அதிகாரிகள் கூட்டத்திற்கு வேட்பாளர்கள் அழைப்பு: நீர்கொழும்பு மாநகர ஆணையாளருக்கு எதிராக முறைப்பாடு
- இஸ்மதுல் றஹுமான் -
அரச அதிகாரிகளுக்கான கூட்டத்திற்கு தேர்தல் வேட்பாளர்களை அழைத்தது தொடர்பாக நீர்கொழும்பு மாநகர சபை ஆணையாளருக்கு எதிராக சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு, போரத்தொட்ட மீன் வியாபாரிகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையை கலந்துரையாட கடந்த 25ம் திகதி நீர்கொழும்பு மாநகர ஆணேயாளரினால் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அக் கூட்டத்தில் பிரதி பொலிஸ் மா அதிபர், நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கொச்சிகடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சுட்றாடல் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி, பாதுகாப்பு அமைச்சின் இரு அதிகாரிகள், கடலோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரி, நீர்கொழும்பு மாநகர வருமான பரிசோதகர்கள், நீர்கொழும்பு சுற்றுலா சங்க பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் பாராளுமன்ற தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் இரு வேட்பாளர்களும், உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக நீர்கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிட நியமனப் பத்திரம் தாக்கல் செய்துள்ள ஒருவரையும் இக் கலந்துரையாடளுக்கு ஆணையாளர் அழைத்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் கம்ப்ஹா மாவட்டத்தின் சுயேட்ச்சை குழு இல. 6 இன் அங்கீகாரம் அளிக்கப்பட்ட முகவர் பி. பீ. அசேல சன்ஞீவ சமர்பித்துள்ள முறைப்பாட்டில் இது திட்டமிட்ட தேர்தல் சட்டத்தை மீறும் செயல் எனவும் அதற்கு தனது பலத்த எதிர்பையும் தெரிவிப்பதாகவும் இது தொடர்பாக ஆணையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.
மேலும் அந்த முறைப்பாட்டு கடிதத்தில் அரச அதிகாரிகள் கலந்துகொள்ளும் கூட்டத்திற்கு வேட்பாளர்கள் பங்குபற்றியது தொடர்பாக நீங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன?, இவ்வாறான கூட்டத்தை மாநகர சபையில் நடாத்தியதற்கு ஆணையாளருக்கு எதிராக மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கை என்ன?, மாநகர சபையின் பரிபாலனத்தில் வேட்பாளர்களை சம்பந்தப்படுத்தியதற்கு ஆணையாளருக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன? என்ற கேள்விகளை கேட்டுள்ளதுடன் நீதியும் பக்கசார்பற்ற தேர்தலுக்காக அர்பனித்துள்ள தேர்தல் ஆணைக்குழு முறைப்பாடு தொடர்பாக எடுக்கும் நடவடிக்கையை எழுத்து மூலம் தனக்கு அறிவிக்குமாறும் முறைப்பாட்டாளர் கோரியுள்ளார்.
முறைப்பாட்டின் பிரதிகளை கம்பஹா மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர், மேல் மாகாண ஆளுனரின் செயலாளர், மேல் மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஆகியோர்களுக்கு அனுப்பியுள்ளார்.
Post a Comment