Header Ads



வாக்காளர், வேட்பாளர்களுக்கு முக்கிய 7 அறிவிப்புக்களும், 11 விசேட வழிகாட்டல்களும்


இஸ்லாம் ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம் என்ற வகையில் அது நம்பிக்கைக் கோட்பாடு, வணக்க வழிபாடுகள், கொடுக்கல்வாங்கல்கள், பண்பாடுகள், அரசியல், சமூக வாழ்வு போன்ற மனித வாழ்வின் அனைத்து துறைகளிலும் மனிதனுக்கு வழிகாட்டியுள்ளது.


அந்த வகையில் ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் மகத்தான பணிக்கு வாக்குரிமையின் மூலம் அங்கீகாரம் கொடுக்கும் ஒரு சந்தர்ப்பமாகவே தேர்தல்கள் அமையப்பெற வேண்டும் என்பது இஸ்லாமிய கண்ணோட்டமாகும்.


தேர்தலில் வாக்களித்தல் என்பது இஸ்லாமிய கண்ணோட்டத்தில் 'ஷபாஅத்' எனும் சிபாரிசு செய்தலும் 'வகாலத்' எனும் பொறுப்புச் சாட்டலுமாகும். இவையனைத்துக்கும் மேலாக தேர்தலில் வாக்களிப்பது என்பது மார்க்கத்தின் பார்வையில் 'ஷஹாதத்' எனும் சாட்சி சொல்லலாகும். அது பொய்ச் சாட்சியமாக அமைந்து விடாமல் மெய்ச்சாட்சியமாக அமைய வேண்டும் என்பது இன்றியமையாதது,எனவே வாக்காளர்கள் வாக்களிப்பில் பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றோம் :


1. அரசியலை ஓர் உயர் சமூகப் பணியாகக் கருதி செயற்படுபவர்களாக எமது தெரிவுக்குரியவர்கள் அமைதல் வேண்டும்.


2. நாட்டை நேசிக்கின்ற சமூகப்பற்றுள்ள, பிரதேசத்தைக் கட்டியெழுப்பும் உணர்வும் வல்லமையும் கொண்டவர்களுக்கே எமது வாக்குகள் அளிக்கப்படல் வேண்டும் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும்.


3. இன, மத பேதங்களைத் தூண்டும் வகையில் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்காதோருக்கும், நன்னடத்தையும் நல்லொழுக்கமும் உடையவர்களுக்குமே எமது வாக்குகள் அளிக்கப்படல் வேண்டும்.


4. நாட்டுச் சட்டங்களை மீறாத, வன்முறைகளில் ஈடுபடாத வேட்பாளர்களைத் தெரிவிற்கு உட்படுத்தல் வேண்டும்.


5. மாற்று அரசியல் கட்சிகளையும் வேட்பாளர்களையும் மதிக்கின்ற,பண்பாடாக நடந்துகொள்கின்ற,வேட்பாளர்களே எமது தெரிவுக்குரியோர் ஆவர்.


6. சமூக வலைத்தளங்களில் முறையற்ற விமர்சனங்கள், தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்கள் என்பவற்றைத் தவிர்ந்துகொள்ள வேண்டும்.


7. அரசியல் கட்சிகளின் தலைமைகளைத் தூற்றி தரக்குறைவாக விமர்சிப்பதையும் பொதுவெளியில் இழிவுபடுத்துவதையும் தவிர்ந்து கொள்ளல் வேண்டும்.


சுருங்கக்கூறின், எமது வாக்குகள் ஏக காலத்தில் நல்லவராகவும் வல்லவராகவும் விளங்குகின்ற வேட்பாளர்களுக்கு வழங்கப்படுவதை நாம் உத்தரவாதப் படுத்திக் கொள்வது எமது தலையாய கடமையாகும்.


பொதுத் தேர்தலில் களமிறங்கியிருக்கின்ற கட்சிகளும் வேட்பாளர்களும் பின்வரும் வழிகாட்டல்களைப் பேணி நடக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்:


1. எமது தாய் நாடான இலங்கை மண்ணில் நல்லதோர் ஆட்சி மலர வேண்டும்,எல்லா சமூகங்களுக்கும்,சமயத்தவர்களுக்கும் மத்தியில் நல்லிணக்கமும்,ஐக்கியமும் உருவாகி,நாடு சகல துறைகளிலும் வளர்ச்சி கண்டு முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதே உங்களது எதிர்பார்ப்பாக அமைதல் வேண்டும்.


2. இந்த வகையில் நல்லதோர் ஆட்சிக்கான சிறந்த முன்னுதாரணப் புருஷர்களாக நீங்கள் திகழ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.


3. பதவி என்பது ஓர் அருள் மட்டுமல்ல, அது மிகப்பெரும் அமானிதம் என்பதையும் நீங்கள் மனதிற்கொள்ள வேண்டும்.


4. உங்களது தனிப்பட்ட வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக அரசியல் வாழ்விலும், ஆன்மிக, தார்மீக, ஒழுக்கப் பண்பாடுகளை பேணுவதில் கரிசனையோடு இருத்தல் வேண்டும்.


5. முஸ்லிம் வேட்பாளர்களும் அரசியல் தலைமைகளும் எளிமை, தியாகம், அர்ப்பணம்,முதலான மெச்சத்தக்க பண்புகளை பிரதிபலித்து இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் நற்பொயர் பெற்று கொடுப்பவர்களாக விளங்க வேண்டும்.


6. நீதியைக் கடைபிடித்து நேர்மையாகவும்,நியாயமாகவும் நடந்து கொள்வதோடு,அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடல், வன்முறைகளில் ஈடுபடல், மக்கள் மத்தியில் குரோதத்தையும் பகைமையையும் விதைத்தல்,போன்ற இழி செயற்பாடுகளை முழுமையாக தவிர்ந்துகொள்ளல் வேண்டும்.


7. எந்நிலையிலும் எமது நடவடிக்கைகள், செயற்பாடுகள் தனி மனிதர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ அநீதி இழைக்கும் வகையில் அமைந்து விடாமல் இருப்பதை உத்தரவாதப்படுத்துவது அவசியமாகும்.


8. தேர்தல் பிரச்சாரங்களின் போது ஏனைய கட்சி வேட்பாளர்களைத் தரக்குறைவாக பேசுவதையும் நாகரிமற்று விமர்சிப்பதையும் தவிர்ந்துகொள்ள வேண்டும்.


9. அவ்வாறே தத்தமது சமூகத்தின் உரிமைகள் குறித்துப் பேசுகின்ற போதும் சகோதர இனத்தவர்களின் உணர்வுகள் புண்படாத வகையில் நாகரிகமாகவும் இங்கிதமாகவும் பேசுவதும் செயற்படுவதும் முக்கியமானது.


10. சகல மதத்தினரும் சுதந்திரமாகவும் மத உரிமைகளுடனும் வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்படுவதற்காக கட்சி வேற்றுமைகளை மறந்து ஓரணியில் நின்று குரல்கொடுக்க முன்னிற்க வேண்டும்.


11. பாராளுமன்றம் என்பது நாட்டின் சட்டங்களை உருவாக்கும் அதியுயர் சபையாகும். அதில் மனித அடிப்படை இயல்புகள், விழுமியங்கள், மத நம்பிக்கைக் கோட்பாடுகள் ஆகியவற்றிற்கு முரணான சட்டவாக்கங்களுக்கு துணை போகாதவர்களாக இருத்தல் வேண்டும்.


நாட்டின் இறைமையையும், அதன் வளங்களையும் பாதுகாப்பவர்களாகவும்,துஷ்பிரயோகங்களுக்கு துணை போகாதவர்களாகவும் இருத்தல் வேண்டும்.


எல்லா நிலைகளிலும் முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வோமாக! அவன் நம் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக!


அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா

பதில் தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments

Powered by Blogger.