Header Ads



இஸ்ரேலியர்க்கு அச்சுறுத்தல், தவறான செய்திகளுக்கு பலியாக வேண்டாம், கைதான 3 பேர் மேலதிக விபரங்கள் மக்களுக்கு தெரிவிக்கப்பட மாட்டாது


அம்பாறை அறுகம்பே பகுதியில் இஸ்ரேல் பிரஜைகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில், வியாழக்கிழமை (24) மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர்,  சந்தேகநபர்களான இலங்கைப் பிரஜைகள் அனைவரும் தற்போது சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தினார்.


சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட மாட்டாது எனவும், அவ்வாறு செய்வது விசாரணைகளுக்கு இடையூறாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இம்மாத தொடக்கத்தில் இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்தப்படக் கூடிய சாத்தியம் குறித்து வெளிநாட்டு புலனாய்வு சேவைகளிடமிருந்து இலங்கை அதிகாரிகளுக்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் ஹேரத் தெரிவித்தார்.


கடந்த அரசாங்கத்தின் காலத்திலும் இவ்வாறான தகவல்கள் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.


"தகவல் உறுதிப்படுத்தப்படும் வரை நாங்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கவில்லை, ஆனால் தகவல் கிடைத்தவுடன் நாங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தோம்," என்று அவர் மேலும் கூறினார்.


தவறான செய்திகளுக்கு பலியாக வேண்டாம் என்று பொதுமக்களை வலியுறுத்திய அவர், நிலைமையை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வதற்கு எதிராக எச்சரித்தார், பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது என்று வலியுறுத்தினார்.


சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.

No comments

Powered by Blogger.