Header Ads



கடும் மழை - வெள்ள, மண்சரிவு எச்சரிக்கை


நாடளாவிய ரீதியில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.


இதன் காரணமாக திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா-அல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளுக்கு நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.


நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் கொந்தளிப்பு காரணமாக, தற்போதைய மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதேவேளை, நேற்று (10ம் திகதி) காலை 8.30 மணி முதல் இன்று (11ம் திகதி) அதிகாலை 2.30 மணி வரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தின் ஹன்வெல்ல பிரதேசத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியிருந்த நிலையில், அது 196.5 மில்லி மீற்றராக பதிவாகியுள்ளது.


கம்பஹா திவுலபிட்டிய பிரதேசத்தில் 173.5 மில்லிமீற்றர் மழையும் களுத்துறை வொகன் தோட்டப் பகுதியில் 163.5 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளது.


இதேவேளை, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.


காலி, களுத்துறை, கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு 2ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பதுளை, கொழும்பு, கம்பஹா, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 01ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.