Header Ads



கள்வர்கள், கொலையாளிகள் தப்பவே முடியாது - நாமல் கூக்குரல் எழுப்ப தேவையில்லை


தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் கள்வர்கள், கொலையாளிகள் தப்பவே முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.


ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,


“தேசிய மக்கள் சக்தியினர் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்னதான் கூறினாலும், மக்கள் எம்மை அங்கீகரித்துள்ளனர். எம்மைப் பற்றி மக்களுக்கு எதுவித பிரச்சினையும் கிடையாது. நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்.


தற்போது இடைக்கால அரசே செயற்படுகின்றது. எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு பிறகு பலமானதொரு அரசை அமைப்பதற்குரிய ஆணையை நாட்டு மக்கள் வழங்குவார்கள். நாடாளுமன்றத்துக்குத் தகுதியான எதிர்க்கட்சியொன்றையும் அனுப்புமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.


கள்வர்களைப் பிடிப்பது பற்றி கேட்கின்றனர், மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை ஆரம்பமாகியுள்ளது. ஊடகவியலாளர் லசந்த, விளையாட்டு வீரர் தாஜுதீன் உள்ளிட்டோர் தொடர்பான கொலை விசாரணைகள் இடம்பெறுகின்றன. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.


இதனால் சிலர் குழப்பம் அடைந்துள்ளனர். நாம் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடமாட்டோம். நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெறும். எனவே, நாமல் ராஜபக்ச உள்ளிட்டோர் குழப்பமடைந்து, கள்வர்களைப் பிடிக்குமாறு முன்கூட்டியே கூக்குரல் எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை” என்றார். 

No comments

Powered by Blogger.