Header Ads



அழைப்புகள் வருமாயின், அது குறித்து நிச்சயம் பரிசீலிக்கப்படும் - அமீர் அலி


பாராளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அதிகப்படியான ஆசனங்களை பெற்று பிரதமராக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்புடனே தாம் அரசியலில் களமிறங்கியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் சட்டத்தரணியுமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.


நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே எம்.எஸ்.எஸ்.அமீர் அலி இதனை தெரிவித்தார்.


இந்த நேர்காணலின் முழு வடிவம் பின்வருமாறு,


கேள்வி: நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் உங்களுடைய கட்சி ஆதரித்த வேட்பாளர் வெற்றிபெறவில்லை. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படும் திட்டங்கள் உள்ளனவா?


ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையிலேயே அவருக்கு ஆதரவு வழங்கினோம். அவர், கடந்த காலங்களில் பெற்றுகொண்ட வாக்குகளின் அடிப்படையில், இந் நாட்டுக்கு ஜனாதிபதி என்கின்ற அந்தஸ்தை சஜித் பிரேமதாசவால் பெற்றுக்கொள்ள முடியும் என்கின்ற ஒரு வேலைத் திட்டத்தின் கீழ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அவரை ஆதரித்தது. துரதிர்ஷ்டவசமாக மக்களின் தீர்ப்பால் அவர் தெரிவு செய்யப்படவில்லை.


எக் கட்சியாக இருந்தாலும் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாது என்ற எதிர்பார்ப்பு தற்போதுள்ளது.


தேர்தலின் பின்னர், இந் நாட்டிலுள்ள அனைத்து பெரும்பான்மை, சிறுபான்மை கட்சிகள்கூட நாட்டு நலன் என்கின்ற விடயத்திலேயே இணையவுள்ளன. அது நாட்டுக்கு நல்லதாகவும் சமூகங்களுக்கிடையிலான ஒரு ஐக்கியத்தையும், பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பொருத்தமானதாகவும் இருக்கும் என நான் நினைக்கின்றேன்.


அதனடிப்படையிலேயே, நாட்டு நலன் கருதி, எமது கட்சியின் தீர்மானத்துக்கமைய, ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து தீர்மானங்கள் எடுக்கப்படும்.


விசேடமாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, இம்முறை பாராளுமன்ற தேர்தலில், அதிகப்படியான ஆசனங்களை பெற்று பிரதமராக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்புடனே நாம் அனைவரும் இந் நாட்டின் அரசியலில் களமிறங்கியுள்ளோம்.


இது நடைபெறாமல்போனால், நான் முன்னரே கூறியதைப்போன்று நாட்டு நலன் என்ற அடிப்படையில், கட்சிகளோடு இணைந்து எடுக்கப்படும் தீர்மானத்துக்கமைய, அழைப்புகள் வருமாயின், அது குறித்து நிச்சயம் பரிசீலிக்கப்படும்


கேள்வி : பாராளுமன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி அதிகளவான ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைக்குமாயின் உங்களுடைய நிலைப்பாடு என்ன?


பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு அதிக ஆசனங்கள் கிடைக்கும் என்பதும், அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என்பதும் எதிர்பார்ப்புதான். அனைத்து கட்சிகளும் எதிர்பார்க்கின்ற விடயமே இது.


இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்கள் பெற்று, அவர்கள் ஆட்சியமைப்பாளர்களாயின், நிச்சயம் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக அமர்ந்து அவர்களுக்கும் வழிகாட்டி, மக்களுக்கு வழங்கப்பட்ட ஆணைகளை நிறைவேற்றுவதற்கான வேலைத்திட்டங்களை எம்மால் செய்ய முடியும். முக்கியமாக, சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களும், ‘மாற்றம் வேண்டும்’ என்று பரிபூரணமாக நம்புகின்றார்கள். அதனடிப்படையிலே எமது கட்சிக்குள் செய்ய வேண்டிய மாற்றங்களையும் செய்து, சிறந்த எதிர்க்கட்சியாக பொறுப்பு வகித்து, எமது பங்களிப்பை சிறப்பாக செய்ய முடியும் என நான் நம்புகிறேன்.


கேள்வி : மட்டக்களப்பில், உங்களது கட்சி தனித்து போட்டியிடாமல், எதற்காக ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது?


மட்டக்களப்பு மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இதற்கு முன்னர் தேசிய கட்சிகளோடு இணைந்துதான் போட்டியிட்டு வந்திருக்கின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்து நின்று போட்டியிட்டது கிடையாது.


கடந்த காலங்களில், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணாமலை, வன்னி மாவட்டங்களில் எவ்வாறு தனித்தும் சேர்ந்தும் செயற்பட்டு தேர்தல்களுக்கு முகம் கொடுத்தோமோ, அது போன்றுதான் இம்முறையும் அம்பாறை மாவட்டத்தில் தனித்தும் மட்டக்களப்பு, வன்னி திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இணைந்தும், மொத்தமாக எட்டு மாவட்டங்களில் தேர்தலில் போட்டியிடுகின்றோம். மேலும், கடந்த காலத்தில் எமது கட்சி தேசிய கட்சிகளுடன் இணைந்து எவ்வாறுபோட்டியிட்டதோ அவ்வாறே இம்முறையும் இணைந்து போட்டியிடுகின்றது.


கேள்வி : பாராளுமன்றத் தேர்தலில், உங்களுடைய அகில இலங்கை மக்கள் காங்கிரசும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து போட்டியிட முடியாமல் போனது ஏன் ?


இது ஒரு நல்ல கேள்விதான். ஆனால் இந் நாட்டில் சிறுபான்மையினருக்குள் ஏற்பட்டிருக்கின்ற பிளவுகளும், பிரிவுகளும் ஏதோ ஒரு வகையில் தவிர்க்க முடியாமல்போன விடயமாகும். என்னுடைய தனிப்பட்ட எதிர்பார்ப்பு என்பது வட, கிழக்கிலே இருக்கின்ற தமிழ் உறவுகளும், முஸ்லிம் உறவுகளும், ஒன்றிணைந்து ஒரு கட்சிப் பார்வையோடு செயற்படுகின்ற அமைப்பு எதிர்காலத்தில் வரவேண்டும் என்பதுதான்.


ஒவ்வொரு தேர்தலிலும், இவ்விரு கட்சிகளும் வெவ்வேறு கொள்கைகளோடு செயற்படுபவை. எவ்வாறு தமிழ் கட்சிகள் பிரிந்து நின்று செயற்படுகின்றனவோ, அவ்வாறுதான் முஸ்லிம்களுக்குள்ளும் இந்த பிரச்சினை ஆழமாக வேரூன்றி காணப்படுகின்றது.


இந்த நிலைமைகள் எதிர்காலத்தில் மாற்றப்படவேண்டும். இந்த விடயத்திலும் மாற்றம் “சிஸ்டம் சேஞ்ச்” வரவேண்டும் என நான் உறுதியாக நம்புகின்றேன்.


ஆனால், எமது கட்சி இம்முறை தீர்க்கமான முடிவை எடுத்திருந்தது. கடந்த பாராளுமன்றத்திலே 20 ஆவது அரசியலமைப்பு சட்டத்தைக்கொண்டு வந்தபோது யார் யாரெல்லாம் அதனை ஆதரித்தார்களோ, அவர்களில் ஒரு சிலரை கட்சியிலிருந்து நீக்கி, நீதிமன்றத்துக்கு சென்றோம்.


ஆனால், இருபதாவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள், எமது கட்சியினூடாக மீண்டும் தேர்தலிலே களமிறங்குவதற்கான வாய்ப்பை வழங்காதிருக்க எமது கட்சி ஏகமனதாக தீர்மானித்தது.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தயார் என்று எனது கட்சியின் தலைவர் ரிசாட் பதியுதீன், தெளிவாக கூறியிருந்தார். ஆனால், இருபதாவது திருத்தச் சட்டத்துக்கு வாக்களித்தவர்கள் எவரும் அதற்குள் வரக்கூடாது என்கின்ற கண்டிப்பான ஒரு விடயத்தை அவர் குறிப்பிட்டிருந்தார்.


அதனாலேயே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால் அதைச் செய்ய முடியாமல் போனது.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, இந்த தீர்மானத்தில் மிக தெளிவாக செயற்பட்டது.


அதாவது, இந்த நாட்டுக்கு மாற்றத்தையும் அரசியலில் புதிய கலாசாரத்தையும் என்ன தவறுகள் செய்தாலும் அதே தலைகளே மீண்டும் மீண்டும் இம் மக்களுக்கு தலைவராக வேண்டும் என்ற மனநிலையிலிருந்து மாறவேண்டும் என்ற திடமான தீர்மானத்தில் இருந்ததனால்தான் இந்த வேலைத் திட்டம் சாத்தியமற்றுப் போனது.


கேள்வி : உங்களுடைய கட்சியைச் சேர்ந்த பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறிவிட்டார்களே இது கட்சிக்கு இழப்பாக அமையாதா?


அவர்கள் வெளியேறினார்கள் என்பதிலும் பார்க்க படிப்படியாக வெளியேற்றப்பட்டார்கள் என்பதுதான் வாஸ்தவம். எமது கட்சி அந்த தீர்மானங்களை எடுக்கும் நேரத்தில் எனது கட்சியினுடைய தலைவர் இந் நாட்டின் கடந்த கால ஆட்சியாளர்களினால் மிகவும் துன்புறுத்தப்பட்டார். அவருக்கெதிராக பல வழக்குகள் பதியப்பட்டன. இக் காலகட்டத்திலேயே கட்சியிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளித்தார்கள். முக்கியமாக ஜனாஸா எரிக்கும்போது, எமது சமூகத்தின் இறந்த உடலை அடக்குவதைக் கூட அவர்களால் சாதிக்க முடியாமற்போனது.


அவ்வாறான சர்ச்சைக்குரிய நபர்கள் துடைத்தெறியப்பட்டு, புதிய முகங்களுக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என கட்சி சார்ந்த எங்களுடைய வாக்காளர்களிடத்தில் நாம் வேண்டிக்கொள்கின்றோம். முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் கட்சியினுடைய அந்தஸ்தும் மரியாதையும் தற்போது உயர்ந்திருக்கிறது


கேள்வி : நீங்கள் கடந்த காலங்களில் அமைச்சராக செயற்பட்டுள்ளீர்கள் . ஆனாலும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்கள் மத்தியில் இன்னும் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமலுள்ளன. அதேபோன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பாக உங்களுடைய நிலைப்பாடு என்ன?


மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து சமூகத்துக்கும் இருப்பது போன்று முஸ்லிம் சமூகத்துக்கும் பிரச்சினைகள் இருக்கிறன்றன என்பது உண்மை.


நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, மிக நீண்ட நாட்களை சமூக நல்லிணக்கத்துக்காக செயற்பட்டுள்ளேன. மட்டக்களப்பு மாவட்டத்தில் உதாரணமாக எல்லை ரீதியான தீர்மானங்களும், காணி ரீதியான பிரச்சினைகளும் தான் இந்த மாவட்டத்திலே நீறு பூத்த நெருப்பாக இருக்கிற பிரச்சினையாகும். இது தொடர்பில் கடந்த காலத்தில் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் மிகவும் தெளிவாக நான் கதைத்திருக்கிறேன். இம் மாவட்டத்தில் உள்ள சகல கட்சிகளையும் சார்ந்த அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து, ஒரு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்படவேண்டிய விடயமே அன்றி ஒப்பாரி வைத்து இதனை சாதிக்க முடியாது என்பதுதான் எனது நிலைப்பாடு.


மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்ற பொழுது தமிழர்களுக்கு அது புது பிரச்சினையாக வந்து விடவும் முடியாது. அல்லது தமிழர்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றபோது முஸ்லிம்களுக்கு அது புது பிரச்சினையாக வந்து விடவும் கூடாது. மாவட்டத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பொது முடிவுக்கு வருவதாலேயே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரச்சினை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகின்றது. விரும்பியோ விரும்பாமலோ இந்த இரண்டு சமூகங்களும் இங்குதான் வாழ வேண்டியுள்ளது. இங்குதான் மரணிக்க வேண்டியுள்ளது. எனவே அந்தந்த பிரதேசத்திலுள்ள அரசியல் தலைவர்களுக்கும் ஒரு தார்மீக பொறுப்பு உள்ளது.


நேர்கண்டவர் : வ.சக்திவேல்

No comments

Powered by Blogger.