ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதிகள் புஸ்வாணமாகி விட்டன - சஜித்
தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டார். VAT வரி, நேரடி மற்றும் மறைமுக வரிகளைப் குறைப்போம் என்றார், ஆனால் IMF பேச்சுவார்த்தைகள் கூட தோல்வியடைந்து வரிகளை குறைக்க முடியாதுபோயுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி, பொதுத் தேர்தலுக்கு முன்னரே எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை எட்டியது. எனவே, நேரடி வரி மற்றும் மறைமுக வரிகளை எம்மால் குறைக்க முடியும். VAT வரி, உழைக்கும் போது செலுத்தும் வரி முதலியவற்றைக் குறைக்க அரசாங்கத்தால் முடியாவிட்டாலும், ஐக்கிய மக்கள் சக்திக்கு இந்த வரிகளை குறைக்கும் இயலுமை காணப்படுகிறது. பாராளுமன்ற அதிகாரம் எமக்கு கிடைக்கும் பட்சத்தில் முன்னாள் ஜனாதிபதியினால் கைச்சாத்திடப்பட்ட மக்கள் விரோத சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டு, மக்கள் சார் உடன்படிக்கையை மேற்கொள்வோம் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியில் நேற்று நடந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2033 ஆம் ஆண்டிலிருந்து கடனை செலுத்த சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்த போதிலும், கடனை 2028 முதல் அதாவது 4 ஆண்டுகளில் செலுத்துவதற்கான இணக்கப்பாட்டை முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் விருப்பம் தெரிவித்தது. இவ்வளவு மந்தமான, வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதாரத்தைக் கொண்ட நாடு நான்கு வருடங்களில் கடனை அடைக்க முடியாது. நான்கு வருடங்களில் கடனை அடைப்பதற்கு விரைவான பொருளாதார வளர்ச்சி அவசியம் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இப்படியே தொடர்ந்தால், 2028 இன்னும் கடினமாக மாறி இதைவிடவும் வங்குரோத்தடைவோம். வரிச்சுமையைக் குறைக்கும் புதிய சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை எட்ட முடியும் என்பதால், அதற்கான சந்தர்ப்பமும் ஏதுவான வேலைத்திட்டமும் எம்மிடம் காணப்படுவதால் பாராளுமன்ற பெரும்பான்மையை ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்குமாறு சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.
இன்று, வரிசையில் நிற்கும் காலம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. பொருட்களின் விலை அதிகரித்து, பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்ப்பட்டு, தேங்காய்க்கும் கூட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. மக்கள் மத்தியில் அதிருப்தியின் அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்த பாதையை வெற்றிப் பாதையாக மாற்றியமைக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கிறது என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
Post a Comment