வீரத் தியாகிகளின் வரிசையில் யஹ்யா சின்வார் - படுகொலை தொடர்பில் ஹக்கீம் கண்டணம்
ஹமாஸ் இயக்கத்திற்கு தலைமைத்துவம் வழங்கி அண்மையில் சியோனிஸவாதிகளினால் கொலையுண்ட தியாகி இஸ்மாயில் ஹனியேயைத் தொடர்ந்து ,அந்த விடுதலை இயக்கத்திற்கு தலைமை வகித்து,வழிநடாத்திவந்த யஹ்யா சின்வார் அவ்வாறே கொல்லப்பட்ட சம்பவத்தில் அமைதிக்கான நம்பிக்கையை சிதைத்து சின்னாபின்னமாக்கிய இஸ்ரேலை வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் இஸ்ரேலியப் படையினரால் ஹமாஸின் தலைவரான யஹ்யா சின்வார் கொல்லப்பட்டது காஸாவில் வியாபித்துவரும் ஈவிரக்கமற்ற கொலைத் தாண்டவத்தின் ஆழ்ந்த கவலையளிக்கும் மற்றொரு தருணமாகும்.
இப்போது ஈரானுக்கும் லெபனானுக்கும் அடுத்தடுத்து இஸ்ரேலால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் போர் நடவடிக்கையின் தீய விளைவாக இது இரத்தம் தோய்ந்த வரலாற்றில் இடம்பெறுகின்றது.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதில் கடந்த பல்லாண்டுகளாக அளப்பரிய பங்களிப்பை தொடர்ச்சியாக செய்துவரும் ஹமாஸ் , ஹிஸ்புல்லாஹ் போன்றவற்றையும் அவற்றின் ஈடிணையற்ற தலைவர்களையும் நாங்கள் மதிக்கின்றோம்.
பாலஸ்தீனத்தைப் பாதுகாப்பதில் யஹ்யா சின்வாரின் தளராத முயற்சி, பொங்கி எழும் போரில் தனது தலைவிதியை நன்குணர்ந்த வீரச் செம்மலின் தீரச் செயலாகும்.
"சின்வார் கொல்லப்பட்ட போதிலும், காஸாவில் போர் முடிவடையவில்லை" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாகு மார் தட்டுவது அருவருப்பானது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் போன்ற உலக நாட்டுத்தலைவர்கள், "சின்வார் கொல்லப்பட்டது போருக்கு ஒரு திருப்புமுனையைக் கொண்டு வந்து அதனை முடிவுக்கு இட்டுச் செல்லும் "என்று கூறுவதும் கூட கேலிக் கூத்தாகும் .
மத்திய கிழக்கில் பலஸ்தீனத்திலும் அண்டை நாடுகள் சிலவற்றிலும் தொடர்ந்து நீடிக்கும் போர் சூழல் அமைதிக்கான அனைத்து நம்பிக்கைகளையும் சிதைத்து விடுகின்றது.இத்தனைக்கும் மத்தியில் அமைதிக்கான நம்பிக்கை ஒளிக் கீற்று வெளிப்பட வேண்டுமென நாங்கள் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். அத்துடன் இஸ்ரேலின் நாசகார யுத்தக் கெடுபிடிகளை நாங்கள் எப்பொழுதும் போல வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றுள்ளது.
Post a Comment