Header Ads



அறுகம்பே தொடர்பில் அமெரிக்க தூதுவரின் அறிவிப்பு


இலங்கைக்கு கடந்த காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுலா ஆலோசனையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் உரையாற்றிய அவர், இலங்கைக்கு பயணத்தடை விதிக்கப்பட்டதாக கூறுவது போலியான செய்தி என தெரிவித்தார்.


"பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க தூதரகம் ஏதேனும் தகவல் அறிந்தால், அந்தத் தகவலைப் பற்றி நாங்கள் எங்கள் ஊழியர்கள், அமெரிக்க பிரஜைகள் மற்றும் தொடர்புடைய அரசாங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும். அதில் இரட்டைக் கொள்கை பின்பற்றப்படவில்லை. இது உலகம் முழுவதும் நாம் பயன்படுத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை. அறுகம்பே பகுதிக்கு அச்சுறுத்தல் இருப்பதை அறிந்த பின்னர், நாங்கள் இலங்கை அதிகாரிகளுக்கு தெரிவித்தோம். அவர்கள் விரைவாக பதிலளித்தனர்.


நாங்கள் அவர்களுடன் திறமையாக பணியாற்றி வருகிறோம். நாளாந்தம் அவர்களுடன் தொடர்பில் உள்ளோம். இலங்கையின் தலைமை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடனான ஒத்துழைப்பை நாங்கள் பாராட்டுகிறோம்.வெளிப்படைத்தன்மைக்கான அவர்களின் அர்ப்பணிப்பு விதிவிலக்கானது. நான் போலியான செய்திகள் வௌியாவதைப் பற்றி பேச விரும்புகிறேன். இலங்கைக்கு பயணத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை. 


கடந்த வாரம், அமெரிக்க பிரஜைகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை அறுகம்பேக்கு பகுதிக்கு பயணிக்க வேண்டாம் என எமது பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்தது.ஆனால் இலங்கைக்கான பயண ஆலோசனையில் எந்த மாற்றமும் இல்லை. இது மாலத்தீவு, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு வழங்கப்படும் பயண ஆலோசனைகளைப் போன்றதாகும். இலங்கைக்கும் அவ்வாறுதான்" என்றார்.

No comments

Powered by Blogger.