Header Ads



எரிபொருளை ஏற்றிச்சென்ற ரயிலில் மோதிய யானைக் கூட்டம்


கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு முனையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயிலில் காட்டு யானைக் கூட்டம் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.



இன்று (18) அதிகாலை 3.30 மணியளவில் மின்னேரிய மற்றும் ஹிகுராக்கொட ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


இதில் ரயிலின் நான்கு எரிபொருள் தாங்கிகள் தடம்புரண்டு அவற்றில் இரண்டு கவிழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


அத்துடன் ரயில் இயந்திர சாரதி மற்றும் கட்டுப்பாட்டாளர் பயணித்த பெட்டிகளும் தடம்புரண்டுள்ளன.


இந்த விபத்தில் காட்டு யானையொன்று உயிரிழந்துள்ளதுடன் மேலும் பல காட்டு யானைகள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் எரிபொருள் எண்ணெய் தாங்கிகள் கவிழ்ந்ததில் தண்டவாளத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.


தற்போது மட்டக்களப்பு - கொழும்பு பிரதான மார்க்கத்தில் இயங்கும் ரயில் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், இன்று காலை கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரை இயக்கப்படவிருந்த ரயில் சேவையையும், மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி இயக்கப்படவிருந்த ரயில் சேவையையும் இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

No comments

Powered by Blogger.