இலங்கையின் ஹஜ் ஏற்பாடுகளிலும் "சிஸ்டம் சேன்ஜ்" வருமா..?
-மௌலவி ஜே.மீரா மொஹிதீன்-
இலங்கையின் ஹஜ் நடவடிக்கைகளை இதுவரை ஆட்சிக்கு வரும் இரு அரசாங்கங்களுமே மாறிமாறி மேற்கொண்டு வந்தன. இவ்விரு அரசாங்கங்களும் ஹஜ் விடயங்களில் அரசியலைப் புகுத்தி தாம் நினைத்தவாறு விடயங்களை கையாண்டன. இதனால் ஹஜ் பயணிகளும் முகவர் நிலையங்களும் திணைக்களமும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வந்தது. தற்போதைய புதிய அரசாங்கம் பழைய அமைப்பில் மாற்றத்தை விரும்புவதாலும் திணைக்களம் 2025 ஆம் ஆண்டுக்கான ஹஜ் ஒழுங்குகளை தற்போது ஆரம்பித்துள்ளதாலும் இவ்விடயத்தில் எனது கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.
எனது கருத்தை முன்வைக்குமுன் இவ்விடயத்தில் எனது முன்னைய பங்களிப்பு என்ன என்பதை வாசகர்களுக்கு தெளிவுபடுத்துவது அவசியமாகும். எனது 37வருட அரசாங்க சேவையில் 27 வருடங்கள் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் கடமையாற்றி 2010 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றேன். இவற்றுள் 25 வருடங்கள் திணைக்களத்தின் ஹஜ் விடயங்களுக்கு பொறுப்பான அதிகாரியாக ஓய்வு பெறும்வரை நானே செயல்பட்டேன். இக்கால கட்டத்தில் அரசாங்க செலவில் 12 முறை ஹஜ் விடயங்களுக்கு பொறுப்பாக மக்கா சென்றுள்ளேன். திணைக்களத்தின் மூலம் ஹஜ் குழுக்களை மக்கா அழைத்துச் சென்றுள்ளேன். பொறுப்பான அமைச்சர்களுடன் நெருங்கிப் பழகியுள்ளேன். இதனால் ஹஜ் ஒழுங்குகளில் எவ்வாறு அரசியல் புகுந்து விளையாடியது என்பது பற்றி நான் நன்கு அறிவேன்.
தற்போது ஹஜ் கமிட்டி என்ற பெயரில் அமைச்சரால் வெளியார்களைக்கொண்டு நியமிக்கப்பட்ட ஒரு அமைப்பு செயல்பட்டு வருவதைக் காணலாம். தற்போதுள்ள குழுவினர் மஹிந்தவின் ஆதரவுடன் நியமிக்கப்பட்டவர்களாவர். இவர்கள் மஹிந்தவின் தீவிர ஆதரவாளர்களாக இருந்ததனால் அவர்களை திருப்திப்படுத்துவதற்காகவும் ஹஜ்ஜின் பலன்களை அவரது ஆதரவாளர்கள் இவர்கள் மூலம் அனுபவிப்பதற்காகவும் நியமிக்கப்பட்டவர்களே. ஹஜ்ஜின் அனைத்து விடயங்களும் இவர்களது மேற்பார்வையிலேயே இடம்பெறுகின்றன. அரசாங்க அமைச்சர்கள் இவர்கள் மூலமே தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். அத்தோடு இவர்களும் இவர்களது சகாக்களும் அரச நிதியில் வருடா வருடம் ஹஜ்ஜை நிறைவேற்றிக்கொள்வர். ஹஜ் கமிட்டி என்ற பெயரில் ஒரு அமைப்பு திணைக்களம் உருவாக்கப்படுமுன் இருந்த ஒரு அமைப்பாகும். திணைக்களம் உருவாக்கப்பட்டதன்பின் ஹஜ்ஜின் அனைத்து விடயங்களையும் திணைக்களமே மேற்கொண்டு வந்தது.திணைக்களம் முஸ்லிம் அமைச்சின் நேரடிக் கண்காணிப்பில் இருந்தபோது ஹஜ் கமிட்டி என்ற ஒன்று இருக்கவில்லை. அக்காலத்தில் திணைக்களத்திற்கு தற்போதைவிடவும் அதிக வேலைப்பளுக்கள் இருந்தன. அக்காலத்தில் சவூதி அரேபிய தூதரகம்கூட இலங்கையில் திறக்கப்பட்டிருக்கவில்லை. வரக்கூடிய இரண்டு சவூதி அதிகாரிகளைவைத்து இரு வாரத்தில் ஏழு அல்லது எட்டாயிரம் விசாக்களை பதிவு செய்யவேண்டும். திணைக்களத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஒரு கிளையை திறந்து அதன் மூலமாக கடவுச்சீட்டுக்களை வழங்குதல். பயணிகளுக்கான பதினைந்துக்கும் மேற்பட்ட விமானங்களை வாடகைக்கு அமர்த்தி அதனை பங்கீடு செய்தல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லல் போன்ற ஒரு பாரிய வேலையை திணைக்களமே மேற்கொண்டது. ஆனால் இவ்வாறான பாரிய வேலைகள் தற்போது திணைக்களத்திற்கு இல்லாது இருப்பதினாலும் ஹஜ் ஒழுங்குகள் அனைத்தும் தற்போது சவூதி அரசாங்கத்தால் இலகுபடுத்தப்பட்டிருப்பதினாலும் திணைக்களம் மாத்திரம் இவ்வேலைகளை செய்வதற்கு போதுமானதாகும். எனினும் ஹஜ் விடயத்தில் நடைபெறும் சீர்கேடுகளை களைவதற்கு சேவை அடிப்படையில் ஒரு குழுவை அமைத்து மேற்பார்வை செய்ய வைப்பது சிறந்ததாகும்.
முன்பு ஹஜ் பயணிகளுக்கான கோட்டாக்கள் சவூதி அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அக்காலத்தில் நாம் ஹஜ்ஜுக்காக சுமார் ஏழு அல்லது எட்டாயிரம் விசாக்களை பதிவு செய்வோம். ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததனால் கடந்த பதினைந்து வருடங்களாக சவூதி அரசாங்கம் மூன்று அல்லது நான்காயிரம் கோட்டாக்களையே வழங்கிவருகின்றது. இதனை பகிர்ந்தளிப்பதில் நீண்ட காலமாக பிரச்சினைகள் இருந்துவருகின்றன. இதனால் முகவர் நிலையங்கள் நீதிமன்றம் வரை செல்லும் நிலை ஏற்பட்டன. இதனை ஆரம்பத்தில் சில அமைச்சர்கள் தன் விருப்பப்படி பகிர்ந்தளித்தனர். ஒரு அமைச்சர் அதற்கான லிஸ்டை வீட்டில் வைத்துக்கொண்டு இன்னாருக்கு இன்ன தொகையை வழங்குங்கள் என உத்தரவு போட்டுக்கொண்டிருப்பார். இன்னும் சில சந்தர்ப்பங்களில் குழு அமைத்து அதன் சிபாரிசின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டன. எது எப்படி இருப்பினும் இதற்கான எடுகோள்களை அமைப்பதில் பிரச்சினை இருப்பதினால் இன்று வரை முகவர் நிலையங்களுக்கிடையில் கோட்டா பங்கீடு செய்வதில் பிரச்சினைகள் இருந்துகொண்டே இருக்கின்றன. கோட்டா பங்கீட்டின் அடிப்படையிலேயே தமது இலாபம் தங்கி இருப்பதால் முகவர்கள் இதற்காக அமைச்சர்களையும் அதிகாரிகளையும் நாடுவதன் மூலம் பல ஒழுங்கீனங்கள் இடம்பெறுகின்றன. எனது அனுமானப்படி ஒரு முகவர் நிலையம் ஒரு கோட்டாவின் மூலம் இரண்டு இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட இலாபத்தை அடைகின்றனர்.
அதனால் கோட்டா பங்கீட்டில் முகவர் நிலையங்கள் மிகவும் கண்டிப்பாக இருப்பர். அதேபோல் அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் இருக்கும் ஒரே துரும்பு இதுவாக இருப்பதினால் அவர்களும் இது விடயத்தில் கண்டிப்பாக இருப்பர். எனவே இதற்குள்ள ஒரே பரிகாரம் என்னவென்றால் கோட்டாவை அமைச்சரோ அல்லது அதிகாரிகளோ பிரிக்காமல் அது தானாகவே பிரிந்துபோகும் வழிமுறையைச்செய்வதாகும். அதாவது பதிவு செய்யப்பட்ட முகவர் நிலையங்களையும் அவர்களது கட்டணம் சேவை என்பனவற்றை பத்திரிகையில் பிரசுரித்து தமக்கு விருப்பமான முகவர்களுடன் இணைந்து அவர்களது கடவுச்சீட்டுக்களை முகவர் நிலையத்திடம் ஒப்படைக்கச்செய்தல் வேண்டும். அக்கடவுச்சீட்டுக்களை குறிப்பிட்ட திகதிக்கு முன் திணைக்களத்தில் ஒப்படைக்கச்செய்து அதன் அடிப்படையில் கோட்டா வழங்கப்படும்போது பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஒரு முகவர் நிலையம் நூறு கடவுச்சீட்டுக்கு மேல் கையளிக்க முடியாது என வரம்பிடப்பட்டால் கோட்டா எல்லோருக்கும் பிரிந்து போகக்கூடியதாக இருக்கும். கடவுச்சீட்டுக்கள் குறைவாக பெற்ற முகவர் நிலையங்களை ஒன்றோடொன்று இணைத்து விடுவதன் மூலம் பிரச்சினைகளுக்கு பரிகாரம் காணலாம்.
திணைக்களத்தில் ஹஜ் முகவர்களாக பதிவு செய்துகொள்வதில் நீண்ட காலமாக மக்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பின்னால் திரிவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
உல்லாச பிரயாணிகள் சபையில் இலேசாக பதியக்கூடியதாக இருக்கும்போது திணைக்களத்தில் கடினமானதாக இருப்பதாக கூறுவர். இதுவொரு திறந்த பொருளாதார கொள்கையுள்ள நாடு. எனவே திணைக்களத்தால் வேண்டப்படும் தகுதியுள்ளோர் அனைவருக்கும் வழங்கப்படல் வேண்டும். அதில் ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்காக பதிவுக்கட்டணம் மற்றும் உத்தரவாத வைப்பு போன்றவற்றில் அதிகரிப்பை ஏற்படுத்தலாம்.
திணைக்கள விடயத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அக்கறை இருப்பதில்லை. ஹஜ் காலத்தில் மாத்திரம் அவர்களுக்கிடையில் போட்டியிட்டுக்கொண்டு அவரும் அவரது கையாட்களும் ஹஜ்ஜின் பயன்களை அனுபவித்துவிட்டு அடுத்த வருடம்தான் அங்கு தலை காட்டுவர். முஸ்லிம் திணைக்களத்திற்கு இதற்குமுன் பொறுப்பாக இருந்த முன்னாள் அமைச்சர் அவரது தொகுதியில் அவருக்காக உழைத்த அதிகமானோரை திணைக்கள நிதியின்மூலம் ஹஜ்ஜுக்கு அனுப்பிவைத்தார். இது போன்று பல முஸ்லிம் அமைச்சர்கள் ஹஜ்ஜை தமது சொந்த நலனுக்காக பயன்படுத்திக்கொண்டனர். திணைக்களத்தில் இயங்கும் வக்ப் பகுதி திணைக்களம் உருவாகுமுன் உருவாக்கப்பட்டதாகும். ஆனால் அது அன்றுதொட்டே இன்று வரை எவ்வித அபிவிருத்தியும் இன்றி காணப்படுகின்றது. முஸ்லிம் திணைக்களத்திற்கு வரும் உயர் அதிகாரிகளில் பெரும்பாலானோர் ஹஜ்ஜை நோக்கமாகக் கொண்டே அங்கு வருகின்றனர். வந்த முதல் ஆண்டில் அவர் ஹஜ் செய்வார் அடுத்த ஆண்டு குடும்பத்துடன் ஹஜ் செய்துவிட்டு மூன்று ஆண்டுகளில் அங்கிருந்து கழன்றுவிடுவார். இச்சந்தர்ப்பத்தில் திணைக்களத்தின் மேம்பாட்டுக்காக உழைத்த பணிப்பாளர்களான மர்ஹூம் எம்.எம்.அன்சார் யு.எல்.எம். ஹால்தீன் போன்றோர்களது சேவைகள் நினைவு கூறத்தக்கதாகும். புதிய தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைப்படி இவைகள் அனைத்தும் சீர் செய்யப்பட வேண்டியவைகளாகும். எதிர்காலத்தில் அநேகமாக முஸ்லிம் திணைக்களம் சமய கலாசார அமைச்சின் கீழ்தான் செயல்பட வேண்டிய நிலை இருக்கும். எனவே இந்த அரசாங்கத்தோடு இணைந்து செயல்படும் முஸ்லிம் புத்திஜீவிகள் இவ்விடயங்களை கவனத்திற்கொண்டு திணைக்கள விடயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வழிசெய்வார்கள் என எதிர்பார்க்கின்றேன்.- Vidivelli
Post a Comment