ஜனாதிபதிக்கும், தற்போதைய அரசாங்கத்துக்கும் நாட்டை ஆளும் திறமை இல்லை - சஜித்
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஒரு நாட்டை ஆட்சி செய்வதற்குத் தேவையான திறமைகளும் ஆற்றலும் அவர்களிடம் இல்லை என்பதை நிரூபித்துள்ளனர். தேர்தலின் போது கூறியது போல் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அவர்களால் முடியாதுபோயுள்ளது. தேங்காயை வாங்குவதற்குக் கூட வரிசையில் நிற்கும் யுகத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தெஹிவலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டு மக்களின் வருமானம் குறைவாலும், பொருட்களின் விலை ஏற்றத்தாலும் தமது பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாத இலட்சக்கணக்கான குடும்பங்கள் காணப்படுகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து, தாய் சேய் ஆரோக்கியம் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றன. மக்களை வாழ வைப்பதற்கான தீர்வுகள் இந்த அரசாங்கத்திடம் இல்லை என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நமது நாடு 2028 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டுக் கடனைச் செலுத்த வேண்டும். இதற்குத் தேவையான டொலர் கையிருப்பை நாம் கொண்டிருக்க வேண்டும். எனவே, டொலர்களைப் பெறும் முறைகள் வேகமாக அமைந்த காணப்பட வேண்டும். 2028 இல், டொலர்கள் இல்லாமல் கடனை செலுத்த முடியாவிட்டால், நாடு மீண்டும் வங்குரோத்தடையும். அடுத்த நான்கு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைய வேண்டும். மந்தமான பொருளாதாரத்தைக் கொண்டு கடனை அடைக்க முடியாது. இவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி அரசினால் மட்டுமே மக்களை வாழ வைக்க முடியும். எனவே இதற்கு அனைவரும் எம்மோடு இணைந்து கொள்ளுமாறு சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.
அனைவரும் ஒன்றாக இணைந்து வாழ முடியுமான, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்டை உருவாக்கி, பட்டினி இல்லாத நாட்டை உருவாக்க ஐக்கிய மக்கள் ஆட்சிக்கு பக்க பலத்தை பெற்றுத் தாருங்கள். 220 இலட்சம் மக்களின் தேவையின் அடிப்படையில் நாட்டைக் கட்டியெழுப்பத் தயார் என்றும் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.
Post a Comment