Header Ads



என்னைக் கைது செய்வது பற்றி, நேற்றிரவு உயர் மட்டத்தினர் கலந்துரையாடியுள்ளனர்


ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை அரசாங்கம் வெளியிடாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை தாம் அவற்றைப் பகிரங்கப்படுத்தவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 


இன்றைய தினம் (16) விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தி, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 


ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான செனல் 4 அறிக்கை மற்றும் குறித்த தாக்குதல் தொடர்பில் புலனாய்வு அமைப்புகள் செயற்பட்ட விதம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் பக்கங்கள் காணாமல் போனமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் அண்மையில் அறிவித்தது. 


எனினும், அந்த அறிக்கைகளின் பக்கங்கள் காணாமல் போகவில்லை எனவும் அரசாங்கத்திடமுள்ள அந்த அறிக்கைகளை 7 நாட்களுக்குள் வெளியிடாவிட்டால் தாம் அவற்றைப் பகிரங்கப்படுத்துவதாகவும் உதய கம்மன்பில குறிப்பிட்டிருந்தார்.


இதனையடுத்து, உதய கம்மன்பிலவிடம் அவ்வாறான அறிக்கைகள் இருப்பின் அதனை 3 நாட்களுக்குள் வெளியிடுமாறும் அமைச்சர் விஜித ஹேரத் நேற்று (15) சவால் விடுத்திருந்தார். 


அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்றைய தினம் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். 


அதன்போது, குறித்த அறிக்கைகளை வெளியிடுவதாக உறுதியளித்துள்ளமையால் தாம் அதனை ஒருபோதும் அரசாங்கத்திடம் கையளிக்கப் போவதில்லை என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 


அதேநேரம் அரசாங்கம் அந்த அறிக்கைகளை 7 நாட்களில் வெளியிடாத பட்சத்தில் தாம் அதனை வெளியிடுவதாகவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 


குறித்த அறிக்கைகளின் பின் இணைப்புகளில் தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய விடயங்கள் காணப்படுகின்றமையினால் விசாரணைக் குழுவின் பரிந்துரைக்கமைய அவற்றை வெளியிடமாட்டேன். 


எனவே, ஜனாதிபதி காரியாலயத்திலிருந்து இவ்வாறான தகவல்களை வெளியிடுபவர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். 


அரச இரகசிய சட்ட ஏற்பாடுகளுக்கமையவோ அல்லது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழோ என்னைக் கைது செய்வதற்கான இயலுமைகள் குறித்தும் நேற்றிரவு அரசாங்கத்தின் உயர் மட்டத்தினர் கலந்துரையாடியுள்ளனர். 


குறித்த விசாரணை அறிக்கையை வெளியிடாமல் வைத்திருப்பது பாரிய குற்றம் என அமைச்சர் விஜித ஹேரத் கூறினார். 


இந்த அறிக்கைகள் கடந்த 10 ஆம் திகதியே எனக்குக் கிடைக்கப்பெற்றன. 


அந்த அறிக்கைகள் கிடைத்து 4 நாட்களுக்குள் அது குறித்து நான் அறிவித்தேன். 


எந்த அச்சுறுத்தல் வந்தாலும், மக்களுக்கு உண்மையை அறிவிப்பதிலிருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. 


எனவே, அரசாங்கம் குறித்த அறிக்கைகளை வெளியிடாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை நிச்சயமாக அதனைத் தாம் பகிரங்கப்படுத்துவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.