Header Ads



சவுதி கண்காட்சியில் முதன் முறையாக இலங்கையின் தெங்கு உற்பத்திப் பொருட்கள்


ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் இலங்கையின் தெங்குசார் உற்பத்திப் பொருட்களை முதல் முதலான 41 ஆவது சவுதி விவசாயக் கண்காட்சியில் அறிமுகப் படுத்தியது. இக்கண்காட்சியில் இலங்கை தென்னைஅபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையுடன் இலங்கையின் 10 தெங்குப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் ஒக்டோபர் 21 முதல் 24 ஆம் திகதி வரை ரியாத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியில் பங்குபற்றின.


சவுதி அரேபியாவுக்கானஇலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் இலங்கையின் வர்த்தக கண்காட்சிக் கூடத்தை  உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.


இந்நிகழ்வின் போது உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வத்அவர்கள் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் 40 வருடங்கள்பழைமை வாய்ந்த மிகவும் பிரபல்யமான இந்த சவூதி விவசாயக்கண்காட்சியில் முதன் முறையாக இலங்கை தெங்குசார் உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்யும் பெருமளவான இலங்கை நிறுவனங்கள் பங்குபற்றியமை ஒரு பெரிய திருப்பு முனையாகும் எனக் குறிப்பிட்டார். 


எதிர்வரும் காலங்களில் தமது உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இலங்கையின் ஏனைய விவசாயத்துறை நிறுவனங்களுக்கும் தூதுவர் அழைப்பு விடுத்ததுடன் அத்தகைய பங்கேற்பானது இலங்கை ஏற்றுமதி உற்பத்திப் பொருட்களை சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்வதற்கும் விரிவு படுத்துவதற்கும் பெரிதும் உதவும் எனவும் அவர் வலியுறுத்தினார். 


சவூதிஅரேபியாவின் 2030 இலக்கின் ஒரு பகுதியான "பசுமை முன்முயற்சி" 10 மில்லியன் மரங்களை நடுவதை நோக்காகக்கொண்டுள்ளது. வறண்ட காலநிலைக்கு உகந்த வளர்ச்சி ஊடகமான இலங்கையின் உயர்தர 'coco peat' இம் முயற்சிகளுக்கு பயனளிக்குமென தூதுவர் அமீர் அஜ்வத் சுட்டிக் காட்டினார்.


தூதுவர் அமீர் அஜ்வதின் விசேட அழைப்பின் பேரில், சுற்றாடல் தொடர்பான மன்னர் அப்துல்அஸீஸ் மற்றும் மன்னர் சல்மான் பணிப்பாளர் சபையின் ஆலோசகர், இளவரசர் முதாப் பின் ஃபஹ்த் பின் ஃபர்ஹான் மற்றும் சவூதி அரேபியாவின் சுற்றாடல் மற்றும் விவசாய அமைச்சின் உதவி நிரந்தரச் செயலாளரான Dr. அலி அல்ஷெய்கி மற்றும் சவுதி வர்த்தக சம்மேலனத்தின் பிரதி தலைவரும் சவுதி NAF கம்பெனிகள் குழுவின் தலைவருமாகிய ஃபhயிஸ் அல்ஷஹிலி ஆகியோர் இலங்கை தெங்கு கண்காட்சிக்  கூடத்துக்கு விஜயம் செய்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

 

வர்த்தக கண்காட்சியில் கலந்து கொண்ட இலங்கை தெங்கு நிறுவனங்கள் சவூதி பசுமை மன்றத்தின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகளை மேற் கொண்டனர். தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் சவுதி விவசாய கண்காட்சிக்கு வருகை தந்த இலங்கை வர்த்தக பிரதிநிதிகளை கௌரவிக்கும் வகையில் பகல் போஷண விருந்தை வழங்கியதுடன் பிரதிநிதிகளுடன் கருத்துப் பரிமாறும் அமர்வையும் நடத்தினார்.

 

இந்த 41 வது சவுதி விவசாயக் கண்காட்சியில் 29 நாடுகளைச் சேர்ந்த 370 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் கலந்துகொண்டனர், இதில் உலகெங்கிலும் உள்ள முன்னணி விவசாயத் துறை நிறுவனங்கள், விவசாயத் துறையில் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகள் உட்பட தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியது.  விவசாயத் துறையில்பங்கேற்பாளர்கள் மத்தியில் புதிய வர்த்தக வாய்ப்புகளைஉருவாக்குவதற்காகவும் வலையமைப்பதற்காகவும் கண்காட்சியின் போது தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர் தலைமையில் நுண்ணறிவு மாநாடுகளும் மற்றும் கலந்துரையாடல்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

No comments

Powered by Blogger.