும் ஈடுபாடு கொண்டவர். இவரது ஆய்வுப் பங்களிப்புகளாக

1- Content analysis on the concept of democracy in the civic education lesson of the intermediate curriculum in Srilankan Government

School. (Submitted @ symposium held 12.12.2019 in SEUS)


2.Multiple intelligence it’s Background & Applications. (Published inam International E- journal of Tamil Studies)


3.School Students Remote Learning in the time of COVID -19 Pandemic: A Srilankan Perspective (Submitted for OURS 2020 – OUSL

என்பவற்றைக் குறிப்பிடலாம்.


இது தவிர இன்னும் பல கட்டுரைகளையும் மொழிபெயர்ப்பு ஆக்கங்களையும் பல்துறை சார்ந்து கடந்த இருபது வருடங்களாக எழுதி வருகின்றார். 


சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்பதற்கிணங்க பல மொழிபெயர்ப்பு நூல்களையும், நூல்களுக்கான பங்களிப்புக்களையும் வழங்கியுள்ளார்.


அந்த வகையில் எழுத்து பேச்சு ஆய்வு சமூக ஈடுபாடு என சகல துறையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு,  தனது பன்மொழியாற்றலை பயன்படுத்தி அரசியல் அறிவையும் விரிவாக்கி சமூக அரசியல் செயற்பாட்டாளராக இலங்கையின் அனைத்து பிரதேசங்களுடனும் சமூகங்களுடனும் தொடர்பு பட்டு சமூக அரசியல் களப்பணியாற்றுவதுடன் 

மாற்று அரசியல் சக்திகளோடு இணைந்து பொதுப்புள்ளியில் செயற்படுகின்ற நபராக தொடர்ந்தும் தன்னை அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தி வருகிறார். 


இந்த வகையில் 2018 களில் தேசிய மக்கள் சக்தியின் உருவாக்கத்தில் அதன் ஆரம்பம் முதலே பங்காற்றியவர். தற்போது அதன் தேசிய இயக்குனர் சபை (Steering Committee) உறுப்பினராகவும், தேசிய நிறைவேற்றுக் குழு (National Executive committee) உறுப்பினராகவும் பணியாற்றுவதுடன் குருநாகல் மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் செயற்படுகின்றார்.


NPP யின் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்தில் நுழைவதற்கான வாய்ப்பை பெற்றுள்ள அவரது  சமூக அரசியற் பணிகள் மூலம் இந்த தேசமும் சமூகமும் நிறைவான பயனைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.


அதற்கு இறைவன் அருள் புரிய வேண்டும்


M.M.A.Bisthamy

13/10/2024

No comments

Powered by Blogger.