Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்பிக்க கிளம்பி, முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை குறைக்கப் போகிறோமா..?


- எஸ்.என்.எம்.சுஹைல் -


ஆபத்­தான சாக­ச­மொன்றில் ஈடு­ப­டும்­போது ஏற்­படும் சிறு தவறும் மர­ணத்­திற்கு இட்டுச் செல்லும் என்ற பொது­வான கருத்­தி­ய­லேயே, “கரணம் தப்­பினால் மரணம்” என்­ப­தற்கு நாம் கொண்­டி­ருந்தோம்.


விடயம் அது­வல்ல, நாய­கிக்கு (பெண்) திரு­மண காலம் நெருங்க வீட்டார் மண­மகன் தேட ஆரம்­பித்து விடுவர். நாய­கியின் நிலையோ திண்­டாட்டம். அக்­கா­லத்தில் மனதால் வரித்­தவன் (காதலன்) வர­வில்லை என்றால் பெண்கள் உயிரை மாய்த்துக் கொள்ள தயா­ரா­கி­வி­டுவர். இதைத்தான், அக்­கா­லத்தில் “கரணம் தப்­பினால் மரணம்” எனப்­பட்­டது. “கரணம்’ என்ற சொல்­லுக்கு “வதுவைச் சடங்கு’ என்று பொருள் உண்டு.


சரி விட­யத்­துக்கு வருவோம், பாரா­ளு­மன்றத் தேர்தல் நெருங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றது. இன்னும் 20 நாட்கள் மாத்­திரம் எஞ்­சி­யி­ருக்கும் நிலையில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­தி­ப்­டுத்தும் விட­யத்தில் ‘‘கரணம் தப்­பினால் மரணம்’’ எனும் பொது­வான கருத்­தியல் நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது.


கடந்த காலங்­களில் உயர்ந்­த­பட்­ச­மாக முஸ்லிம் பிர­தி­நிதித்­துவம் திகா­ம­டுல்­ல­யிலும் கண்­டி­யிலும் நான்கு, கொழும்பில் மூன்று, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை, வன்­னியில் இரண்டு, புத்­தளம், கேகாலை, களுத்­துறை, பொலன்­ன­றுவை, குரு­நாகல், அநு­ரா­த­புரம், யாழ். மற்றும் கம்­பஹா ஆகிய மாவட்­டங்­களில் ஒன்று என இருந்­துள்­ளது.


எனினும், பொலன்­ன­றுவை, களுத்­துறை, குரு­நாகல், யாழ். மற்றும் கம்­பஹா மாவட்­டங்­களில் பிர­தி­நித்­துவம் கடந்த இரு தசாப்­தங்­க­ளாக கன­வாகவே மாறி­விட்­டது.


எனினும், திகா­மடுல்ல, கண்டி, கொழும்பு, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை, வன்னி மற்றும் கேகாலை மாவட்­டங்கள் தமது பிர­தி­நி­தித்­து­வத்தை கடந்த காலங்­களில் பாது­காத்­து­ வந்­துள்­ளது. எனினும், இம்­முறை நிலைமை கொஞ்சம் மோச­ம­டைந்­துள்­ளது.


குறிப்­பாக புதிய அர­சியல் மாற்றம் மற்றும் முன்­னைய அர­சி­யல்­வா­தி­களின் பிழை­க­ளினால் வாக்­கா­ளர்­க­ளி­டையே சிந்­த­னையில் புதிய தெம்பு உரு­வா­கி­யி­ருக்­கி­றது. இந்த புதுத் தெம்பு பிர­தி­நி­தித்­து­வத்­திற்கு ஆப்­பாக மாறி­வி­டுமோ என்ற அச்ச நிலை­மை தோன்­றி­யி­ருக்­கி­றது. அல்­லது பெரும்­பான்மை சுய­நல அர­சியல் முத­லை­களின் வலையில் சிக்­கி­யி­ருக்­கி­றோமா என்றும் எண்ணத் தோன்­று­கி­றது.


இன்று முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் அவ­சி­ய­மில்லை, எமக்கு நேர்­மை­யான அர­சி­யல்­வா­தி­களே அவ­சியம் என்ற சிந்­தனை சில பகு­தி­களில் மேலெ­ழுந்­தி­ருக்­கி­றது. அல்­லது முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் இல்­லாமல் போனாலும் பர­வா­யில்லை குறிப்­பிட்ட முஸ்லிம் அர­சி­யல்­வா­தியை எப்­ப­டி­யா­வது தோற்­க­டிக்க வேண்டும் என்­கிற மன­நிலை சில­ரிடம் உரு­வா­கி­யி­ருக்­கி­றது. இது இன்று நேற்று தோன்­றி­ய­தல்ல, கட்சி முரண்­பா­டுகள் அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக நீண்­ட­கா­ல­மாக எமது சமூ­கத்தில் நீடித்து வந்த ஒரு­வி­ட­யம்தான். எனினும், அதற்கு சரி­யான சந்­தர்ப்­ப­மாக இந்த அர­சியல் சூழ்­நிலை மாறி­யி­ருக்­கி­றது. அதனை அவர்கள் சரி­யாக பயன்­ப­டுத்­திக்­கொள்ள சிந்­தனை போராட்­டத்தை முடுக்­கி­விட்­டுள்­ளதை காண்­கிறோம்.


இது சரி­யான சிந்­த­னையா? பிழை­யான சிந்­த­னையா என்­ப­தற்கு அப்பால், இந்த சிந்­தனை வியா­பிப்­ப­தற்கு முன்­னைய அர­சி­யல்­வா­தி­களின் பிழை­யான போக்­கு­களே காரணம் எனலாம்.


முஸ்­லிம்­களை வைத்தும், இஸ்­லாத்தின் பெய­ரிலும் இவர்கள் மேற்­கொண்ட முறை­யற்ற அர­சியல் செயற்­பா­டு­களின் விரக்­தியின் உச்­சமே இந்த நிலைப்­பாட்­டுக்கு கார­ண­மாகும். இதனை சில தரப்­புகள் சாத­க­மாக பயன்­ப­டுத்­திக்­கொள்ள முயற்­சிக்­கின்­றன. இதனால் வெற்­றி­பெ­றப்­போ­வது யார் தோல்­வி­ய­டை­யப்­போ­வது யார் என்­ப­துதான் கேள்வி.


“முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற மனநிலையையும் காண முடிகிறது. இதனால் முஸ்லிம் வாக்குகள் சிதறி பிரதிநிதித்துவம் இல்லாது செய்யப்படும் நிலையே உருவாகும்.”

உண்­மையில் யார் வென்­றாலும்? யார் தோற்­றாலும் முஸ்லிம் சமூகம் எப்­ப­டியும் தோற்­றுப்­போ­கத்தான் காத்­தி­ருக்­கி­றது. ஏனெனில் முஸ்லிம் அர­சியல் தலை­மை­க­ளிடம் ஒரு மாற்றம் ஏற்­ப­டும்­வரை நம்மை தோல்­வியே துரத்­திக்­கொண்­டி­ருக்கும் என்றே கூற வேண்டும்.


குறிப்­பாக இம்­முறை முஸ்லிம் வாக்­குகள் பல வகை­யிலும் சித­ற­டிக்­கப்­படும் சாத்­தி­யமே இருக்­கி­றது. 2015 இலும் 2020 இலும் ராஜ­பக்­சாக்­க­ளுக்கு எதி­ராக ஓர­ணியில் திரண்­ட­தனால் முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­தி­ப்ப­டுத்த முடிந்­தது.


குறிப்­பாக கண்டி, கொழும்பு, கேகாலை மற்றும் அநு­ரா­த­புரம் உள்­ளிட்ட தென் மாவட்­டங்­களில் முஸ்லிம் வேட்­பா­ளர்கள் ஐக்­கிய தேசியக் கட்சி அல்­லது ஐக்­கிய மக்கள் சக்தி கூட்­ட­ணியில் பல­மான வாக்கு வங்­கி­யுள்ள வேட்­பா­ள­ராக இருந்­தனர்.


இம்­முறை நிலைமை அப்­ப­டி­யல்ல, முஸ்­லிம்கள் ஓர­ணியில் திரளும் சந்­தர்ப்பம் இல்லை. ஏனென்றால், இது­வரை காலமும் ஐக்­கிய தேசியக் கட்சி அல்­லது ஐக்­கிய மக்கள் சக்­தியை மட்­டுமே முஸ்­லிம்கள் நம்­பினர். எனினும், இம்­முறை தேசிய மக்கள் சக்­தி­யையும் நம்பும் நிலைமை இருக்­கி­றது. அத்­தோடு, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அல்­லது ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி என்­பன மீது முஸ்­லிம்கள் விரக்­தி­ய­டைந்­தி­ருந்­தனர். அவர்கள் இம்­முறை தேர்தல் களத்தில் காணாமல் போய் உள்­ளனர். கடந்த காலங்­களில் ஒரே தெரிவு என்­றி­ருந்த நிலைமை இப்­போது பல தெரி­வு­க­ளா­கி­விட்­டது.


மட்­டு­மல்­லாமல், பல அணி­களும் திட்­ட­மிட்டு கள­மி­றக்­கப்­ப­டு­வதால் வாக்­குகள் வேண்­டு­மென்றே சித­ற­டிக்­கப்­படும் துர­திஷ்­ட­மான நிலை­மை­யொன்று உரு­வா­கி­யி­ருக்­கி­றது.


குறிப்­பாக முஸ்லிம் வாக்கு வீதம் கணி­ச­மாக உள்ள திகா­ம­டுல்ல மாவட்ட பிர­தி­நி­தித்­து­வ­மா­னது சிதைக்­கப்­படும் சாத்­தி­யமே உரு­வா­கி­யுள்­ளது. அம்­மா­வட்­டத்­தி­லேயே அதி­க­மான கட்­சி­களும் சுயேட்சைக் குழுக்­களும் கள­மி­றங்­கி­ளுள்­ளன. இதனால் நடக்­கப்­போ­வது வாக்­குகள் சித­ற­டிக்­கப்­பட்டு அம்­மா­வட்­டத்தில் பெறப்­பட்ட முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் குறையும் நிலை ஏற்­படும்.

மட்­டக்­க­ளப்பு மாவட்டம் ஏற்­க­னவே கடந்த பாரா­ளு­மன்ற தேர்­த­லின்­போது முன்­பை­விட ஒரு பிர­தி­நி­தித்­து­வத்தை இழந்­தி­ருந்­தது. இம்­முறை அதே நிலைதான் தொடரும் என்­பதை கள­நிலைவ­ரங்கள் மூலம் ஊகிக்­கலாம். சில­போது, அதையும் இழந்து நின்­றாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை என்றே தோன்­று­கி­றது.


முஸ்­லிம்­களின் ஆத­ர­வுத்­தளம் உள்ள மூன்று கட்­சிகள் ஒன்­றி­ணை­வதால் திரு­கோ­ண­மலை மாவட்டம் இரண்டு முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை தக்­க­வைத்து வந்­துள்­ளது. எனினும், இம்­முறை அந்த நிலைமை கொஞ்சம் மாற்­ற­ம­டைந்­தி­ருக்­கின்­றது. ஏனென்றால், இம்­முறை அந்த மூன்று தரப்பும் ஒன்­றாகி இணைந்­தி­ருந்­தாலும் மாற்­ற­மாக இரண்டு தரப்பு­க­ளுக்கு வாக்­குகள் பிரிந்து செல்லும் சாத்­தியம் இருக்­கின்­றது. திரு­கோ­ண­மலை மாவட்­டத்தை பொறுத்­த­மட்டில் அனைத்து இன மக்­களின் மொத்த சனத்­தொகை விகி­தா­சாரம் மிகச் சிறிய அள­வி­லேயே வித்­தி­யா­சப்­படும். இம்­முறை நிலைமை கொஞ்சம் மாற்­ற­ம­டைந்­தாலும் பெறு­பேறு மா­றி­ய­மையும். களத்தில் தேசிய மக்கள் சக்­தியின் பக்­கமும் முஸ்லிம் வாக்­குகள் திரும்­பு­வதால் போனஸ் ஆச­னத்­துடன் மாவட்­டத்தை வெல்லும் ஐக்­கிய மக்கள் கூட்­டணி தப்பிப் பிழைக்­குமா என கூர்ந்து அவ­தா­னிக்க வேண்­டி­யுள்­ளது.


அத்­தோடு, கண்டி மாவட்­டத்­திலும் தற்­போது மாறு­பட்ட அர­சியல் சூழலை காண­மு­டி­கி­றது. 1952 ஆம் ஆண்­டு­முதல் தொடர்ச்­சி­யாக கண்­டியில் பாது­காத்­து­வ­ரப்­பட்ட பிர­தி­நி­தித்­துவம் தற்­போது கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. குறிப்­பாக முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மீது அதி­ருப்தி நிலைமை காணப்­ப­டு­கின்­றது. அவர் கடந்த 30 வரு­டங்­களில் கூடு­த­லாக ஆளும் தரப்பில் அமைச்­ச­ராக இருந்­த­போ­திலும் கண்டி மாவட்­டத்­திற்­கான அபி­வி­ருத்தி விட­யத்தில் மக்கள் விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். எனினும், தேசிய மக்கள் சக்தி முன்­னி­றுத்­தி­யி­ருக்கும் வேட்­பாளர் பட்­டியல் முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்து வியா­பா­ரி­களை மட்­டுமே தேர்ந்­தெ­டுத்­துள்­ளமை அக்­கட்சி மீதான அதி­ருப்­தி­யையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.


இது இவ்­வா­றி­ருக்க கொழும்பு மாவட்ட வேட்­பா­ளர்கள் பட்­டி­யலில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவத்திற்கு விகி­தா­சார அடிப்­ப­டையில் எந்தப் பிர­தான கட்­சி­களும் இட­ம­ளிக்­க­வில்லை. மாவட்ட சனத்­தொ­கைக்கு ஏற்ப மூன்று வேட்­பா­ளர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட வேண்­டிய நிலையில் ஐக்­கிய மக்கள் சக்­தியும் புதிய ஜன­நா­யக முன்­னணி (சிலிண்டர்)யும் தலா இரு வேட்­பா­ளர்­களை கள­மி­றக்­கி­யி­ருக்­கி­றது. என்­றாலும் ஜனா­தி­ப­தியின் தேசிய மக்கள் சக்­தி­யா­னது ஒரே­யொரு வேட்­பா­ளரை மாத்­திரம் கள­மி­றக்­கி­யி­ருக்­கின்­றமை பெரும் ஏமாற்­றத்­தையே தரு­கி­றது. அத்­தோடு, கண்­டியைப் போன்று கொழும்பில் வாக்­குகள் ஒரே அணிக்கு திரள்­வது மிகவும் குறைவே. ஏனெனில் அண்ண­ள­வாக மூன்று இலட்­சத்தை அண்மிக்கும் கொழும்பு முஸ்லிம் வாக்கு­களில் ஒரே­யொரு தடவை மாத்­திரம் சுதந்­திரக் கட்சி சார்பில் போட்­டி­யிட்ட ஏ.எச்.எம்.பௌஸி ஒரு இலட்சம் வாக்­கு­களை பெற்றார். ஐக்­கிய தேசியக் கட்­சியில் போட்­டி­யிட்ட எவரும் இலட்­சக்­க­ணக்­கான வாக்­குகள் எடுக்­க­வில்லை. அத்­தோடு, 2010 ஆம் ஆண்டு இம்­மா­வட்டம் முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை இழந்­தி­ருந்­தது. எனவே, இந்த தேர்­த­லா­னது கொழும்பில் பிர­தி­நி­தித்­துவம் இழக்­கப்­படும் சந்­தர்ப்­பமே உரு­வா­கி­யுள்­ளது.


இத­னி­டையே, கடந்த மூன்று தேர்­தல்­க­ளிலும் உட்­கட்சிப் பூசல்கள் கார­ண­மாக களுத்­துறை மாவட்டம் முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை இழந்­தி­ருந்­தது. இம்­முறை அதை சாத்­தி­யப்­ப­டுத்த அதிக பிர­யத்­த­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டாலும் முஸ்லிம் வாக்­குகள் பிர­தா­ன­மாக மூன்று அணி­க­ளுக்கு பிள­வு­ப­டு­வதால் பிர­தி­நி­தித்­துவம் பெறு­வதில் களுத்­துறை மாவட்டம் இம்­மு­றையும் ஏமாற்­றத்­தையே சந்­திக்­கலாம்.


தவமாய் தவ­மி­ருந்து 30 வரு­டங்­களின் பிறகு கடந்த 2020 இல் முஸ்லிம் தரப்­புகள் ஓர­ணியில் திரண்டு பிர­தி­நி­தித்­து­வத்தை உறு­திப்­ப­டுத்­தினர். எனினும், தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பிர­தி­நி­தியின் செயற்­பா­டுகள் பெரும் அதி­ருப்­திக்­குள்­ளா­ன­துடன், புத்­தளம் மக்­க­ளுக்கும் தலை­கு­னிவை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.


இந்­நி­லையில், இம்­முறை புத்­தளம் ஐக்­கிய மக்கள் கூட்­டணி ஊடாக மு.கா., அ.இ.ம.கா. என்­பன ஐக்­கி­யப்­பட்­டி­ருந்­தாலும் இன்னும் சில தரப்­பு­களும் அங்கு பிரிந்து நிற்­கின்­றன. அத்­தோடு, தேசிய மக்கள் சக்­திக்கும் வாக்­குகள் பிரிந்து செல்லும் நிலைமை இருப்­ப­தையும் காணலாம்.


அநு­ரா­த­புரம் மாவட்டம் பிர­தி­நி­தித்­து­வத்தை இழக்கும் விளிம்பில் இருக்கும் நிலையில் குரு­நாகல் மாவட்டம் நீண்ட கால தாகத்­திற்கு விடை கிடைக்­குமா என எதிர்­பார்த்து நிற்­கி­றது. இத­னி­டையே, 50 ஆயி­ரத்­துக்கும் குறைந்த முஸ்லிம் வாக்­கு­க­ளு­டைய கேகாலை மாவட்டம் 1989 முதல் பிர­தி­நி­தித்­து­வத்தை உறுதிபடுத்தியிருக்கிறது. எனினும், இம்முறை திசைமாறிய பயணங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்யலாம் என அஞ்சப்படுகிறது.

இப்படி நாடு முழுவதும் நிலைமை காரணம் தப்பினால் மரணம் என்ற நிலையே முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.


இந்த நிலைமை உருவாவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதுவரை மக்கள் வாக்களித்த கட்சிகள் முஸ்லிம் சமூகம் விடயத்தில் செயற்பட்ட விதம். அத்தோடு, முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் கடந்த 30 வருட காலமாக ஸ்திரமான ஆட்சியமைக்காமையினால் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியாமற் போனமை என்பனவும் உள்ளடங்கும். இதனால் விரக்தியடைந்த முஸ்லிம் மக்கள் மாற்று சக்திகளை கடந்த காலங்களிலும் தேடினர். மாற்று சக்திகளாக நினைத்த அந்த தரப்புகளும் ஏமாற்றத்தையே தந்திருக்கிறன. எனவே, இம்முறை தேர்தலில் முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டிற்கு ஒரு பிரிவினர் வந்திருக்கின்றனர். முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற மனநிலையையும் காண முடிகிறது. இதனால் முஸ்லிம் வாக்குகள் சிதறி பிரதிநிதித்துவம் இல்லாது செய்யப்படும் நிலையே உருவாகும்.– Vidivelli

No comments

Powered by Blogger.