Header Ads



யூதர்களுக்கு பள்ளிவாசலில் அடைக்கலம் கொடுத்த அப்துல் காதர்



Aashiq Ahamed -


1492-இல் முஸ்லிம்களின் ஆட்சி ஸ்பெயினில் முடிவுற்றது. முஸ்லிம்களின் வசம் இருந்த கடைசி நகரமான க்ரனடாவும் அந்த ஆண்டில் வீழ்ச்சியடைந்து, ராணி இசபெல்லாவிடம் ஸ்பெயினின் ஆட்சி அதிகாரம் வந்தது. ஸ்பெயின்வாழ் முஸ்லிம்களும், யூதர்களும் மிகப்பெரும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழக்க, வட ஆப்பிரிக்காவின் இமாம்களிடமிருந்து ஸ்பெயின் முஸ்லிம்களுக்கு ஒரு தகவல். 


அதாவது கொடுமைகளில் இருந்து தப்பிக்க தாங்கள் கிருத்துவத்தை ஏற்றுக்கொண்டதாக அரசாங்கத்திடம் அறிவித்துவிடுவது, ஆனால் மறைவில் முஸ்லிம்களாக தொடர்வது. முஸ்லிம்களும் அதை செய்தனர். இவ்வாறு செய்தவர்களும் இவர்களது சந்ததியினரும் "மொரிஸ்கோஸ்" என்று அழைக்கப்பட்டார்கள். ஒரு கட்டத்தில், இவர்களை ஸ்பெயின் அரசாங்கம் வெளியேற்ற, சுமார் 50,000 மொரிஸ்கோஸ்கள் பிரான்சிற்குள் நுழைந்ததாக குறிப்பிடுகிறார் வரலாற்று ஆசிரியர் ஹென்றி லாபைர். ஒரு மிகப்பெரும் கூட்டமாக முஸ்லிம்கள் பிரான்ஸ்சிற்குள் நுழைந்ததால் இச்சம்பவம் முக்கியத்துவம் பெறுகிறது.  


இரண்டாம் உலகப்போர் காலக்கட்டம். ஜெர்மானிய நாஜி படை பிரான்ஸ்சை கைப்பற்றுகிறது. பிரெஞ்சு யூதர்கள் இக்கட்டான சூழலுக்கு ஆளாகின்றனர். பாரிஸ் நகரின் பெரிய பள்ளிவாசல் நூற்றுக்கணக்கான யூதர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறது. இப்பள்ளியின் தலைமை இமாமான அப்துல் காதர் பென் இந்நிகழ்வில் பெரும் பங்காற்றுகிறார். 


அடைக்கலம் கொடுக்கப்பட்ட யூதர்கள், முஸ்லிம்கள் தான் என்பதற்கும், இவர்களின் மூதாதையரும் முஸ்லிம்கள் தான் என்பதற்குமான ஆவணங்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தால் போலியாக தயாரிக்கப்பட்டு நாஜி அதிகாரிகளிடம் காட்டப்படுகிறது. இதனால் அடைக்கலம் கொடுக்கப்பட்ட யூதர்கள் வதைமுகாமிற்கு அனுப்பப்படுவதில் இருந்து காப்பாற்றப்பட்டனர். இப்படி போலியாக தயாரிக்கப்பட்ட ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை மட்டும் 1600 இருக்கும் என ஒரு பிரெஞ்சு ஆவணம் சொல்கிறது. இச்சம்பவம் குறித்த உண்மைகள் நீண்ட காலத்திற்கு பிறகே வெளிவந்தன.     


நிகழ்காலத்திற்கு வருவோம்....2013-ல், நியூயார்க் டைம்ஸ் இதழ், அதிகப்படியான பிரெஞ்சு மக்கள் இஸ்லாமை நோக்கி வருவதாக செய்தி வெளியிட்டது. இஸ்லாமை ஏற்பவர்களின் வருடாந்திர எண்ணிக்கை கடந்த 25 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்துவிட்டதாக கூறியது அச்செய்தி. பிரெஞ்சு உள்துறை அமைச்சக அதிகாரியை மேற்கோள் காட்டி, குறிப்பாக, 2000-ஆம் ஆண்டிற்கு பிறகு இஸ்லாமிய தழுவல்கள் வியக்கத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகவும் கூறியது நியூயார்க் டைம்ஸ். 


ஏன் அதிகப்படியான பிரெஞ்சு மக்கள் இஸ்லாமை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர் என்பதற்கும் காரணம் சொன்னது இவ்விதழ். இஸ்லாம், தெளிவான கட்டமைப்பை கொண்டிருக்கின்றது, தீவிர ஒழுக்கத்தையும், குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்குமான பங்கு தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. 


தங்கள் மனங்களில் இஸ்லாம் அமைதியை கொண்டு வந்துள்ளதாகவும், இஸ்லாமை தழுவிய பிறகு உலக வாழ்க்கை மீதான தங்களின் பார்வை தெளிவாகிவிட்டதாகவும் மக்கள் கூறுவதை பதிவு செய்கிறது நியூயார்க் டைம்ஸ். 


ப்யூ ஆய்வு நிறுவனத்தின் தகவலின்படி 1990-ல், சுமார் ஐந்து இலட்சமாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை, 2017-ல் 57 இலட்சமாக உயர்ந்திருக்கிறது. இது பிரெஞ்சு மக்கட்தொகையில் 8.8% ஆகும். 2050-ல் பிரெஞ்சு முஸ்லிம் மக்கட்தொகை 86 இலட்சமாக உயரும் (12.7%) எனவும் கணிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு அரசு கட்டுப்பாட்டில் உள்ள Mayotte தீவு முஸ்லிம் பெரும்பான்மை பகுதியாகும். 


கடந்த இருபது ஆண்டுகளாக பிரெஞ்சு முஸ்லிம்களின் மார்க்கப்பற்றும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில், 40% முஸ்லிம்கள் ஐவேளை தொழுவதாகவும், 70%-த்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் நோன்பு நோற்பதாகவும் கூறியிருக்கின்றனர். மேலும், அறுதிப்பெரும்பான்மையான இளைஞர்கள் இஸ்லாமிய கோட்பாடுகளில் தீவிர பிடிப்பு கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றனர். இவை கடந்த ஆய்வுகளுடன் ஒப்பிடும்போது அதிகமாகும். 


பிரெஞ்சு அரசு தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி வந்ததாலும், 2019 ப்யூ நிறுவன ஆய்வின்படி 72% பிரெஞ்சு மக்கள் முஸ்லிம்கள் மீது பாசிட்டிவ் பார்வையையே கொண்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர். அடுத்த கால்பந்து உலக கோப்பையை கத்தார் நடத்துவதற்கு தூதராக செயல்பட்ட கால்பந்து உலக ஜாம்பவான் ஜிடேன் முதற்கொண்டு பல்வேறு முஸ்லிம்கள் பிரெஞ்சு சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களாக திகழ்கின்றனர். இதில் கணிசமானோர் இந்த தலைமுறை முஸ்லிம்களாவர். பிரெஞ்சு முஸ்லிம்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் சோதனைகளில் இருந்து விரைவில் விடுபட இறைவன் உதவி புரிவானாக.... 


படம் 1: பாரிஸ் பெரிய பள்ளிவாசல் 

படம் 2: இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களுக்கு பள்ளிவாசலில் அடைக்கலம் கொடுத்து காத்த அப்துல் காதர் பென். 

செய்திக்கான ஆதாரங்கள்:

1. Pew Research 

2. New York Times.

3. La Croix 

4. Qantara

5. TRT world

6. Wikipedia

No comments

Powered by Blogger.