Header Ads



யா அல்லாஹ் நேர்வழி காட்டு


- Nooruddin -


"அவளுடைய கல்லறைக்கு அடுத்துள்ள இடம் எனக்கு வேண்டும். என்ன விலை?" என்று கேட்டார் அந்த அமெரிக்கர்.


அடக்கம் செய்யப்பட்ட பெண்மணியின் மாஜி கணவர் அவர்.  தம் முன்னாள் மனைவியின் கல்லறையை அடுத்து தனக்குக் கல்லறை வேண்டும் என்று கேட்டது ஒரு வியப்பு. அவரது கேள்விக்கு இமாம் அளித்த பதிலைக் கேட்டு அவர் அதன் விலையைக் கொடுத்தது மற்றொரு வியப்பு. அவ்வளவு ஏன்? அந்த முழு நிகழ்வுமே யாரும் எதிர்பாராத ஒன்று.


அமெரிக்காவின் ஒக்கலஹோமா நகரில் முஸ்லிம்கள் தங்களுக்கென மயான இடம் வாங்கி அதற்கான அரசாங்க அனுமதி சம்பிரதாயங்களை முடிக்க ஐந்து ஆண்டுகள் போராடி வந்தனர். இறுதியாக அதற்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து அவ்விடம் முஸ்லிம்களின் பயன்பாட்டிற்கு ஒரு திங்கள்கிழமை முறைப்படி வந்து சேர்ந்தது.


அதற்கு அடுத்தடுத்த நாள் மஸ்ஜிதிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு. பெண் ஒருவர் இமாமிடம், தன் தாய் இறந்து விட்டதாகவும் அவரை அடக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.


மரணமடைந்த பெண்மணி சீனாவைச் சேர்ந்தவர். அமெரிக்கக் கணவருடன் வாழ்ந்து வந்தவர். பிறகு ஒரு கட்டத்தில் அக்கணவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட, இவர் அவருடனான திருமண உறவை முடித்துக்கொண்டார். கணவர் வசம் பிள்ளைகள் சென்றுவிட, அப்பெண்மணி சீனா திரும்பிவிட்டார். ஆனாலும் பிள்ளைகளுடன் தொடர்பு இருந்து வந்தது.


மகள் தன் தாயாரைப் பார்க்க ஆவல்கொண்டு அவரை அமெரிக்கா வரவழைத்திருக்கிறார். வந்து சேர்ந்த அத்தாய், Yellow Pagesஇலிருந்து அந்நகரின் மஸ்ஜித் விலாசமுள்ள பக்கத்தைத் தேடிக் கிழித்து தம் மகளிடம் அளித்து, 'எனக்கு இங்கு ஏதேனும் ஆகிவிட்டால் இவர்களை தொடர்பு கொள்ளவும்' என்று தெரிவித்திருக்கிறார்.


ஏதேனும் உள்ளுணர்வு? அல்லது முஸ்லிம்களுக்கு முதன்மையாய் இருக்க வேண்டிய மரண எதிர்பார்ப்பு? எதுவென்றுத் தெரியவில்லை. காகிதத்தை அளித்தார். மகளும் வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டார்.  


அடுத்த ஓரிரு நாளில் தாயார் உறக்கத்தில் மரணமடைந்தார். படைத்தவனிடம் மீண்டார்.


ஐந்தாண்டுகளுக்குப் பிறகு முஸ்லிம்கள் கைவசமான மயான நிலத்திற்கு இப்படியாக முதல் மரணச் செய்தி வந்து சேர்ந்திருக்கிறது.


வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு இவ்விஷயத்தை இமாம் தெரிவித்து இறந்து போனவருக்கு ஜனாஸாத் தொழுகையும் நடைபெற்று, நல்லடகத்திற்கு அத்தாயாரின் சடலம் மயான நிலத்திற்குச் சென்ற போது பின் தொடர்ந்தது ஜும்ஆ தொழ வந்திருந்த மக்களின் பெருந்திரள். இறுதிச் சடங்கில் முன் பின் அறியாத அத்தனை நூறு முஸ்லிம்கள்.


மாஜி கணவரும் பிள்ளைகளும் இமாமிடம் விசாரிக்க, இவர்கள் அனைவரும் அப்பெண்மணியின் சகோதரர்கள் என்று  பதிலளித்தார் அவர். வியப்பு மேலோங்க, அவர்கள் இமாமிடம், 'என் தாயார் இந்தப் பிரார்த்தனையை ஓதச் சொல்லியிருந்தார்' என்று ஒரு காகிதத்தை நீட்ட, அதில் தட்டுத் தடுமாறி எழுதிய அரபு வாசக துஆ, 'யா அல்லாஹ்! என் பிள்ளைகளுக்கு நேர்வழி காட்டு'


இமாம் அதன் அர்த்தத்தை விளக்க, மரணமடைந்த பெண்ணின் மகன் அங்கு, அப்பொழுதே கலிமா உரைத்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். 


அதையடுத்துத்தான் மாஜி கணவர், "அவளுடைய கல்லறைக்கு அடுத்துள்ள இடம் எனக்கு வேண்டும். என்ன விலை?" என்று கேட்டார்.


இமாமின் பதில், 'அதன் விலை உங்களுடைய கலிமா - லா இலாஹா இல்லல்லாஹ்...'


அக்கணவர் அக்கணமே அதை உரைத்தார். ஏற்றார்.


மரணமொன்று ஒரு குடும்பத்தை மீட்டெடுத்தது.


இந்நிகழ்வின் மூல உரை அடுத்த பதிவில் தனியாக வரும்.

No comments

Powered by Blogger.