ஆணுறுப்பில் மிளகாய் அரைத்து, ஊற்றிய வழக்கு - அடிப்படை உரிமை மீறல் மனு
ஆணுறுப்பில் மூட்டைக்கொச்சிக்காயை (நைமிளகாய்) அதன் விதைகளுடன் நன்றாக அரைத்து, கறைத்து ஊற்றிய சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் தொடர்பில் சட்டமா அதிபர் ஆஜராகுவதற்கு மறுத்துள்ளார்.
தெல்தெனிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சார்பில் சட்டமா அதிபர் ஆஜராக மாட்டார் என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு திங்கட்கிழமை (14) அறிவித்துள்ளார்.
தெல்தெனிய பொலிஸாரால் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுத்துவைத்திருந்த போதே, மூட்டைக்கொச்சிக்காய் (நைமிளகாய்) கறைத்து அவருடைய ஆணுறுப்பில் ஊற்றியுள்ளனர்.
இது மிகவும் பாரதூரமான சம்பவம் என்பதால், பிரதிவாதியான பொலிஸ் உத்தியோகத்தர்கள் சார்பில் ஆஜராகாமல் இருப்பதற்கு சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார் என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோதாகொட மற்றும் குமுதுனி விக்ரமசிங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
ருவன் சாந்த பிரியதர்ஷனவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில், பொலிஸ் மா அதிபர், தெல்தெனிய தலைமையக பொலிஸ் பரிசோதகர், சட்டமா அதிபர் உள்ளிட்ட 11 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி தெல்தெனிய பொலிஸாரால் தாம் கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறியுள்ள மனுதாரர், இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment