சின்வார் அங்கிருந்தது எமக்குத் தெரியாது - முதலில் அவரது விரலை வெட்டினோம், பின் உடலை இஸ்ரேலுக்கு கொண்டு வந்தோம்
புதன்கிழமையன்று (16) ரஃபா நகரில் அமைந்துள்ள தல்-அல்-சுல்தான் பகுதியில் 828வது பிஸ்லாமக் (Bislamach) படையணியினர் ரோந்து மேற்கொண்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
அப்பகுதியில் ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த மூவரின் இருப்பிடம் அடையாளம் காணப்பட்டு, அவர்களுடன் இஸ்ரேல் துருப்புகள் சண்டையிட்டுள்ளன. இதில், அவர்கள் மூவரும் கொல்லப்பட்டனர்.
அந்த நேரம் வரை குறிப்பிடத்தக்க மோதலாக இது கருதப்படவில்லை. மேலும், வியாழக்கிழமை காலை வரை இஸ்ரேலிய படையினர் அந்தப் பகுதிக்கு மீண்டும் செல்லவில்லை.
இந்தச் சண்டையில் இறந்தவர்கள் குறித்து பரிசோதனை செய்யும் போதுதான், அங்கிருந்த ஒரு சடலம், நம்ப முடியாத வகையில் ஹமாஸ் தலைவரின் தோற்றத்தை ஒத்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
திடீர் தாக்குதல் நிகழலாம் என்ற சந்தேகத்தால், அச்சடலம் அங்கேயே விடப்பட்டு, விரல் மட்டும் அகற்றப்பட்டு பரிசோதனைக்காக இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டது.
பின்னர் அப்பகுதி பாதுகாப்பானது எனத் தெரிய வந்ததை அடுத்து, அங்கிருந்து அந்தச் சடலம் இஸ்ரேலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, “அவர் (யாஹ்யா சின்வார்) அங்கிருப்பார் என்பது எங்கள் படைகளுக்குத் தெரியாது, ஆனாலும் நாங்கள் தாக்குதலைத் தொடர்ந்தோம்” என்றார்.
அந்தப் பகுதியில் மூன்று நபர்கள் அங்கும் இங்கும் ஓடியதாகவும், தங்கள் படைகள் அவர்களைக் கண்டறிந்து தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் மூவரும் பிரிந்து சென்றதாகவும் கூறினார்.
சின்வார் என அடையாளம் காணப்பட்ட நபர், “தனியாக ஒரு கட்டடத்திற்குள் ஓடினார்” என்றும் ட்ரோன் மூலம் அவரது இருப்பிடம் அடையாளம் காணப்பட்டு அவர் கொல்லப்பட்டதாகவும் டேனியல் ஹகாரி தெரிவித்தார். BBC
Post a Comment