Header Ads



விக்னேஸ்வரனுக்கு சொற்களால் அடிகொடுத்த சுமந்திரன்


- நிதர்ஷன் வினோத்  -


ஓர் ஆன்மீக வாதி போல தென்பட்ட ஒருவரை நாங்கள் வலிந்து கொண்டு வந்தோம். அவர், யாழ்ப்பாணத்தில் பெட்டி படுக்கையுடன் ஓடிவிட்டார். எனினும், குட்டிமான்களை விட்டுவிட்டு ஓடிவிட்டார். அந்த மான்களை அடித்து துரத்தவேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.


வடமராட்சியில் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர், அங்கு மேலும் தெரிவித்ததாவது,


தமிழ் மக்களின் பலமான ஓர் அரசியல் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அவ்வாறு ஒற்றுமையாக ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி முதலில் குழப்பத்தை ஏற்படுத்தியது. 


இந்தக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் ஒற்றுமையாக பலமான அமைப்பாக கூட்டமைப்பு செயற்பட்டு வந்தது.  


இந்தக் கூட்டமைப்பில் இருந்த கட்சிகளுக்கிடையில் அடுத்த தேர்தலில் ஏற்பட்ட ஆசனப் பங்கீட்டு பிரச்சனையினால் இதிலிருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2010 இல் வெளியேறியது. 


ஆனால், அடுத்த வருடத்திலேயே கூட்டமைப்பிற்குள் வருவதற்கு பலர் விரும்பினார்கள். அதற்கமைய அவர்களில்  நேர்முகப் பரீட்சை வைத்து இரண்டே இரண்டு கட்சிகளை உள்வாங்கினோம். அதில் ஒன்று சித்தார்த்தன் தலைமையிலான புளொட் மற்றும் திரும்பவும் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியை உள்வாங்கி கொண்டோம்.


அப்படியாகத் தான் 2011 நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் 2013 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலிலும் முகங்கொடுத்தோம். இந்த மாகாண சபைத் தேர்தலில் இரண்டு போனஸ் ஆசனங்கள் எமக்கு கிடைக்கப்பெற்ற போது அதிலே ஒன்றை தமக்கு தர வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணி கோரிய போதும் அது தமக்கு கிடைக்காத்தால் இந்த கூட்டமைப்பில் இருந்து மீண்டும் தமிழர் விடுதலைக் கூட்டணி விலகிச் சென்றது.


இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2015 ஆம் ஆண்டு பொது தேர்தலில் கிடைத்த இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்று தனக்கு தரவில்லை என்ற காரணத்தினாலே ஈபிஆர்எல்எப் விலகிப் போனது. 


இப்படியாக ஆசனப்பங்கீடு அல்லது போனஸ் ஆசனம் அல்லது தேசியப்பட்டியல் ஆசனம் என்பவை தமக்கு கிடைக்கவில்லை என்பதால் தான் கூட்டமைப்பில் இருந்த கட்சிகள் பலவும் விலகிப் போயின. ஆனால் எவரையும் நாங்கள் துரத்தவில்லை. வெளியே போகவும் சொல்லவில்லை.


இவ்வாறாக ஆசனப் பங்கீடு மற்றும் போனஸ் ஆசனங்களுக்காக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகள் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய நிலையிலும் புளொட் மற்றும் ரெலோ தொடர்ந்தும் கூட்டமைப்பில் இருந்து வந்த்து.


ஆனால், கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தல் காலத்திலே தமிழரசுக் கட்சி தனித்து போகப் போவதற்கு முடிவெடுத்ததாக ஒரு பொய்யான பரப்புரையொன்று செய்யப்பட்டது. அது அந்த தேர்தல் முறையிலே இருந்த ஒரு விடயம். ஆக எங்களுக்குள்ளேயே இருக்கிற கட்சிகள், ஆசனங்களை வைத்திருந்தால் நாங்கள் சேர்ந்தே அறுதிப் பெரும்பான்மையை பெற முடியும் என்பது தான் எங்களது அடிப்படையாக இருந்தது. அது தான் அந்த எண்ணக்கருவாகும். 


இந்த குழப்பத்திற்கு கட்சி முடிவுகளை அரைகுறையாக வெளியிடும் ஊடகங்களுக்கும் பெரிய பொறுப்பு உள்ளது.இன்றைக்கு பல ஊடகங்களுக்கு இந்த சிறிய நுன்னிய வித்தியாசங்கள் புரிவதில்லை. அவர்கள் தாமாகவே கட்சி முடிவு என்பது போல தமிழரசு தனிவழி செல்ல தீர்மானம் என எழுதிவிட்டார்கள். 


ஆக? ஊடகங்கள் சொல்வதை நம்பி நாங்கள் சொல்வதை நம்பாமல் நீங்கள் தானே தனிவழி என ஏற்கனவே தீர்மானித்து விட்டீர்கள் என்பதால் நாங்கள் தனித்து தான் போவோம் என்று கூறினார்கள். 


ஆனாலும், ஒற்றுமை என்கிற ஏக்கம் எங்கள் மக்கள் மனங்களிலே இருக்கிறது. அது தவறான ஓர் ஏக்கம் அல்ல. நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால், யாரோடு ஒன்றாக இருப்பது என்பதில் பெரிய கேள்வி இருக்கிறது. 


அது டக்ளசோடு ஒன்றாக இருக்கலாமா? பிள்ளையானோடு ஒன்றாக இருக்கலாமா? கருணாவோடு ஒன்றாக இருக்கலாமா? கட்சியை விட்டு கட்சி தாவுகிற வியாழேந்திரனோடு ஒன்றாக இருக்கலாமா? அப்ப யாரோடு ஒன்றாக இருப்பது என்பது தான் கேள்வியாக உள்ளது.


 மக்களுடைய எதிர்பார்ப்பு காரணமாக நாங்கள் கண்டதையும் சேர்த்து வைத்திருந்த ஒரு காலம் இருந்தது தான். இவ்வாறான நிலையில் நெற்றியில் பட்டை அணிந்து சிவப்பு பொட்டு வைத்து ஓர் ஆன்மீக வாதி போல தென்பட்ட ஒருவரை நாங்கள் வலிந்து கொண்டு வந்து ( இதற்காக பல தடவைகள் மக்களிடம் மன்னிப்பு கூட்டிருகிறேன்) முதல்வராக நிறுத்தினோம். 


இன்றைக்கு பெண்களுக்கு சாராய லைசன்ஸ்க்கு ஒப்புதல் வாக்குமூலம்  கொடுத்துவிட்டு பெட்டி படுக்கையோடு யாழ்ப்பாணத்தை விட்டே இவர் போயிற்றார். ஆனால் போனவர் தன்னுடைய கட்சியையும் கூட்டி கொண்டு போயிருக்க வேண்டும்.


ஆனால்,  அப்படி செய்யாமல் சில குட்டிமான்களை விட்டுவிட்டு போயிருக்கிறார்.சில மான் குட்டிகளை நீங்கள் கேளுங்கோ நான் ஒளிந்து இருக்கிறேன் என்று கூறி இப்போது ஒளிந்திருக்கிறார்.


ஆகவே, வாக்காளர்களாகிய நீங்கள் அவர் விட்டு போன அந்த குட்டிமான்களை நீங்கள் அடித்து துரத்த வேண்டும். அது எப்படியான கட்சி என்று அனைவரும் முதலில் பார்க்க வேண்டும். 


வடக்கையும் கிழக்கையும் பிரித்தவனுக்கு வடக்கும் கிழக்கும் இணைந்தது என்பதை காண்பிக்க வேண்டும். வடக்கும் கிழக்கும் இணைந்தாக போவதாக இருந்தால் இலங்கை தமிழரசுக் கட்சியால் மட்டும் தான் இது முடியும் என்றார். 

No comments

Powered by Blogger.