Header Ads



இன்று தேங்காய்க்குக் கூட வரிசை கட்டி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது - சஜித்


இன்று தேங்காய்க்குக் கூட வரிசை கட்டி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கூட அதிகரித்துள்ளன. மக்களுக்கு நிவாரணம் தருகிறோம் என்று சொன்ன இந்த அரசால் கூட IMF-யுடன் பேச்சுவார்த்தை நடத்தி VAT உள்ளிட்ட வரிச்சுமையை குறைக்க முடியாது போயுள்ளது. ஆனாலும் ஐக்கிய மக்கள் அரசாங்கத்தில் வரிகளை குறைக்கும் சர்வதேச நாணய நிதியம் உடன்படிக்கையை எட்டுவோம் என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


ஜனாதிபதி தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்னரே சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம். வரிச்சுமையை மக்களால் சுமக்க முடியாது என்று குறித்த பேச்சுவார்த்தைகளின் போது நாம் அவர்களுக்கு சுட்டிக்காட்டினோம். மக்கள் கையில் புழங்கும் பணம் கூட வரி என்ற பெயரில் திருடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மக்களின் அதிருப்தி அதிகரித்து காணப்படுவதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வரிச்சுமையை குறைக்க தற்போதைய அரசால் இன்னும் முடியவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் வரிசையில் நிற்கும் காலம் ஒழிக்கப்பட்டு, வரிச்சுமை குறைந்த, பணம் புழக்கம் இருக்கும் பொது மக்கள் யுகமொன்றுக்கு தலைமைத்துவம் வழங்க நாம் தயார். எனவே, இந்த பொதுத் தேர்தலில் எரிவாயு சிலின்டருக்கு வாக்களித்த அனைத்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் கதவுகள் திறந்தே காணப்படுகின்றன. ரணில் விக்கிரமசிங்க மக்களை அனாதையாக்கிவிட்டுள்ளார் என என சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் நேற்று(24) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதி அமைப்பாளர் முஜிபுர் ரஹ்மான் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.