எம்.எம்.றாஸிகின் கல்வி பணியும், இலக்கியப் பணியும் ஓர் நோக்கு
ஏழு முஸ்லிம் கிராமங்களைக் கொண்ட ஹெம்மாதகமையின் ஹிஜ்ராகமையைச்சேர்ந்த சபரகமுவ மாகாணத்தின் முதலாவது முஸ்லிம் ஆசிரியரான மர்ஹும் எம். எம். முஹம்மத் முபாரக் தல்கஸ்பிட்டியைச் சேர்ந்த ஹாஜியானி பாத்திமா உம்மா தம்பதிகளின் இரண்டாவது புத்திரரான இவர், 1941 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று பிறந்தார். இதனால் இவர் ஹஜ்ஜு லெப்பை என்ற பெயரிலும் அழைக்கப்பட்டார்.
ஹெம்மாதகமை அல்-அஸ்ஹர் மகா வித்தியாலயம் மற்றும் மடுல்போவை முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வியைப் பெற்ற இவர், 1978 ஆம் ஆண்டு அரசாங்கம் முதல் முறையாக நடாத்திய எட்டாம் வகுப்பு விஞ்ஞான கல்வி புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து தர்கா நகர் அல்ஹம்ராக் கல்லூரியில் இணைந்தார்.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்ற இவர், உதவி ஆசிரியராகவும் 1963 இல் பயிற்றப்பட்ட ஆசிரியராகவும் அல்-அஸ்ஹர் கல்லூரியில் பணிபுரிந்தார்.
1965 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியாக வெளியேறினார்.
1975 ஆம் ஆண்டு சேவைக்கால ஆசிரியராக நியனம் பெற்ற இவர், கேகாலை, கண்டி, மாத்தளை மாவட்டங்களை உள்ளடக்கிய கண்டி கல்வி வலயத்தில் சமூகக் கல்விப் பாட ஆசிரியராகவும் பின் க.பொ.த. உயர்தரம் புவியியல் பாட ஆலோசகராகவும் பணி புரியும் போது, மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தின் செயற்றிட்ட அதிகாரியாக நியமனம் பெற்றார்.
1990 ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத்தில் சமகால உரைபெயர்ப்பாளராக நியமனம் பெற்றார்.
பாராளுமன்றத்தின் மூத்த உரை பெயர்ப்பாளர் பதவியில் இருந்து இவர் ஓய்வு பெற்றார். பின் ஜனாதிபதி செயலகத்திலும் மேல் மாகாண சபையிலும் வருகை உரை பெயர்ப்பாளராகப் பணி புரிந்தார்.
இவர் 1997 ஆம் ஆண்டு புதுடில்லியில் பட்டேல்பாய் நிறுவனங்களில் பாராளுமன்ற நிறுவனங்களின் நடைமுறை பற்றிய பட்டப்பின்படிப்பினை பெற்றுள்ளார்.
பின் இந்தியப் பாராளுமன்றத்தில் லோக்சபாவில் ஆறு மாத நடைமுறைப் பயிற்சியையும் பெற்றுள்ளார்.
தமிழ் மொழி, இலக்கியம், இஸ்லாம் ஆகிய துறைகளிலும் சிறுவயது முதல் ஈடுபாடு காட்டிய இவர், பாடசாலைகள் பலவற்றிலும் மாணவர் மன்றங்களில் செயலாளராகப் பணி புரிந்தார்.
இவர், ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் மகா வித்தியாலயத்தில் பணி புரியும் போது மாணவர்களை புறச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதில் அக்கறையோடு வழிகாட்டினார்.
நான் படித்த அல் - அஸ்ஹர் மகா வித்தியாலயத்தில் சாரணப்படையை அறிமுகப்படுத்தினார்.
இவரது வழிகாட்டலில்தான் அகில இலங்கை பேச்சு ப் போட்டி, கேகாலை மாவட்ட பேச்சு போட்டிகளில் பங்கு பற்றி, பேச்சுகளை எழுதி, போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று மாணவர்களின் பேச்சாற்றலை வளர்த்தார்.
1960 காலத்தில் அல்- அஸ்ஹர் மகா வித்தியாலயத்தில் பிரதான கல்லூரிகளில் இருப்பது போன்று பல வெளிவாரி செயற்பாடுகளை இவர் அறிமுகப்படுத்தினார். பெரிய பாடசாலைகளில் இருப்பது போன்று, ஹெம்மாதகம பிரதேசத்தில் அறிமுகப்படுத்தினார்.
சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் நன்கு புலமை பெற்றிருந்த மர்ஹும் றாசிக், ஹெம்மாதக வாலிபர் மன்றம் ஒன்றை உருவாக்கி எழுத்துப் பணி செய்தார்.
இந்த மன்றத்தின் மூலம் "விழிப்பு" என்ற சஞ்சிகையை மர்ஹும் எம். ஐ. எம். மியாத் போன்ற எழுத்தாளர்களுடன் இணைந்து வெளியிட்டார்.
பாராளுமன்றத்தில் இவர் பணி புரியும் போது ஜும்ஆ தொழுகைக்கு பத்தரமுல்லைக்குச் செல்வதற்கு பஸ் வசதிகள் இல்லாத போது இவர் நிர்வாகத்துடன் பேசி பஸ் சேவை ஒன்றை ஈடுபடுவதற்கு நடவடிக்கை எடுத்தார்.
இவர் ஆசிரியராகப் பணி புரிந்த போது, ஆசிரியர் சங்கத்தின் கேகாலை கிளையின் தலைவராகச் செயற்பட்டார்.
மற்றும் ஹெம்மாதகம பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் தலைவராகவும் பணிபுரிந்தார்.
இவர் திஹாரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி அரசாங்க அதிபர் அல்ஹாஜ் மர்ஹும் யூசுபின் மகளான, முஸ்லிம் மகளிர் கல்லூரியில் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றிய இஸ்ஸத்துன் நிஷா யூசுப் என்பவரைத் திருமணம் செய்தார்.இவருக்கு மூன்று பிள்ளைகள்.
மர்ஹும் றாசிக்கின் சேவைகளில் மகத்தான ஒன்று "ஹெம்மாதகம முஸ்லிம்களின் வரலாறு சமூகவியல் நோக்கு" என்ற 300 பக்கங்களைக் கொண்ட நூலை வெளியிட்டதைக் குறிப்பிடலாம்.
ஹெம்மாகம அல் - அஸ்ஹர் வித்தியாலயத்தில் நான் படிக்கும் போது இவர் எனது ஆசிரியராக இருந்தார்.
கலாநிதி எம். ஏ.எம் சுக்ரி, கலாநிதி எம்.ஏ.எம். நுஃமான், விரிவுரையாளர் எம். ஐ.எம்.அமீன் ஆகியோர்களின் ஆசியுரையுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் 2017 ஆம் ஆண்டு கல்வி நூற்றாண்டின் வெளியீடாக வெளிவந்தது.
அக்காலத்தில் மாணவர்களை வெளிவாரி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதில் அக்கறையோடு செயற்பட்டார். அகில இலங்கை பேச்சு போட்டிகளிலும், மாவட்ட மட்ட பேச்சுப் போட்டிகளிலும் மாணவர்களை ஈடுபடுத்துவதில் முக்கிய காரண கர்த்தாவாக இருந்தார். பாடசாலைகளில் அநேகர் கிராஅத் ஓதுவதில் அக்கறை காட்டுவதில்லை. ஒரு நாள் எல்லோரையும் மண்டபத்துக்கு அழைத்து, முன்னறிவித்தல் கொடுத்து, கிராஅத் ஓதுவதில் ஈடுபட்டார். நான் கூட அதன் பிறகு தான் பல சூறாக்களை பாடமாக்க நிர்ப்பந்திக்கப்பட்டேன். இப்படி இவர் பலதரப்பட்ட சேவைகளைச் சேர்ந்த ஓர் ஆசிரியராக நான் இவரைப் பார்க்கின்றேன்.
இவரது கலை, இலக்கிய, கலாசார விடயங்களில் ஈடுபாடு காட்டிய மர்ஹும் றாசிக், "விழிப்பு" என்ற ஒரு சஞ்சிகையை தனது கிராமத்தில் வெளியிட்டார்.
அதன் பிறகு அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இருக்கும்போது "கலையமுதம்" சஞ்சிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
தமிழ் மொழியில் ஏனைய மொழிகளின் செல்வாக்குப் பற்றி ஒரு புத்தகத்தை தேசிய கல்வி நிறுவத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.
பேராதனையில் படிக்கும் போது
பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் சஞ்சிகையின் ஆலோசராக இருந்துள்ளார்.
உம்மு நபித்துமா என்ற பெருமனார் பற்றிய சிங்கள நூலை வெளியிட்டுள்ளார்.
எம்.சீ. அப்துல் ரஹ்மான் பற்றிய ஒரு நூலையும் தமிழில் வெளியிட்டுள்ளார். இப்படி பல நூல்கள். பல பத்திரிகைகளில் கட்டுரைகளை வெளியிட்டுள்ளதோடு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திலும் இலங்கை தொலைக்காட்சியிலும் அடிக்கடி உரைகளில் மற்றும் கலந்துரையாடல்களிலும் பங்கு பற்றியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு கலாசார அமைச்சினால் கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். சிறந்த பேச்சாளரும் எழுத்தாளருமான இவர், தீவிர சமயப்பற்றுமிக்கவருமாவார்.
இளைய தலைமுறையினருக்கு பல முன்மாதிரிகளை இவரது வாழ்விலிருந்து பின்பற்ற முடியும்.
என்.எம்.அமீன்
Post a Comment