Header Ads



கனத்த இதயத்துடன் தமக்கு எதிரான இனச்சுத்திகரிப்பின் 34 ஆவது வருடத்தை நினைவுகூர்ந்த யாழ்ப்பாண முஸ்லிம்கள்

வடக்கு முஸ்லிம் மக்கள் வெளியேற்றத்தின் 34ஆவது வருட நினைவு கூறல் நிகழ்வு யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் ஏற்பாட்டில் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் இன்று (30) மாலை 3.30 மணியளவில் நடைபெற்றது. 


கதை சொல்லும் நிகழ்வு எனும் தலைப்பில் முஸ்லிம் கலாசார சபையின் தலைவர் ஏ.சி.நைசர் அவர்களின் தலைமையில் “இனச்சுத்திகரிப்பிலிருந்து மீளெழுவோம் - வடக்கு முஸ்லிம் மக்கள்”  என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற மேற்படி இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாகவும், பிரதம பேச்சாளர்களாகவும் ஜனாப் பி.எஸ்.எம்.சரபுல் அனாம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் திரு.எம்.திருவரங்கன் மற்றும் மௌலவி எம்.ஏ.பைசர் மதனி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். 


நிகழ்வின் கௌரவ விருந்தினர்களாக மௌலவி ஏ.எம்.அப்துல் அஸீஸ் மற்றும் யாழ் கதீஜா மகாவித்தியாலய அதிபர் ஜனாபா ஏ.சி.ஜென்சி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 1990.10.30 ஆம் திகதி வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட போது இடம்பெற்ற நிகழ்வுகள் மற்றும் சம்பவங்களை கதை வடிவில் இளம் தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுக்கும் வகையில் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றது. 


விருந்தினர்களின் உரைகள் ஒவ்வொன்றும் வெளியேற்றத்தின் சம்பவங்கள், மக்களின் இழப்புக்கள், அகதி வாழ்க்கையின் அவலங்கள், மீள்குடியேற்றத்தின் சவால்கள், முஸ்லிம் சமூகம் தாமாக இனச்சுத்திகரிப்பிலிருந்து மீளெழுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சிகளை தொடர்ந்தும் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக அமைந்திருந்தது. 


மேற்படி நிகழ்வில் யாழ்ப்பாணம் முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள், பாடசாலை மாணவர்கள், யாழ் முஸ்லிம் ஒன்றியத்தின் பிரதிநிதி ஜனாப் ஆரிப், பொதுமக்கள் மற்றும் யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும். 


தகவல் 

என்.எம்.அப்துல்லாஹ் 





No comments

Powered by Blogger.