Header Ads



கை விடப்பட்டாரா ரஞ்சன் ..?


முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, தேசிய மக்கள் சக்தியினால் கைவிடப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான ரஞ்சன் ராமநாயக்க, நீதிமன்ற அவமதிப்புக்குற்றச்சாட்டு காரணமாக நாடாளுமன்ற பதவியை இழந்து, நான்கு வருட சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார்.


எனினும் ரணில் விக்ரமசிங்க கடந்த 2022ஆம் ஆண்டு ஜனாதிபதியானவுடன் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.


எனினும் நீதிமன்றத்தினால் ஏழு வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்கவின் சிவில் உரிமையை மீண்டும் கிடைக்கவில்லை.


அதனை மீளப் பெற்றுக் கொடுத்து ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மீண்டும் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள வழி செய்து கொடுப்பதாக ரணில் விக்ரமசிங்க வாக்குறுதி அளித்திருந்த  நிலையில், ரஞ்சன் ராமநாயக்க விடுதலையாகி சில வாரங்களுக்குள்ளாகவே தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளராக மாறிப் போயிருந்தார்.


இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அநுரகுமார திசாநாயக்க தனக்கு பூரண பொதுமன்னிப்பு வழங்கி இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்குவார் என்று ரஞ்சன் ராமநாயக்க உறுதியாக நம்பியிருந்தார்.


எனினும் ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பாக முழுமையான பொதுமன்னிப்பு வழங்கவோ, அவரை தேசிய மக்கள் சக்தி சார்பில் வேட்பாளராக களமிறக்கவோ ஜனாதிபதி அனுரகுமார தரப்பு முன்வரவில்லை.


இதன் காரணமாக ரஞ்சன் ராமநாயக்க கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிய வந்துள்ளது


முன்னதாக சிங்கள சினிமாவின் பிரபல நடிகர் கமல் அத்தரஆரச்சியும் தேசிய மக்கள் சக்தியில் வேட்பாளராக களமிறங்க எதிர்பார்த்திருந்த நிலையில் அவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. TW

No comments

Powered by Blogger.