Header Ads



அவர்களை பார்க்க, நான் ஆசைப் படுகிறேன்..


கொழும்பு சுற்றுப் புறத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசிக்கும் 90 வயது பாட்டி தனது பிறந்தநாள் தினமன்று பெளத்த அனுட்டானம் ஒன்றை நடத்த ஆசைப்படுவதாகக் கூற நிர்வாகம் ஏற்பாடுகளை செய்கிறது.


ஒரு பெளத்த மதகுரு அழைக்கப்பட்டு பெளத்த உபந்நியாசம் நடைபெறுகிறது, இறுதியில் அந்த மூதாட்டி ஒரு பிரிகர எனும் சன்மானத்தை மதகுருவிற்கு அன்பளிப்புச் செய்கிறார்.


மதகுரு தனது மடத்திற்கு திரும்பிய பின்னர் அதில் என்ன இருக்கிறது என்று பார்த்திருக்கிறார் அதில் அவர்களது அன்றாட உபயோகத்திற்கு தேவைப்படும் சர்க்காரம் ஒரு சிறிய பெட்டகம் என சில பொருட்கள் இருந்திருக்கின்றன.


பெட்டகத்தினுள் ஒரு கடிதம் இருந்திருக்கிறது அதில், இந்த சவர்காரங்களை பாவிக்கும் ஒவ்வொரு வேளையும் இந்த பெட்டகத்தை திறக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எனது பிள்ளைகள் மனதில் என்னை வந்து பார்க்கும் எண்ணம் துன்றுவதாக என எழுதப்பட்டிருந்தது.


மனமிறங்கி மதகுரு ஒருநாள் அந்த முதியோர் இல்லம் சென்று மூதாட்டியை சந்தித்து அவரது வேண்டுதல் நிறைவேற தன்னால் முடியுமானதை செய்ய விபரம் கேட்கிறார்.


மதகுரு, நான் ஒரு கிராமத்துப் பெண் இரண்டு ஆண் பிள்ளைகளை தந்துவிட்டு கணவர் இறந்து போனார், பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்கும் எண்ணத்தில் கொழும்பு ராஜகிரிய பகுதியில் சிறிய வீடு ஒன்றை வாங்கி பிள்ளைகளை சிறந்த பாடசாலைகளில் கற்கச் செய்தேன்.


இருவரும் உயர்தரம் கற்று பல்கலைக்கழகம் சென்று ஒருவர்  வைத்தியராக இங்கிலாந்தில் வசிக்கிறார், 30 வருடங்களாக தொடர்பில் இல்லை, மற்றவர் அமெரிக்காவில் இருக்கிறார் 25 வருடங்களாக தொடர்பில் இல்லை.


அவர்களும் குடும்பங்களூம் நன்றாக இருக்க வேண்டும், எனக்கு பணமோ பொருளோ வேண்டாம், எனது இறுதிக் கிரியைகளுக்கும் நான் காசு சேமித்து வைத்திருக்கிறேன்,  நான் சாபமிடவில்லை, ஆனால் அவர்கள் என்னை வந்து ஒரு முறை பார்க்க வேண்டும், அவர்களை நான் பார்க்க ஆசைப் படுகிறேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.


இந்த கதை ஒரு சிங்கள நாளிதழில்  பிரசுரமாகி இருக்கிறது, அதனை செய்தித் தொகுப்பாளர் சமுதித படிபாபினைக்காக ஒளிப்பதிவு செய்துள்ளார்.


குறிப்பு: வாழ்க்கையில் இறைவனுக்குப் பிறகு நாம் அதிகமதிகம் கடமைப்பட்டவர்கள் அன்னை தந்தை அங்கு தவறிழைத்து விட்டு எங்கு வாழ்வாங்கு வாழ்ந்தாலும் நாம் வாழ்வைத் தொலைத்துக் கொண்டோம் என்பதே அர்த்தமாகும்.


அதனால் தான் அத்தகையோரது எந்த நறாகருமமும் வணக்க வழிபாடுகளும் பிரார்தனைகளும் அங்கீகரிக்கப் படுவதில்லை, ஏன் இறைவனும் அவர்களைத் துண்டித்துக் கொள்வதாகவும் அவர்களுக்கு மன்னிப்போ சுவனமோ இல்லை என்றும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.


தம்மிடமுள்ள அனைத்தையும் அள்ளியள்ளித் தந்து தம்மை விடப் பெரியவர்களாக பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி அழகு பார்த்த அவர்களை வயோதிபப் பருவத்தில் கைவிட்டு விடுவதனை விட கொடிய நன்றி கொல்தல் வேறு ஏது இருக்க முடியும்.


வயது சென்றவர்கள் வாழ்வில் தனிமைப்படுத்தப்படல் பலவிதமான மன அழுத்தங்கள், நோய்நொடிகளுக்கு காரணமாகின்றது, அவர்கள் பிள்ளைகளிடம் காசு பணத்தை விட அன்பை அரவணைப்பை எதிர்பார்க்கிறார்கள்.


அக்கம் பக்கத்தில் ஊர்களில் அவ்வாறான தனிமைப்படுத்தப்பட்ட முதியவர்கள் இருப்பின் அவர்களை சமூகமாக கவனித்துக் கொள்வதும் அவர்களுக்கு உதவி ஒத்தாசைகள் புரிந்து நம்பிக்கையை வழங்குவதும் எமது கடமையாகும்.


இரக்ஷனே,  எம்மை குழந்தைகளாக சிறியவர்களாக அன்போடு பரிவோடு அரவணைத்து பார்த்துக் காத்து வளர்த்தது போல் எமது தாய் தந்தையர்களை உனது எல்லையில்லா காருண்யம் கொண்டு அரவணைத்துக் கொள்வாயாக!


மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்

23.10.2024 

No comments

Powered by Blogger.