Header Ads



அறுகம்பே தாக்குதல் திட்டம், இந்தியாவே தகவல் வழங்கியது - தாக்குதலுக்காக 50 இலட்சம் ரூபா


 (அததெரண)


அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் வழங்கப்பட்டதாக இன்று (23) தெரியவந்துள்ளது.


அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலுக்கு அருகில் அமைந்துள்ள அறுகம்பே பகுதியானது, அலைச்சறுக்கு (Surfing) செய்பவர்கள் அடிக்கடி வந்து செல்லும், உலகின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.


அந்தப் பகுதி இஸ்ரேலியர்கள் அதிகம் கூடும் பகுதியாகவும் காணப்படுகிறது.


இவ்வாறானதொரு பின்னணியில் அறுகம்பே பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கு அறிவித்துள்ளன.


இது தொடர்பான தாக்குதல் அக்டோபர் 19 முதல் 23 வரை நடத்தப்படலாம் என இந்திய உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.


இலங்கையைச் சேர்ந்த இருவர் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் ஈராக்கைச் சேர்ந்தவர் என்றும் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரிவிக்கப்பட்டது.


தாக்குதலுக்காக அவர்களுக்கு சுமார் 50 இலட்சம் ரூபா வழங்கப்பட்டதாகவும் அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன்படி குறித்த இருவரின் பெயர்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இந்திய புலனாய்வு அமைப்புகளால் இந்நாட்டு பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.


அண்மைய நாட்களில் ஹிஸ்புல்லாஹ் தலைவர்களை இஸ்ரேல் கொன்றமைக்கு பழிவாங்கும் முகமாக இந்த நாட்டில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இத்தகவலைப் பெற்றுக்கொண்ட பாதுகாப்பு தரப்பினர் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பலப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.


அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் எவ்வாறு பாதுகாப்பை பலப்படுத்தி அங்குள்ள வெளிநாட்டினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளனர் என்பதை அவதானிக்க முடிந்தது.


அறுகம்பே பிரதேசத்தின் பாதுகாப்பின் பின்னணியில் இஸ்ரேலியர்கள் வருகை தரும் வெலிகம உட்பட தென் மாகாணத்திலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


எல்ல பிரதேசத்திலும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இதேவேளை, அறுகம்பே மற்றும் தெற்கு மற்றும் மேற்கு கரையோரப் பிரதேசங்களில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு நாட்டில் தங்கியுள்ள இஸ்ரேலிய மக்களை இஸ்ரேலிய தேசிய பாதுகாப்புத் தலைமையகம் இன்று அறிவித்தது.


இதன்படி, அறுகம்பே கரையோரத்திற்கு மேலதிகமாக காலி, ஹிக்கடுவ மற்றும் வெலிகம போன்ற பிரதேசங்களில் இருந்து இஸ்ரேலிய பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு  எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள பகுதிக்கு உடனடியாக செல்லுமாறும் அல்லது உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறும் இஸ்ரேல் அரசாங்கம் இந்த அறிவிப்பின் மூலம் அவர்களுக்கு அறிவித்திருந்தது.


இதேவேளை, மறு அறிவித்தல் வரை அறுகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


அப்பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்க தூதரகம் தூதரகம் தெரிவித்துள்ளது.


மேலும் பயண ஆலோசனை ஒன்றை வௌியிட்டுள்ள அமெரிக்க தூதரகம், சந்தேகப்படும்படியான எதைக் கண்டாலும் 119 என்ற எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது.


இதனைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகம், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயங்கள் ஆகியவற்றின் அறிவிப்பின் அடிப்படையில் நாட்டில் தங்கியுள்ள தமது பிரஜைகளுக்கு வழங்கப்பட்ட பயண வழிகாட்டிகளை ஒரே நேரத்தில் புதுப்பித்துள்ளன.


இதேவேளை, வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினர் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.