புத்தளம் மண், எனது 2 வது தாய் மண் - தராசு வேட்பாளர் எப்.எம். பாசில்
புத்தளம் - ரத்மல்யாய பகுதியில் இடம்பெற்ற அலுவலகத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் பேசிய அவர் மேலும் கூறுகையில்,
நாங்கள் கல்வி கற்ற காலங்களில் மேலதிக வகுப்புகளுக்காக, கல்வியை தேடிப் படிப்பதற்காக நாம்பட்ட கஷ்டங்களும், துன்பங்களும் மிகவும் அதிகமாகும். ஆகவே, நாங்கள் அனுபவித்த கஷ்டங்களை தற்போதைய மாணவர்கள் அனுபவிக்கக் கூடாது என்பதற்காக கற்பித்தல் செயற்பாடுகளில் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது, அரசியலுக்குள் வரவேண்டும் என்ற எந்த எண்ணங்களும் இருக்கவில்லை.
எனினும், எமது மக்கள் எல்லா வகையில் திட்டமிட்டு பறக்கணிக்கப்படுவது மாத்திரமின்றி, மக்களுக்கு தொடர்ச்சியாக அநீதி இழைக்கப்பட்டு வருவதை உணர்ந்து நான் சார்ந்த மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நான் அரசியலுக்குள் வரவேண்டிய நிலை ஏற்பட்டது.
1990ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் வடக்கு முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியெற்றப்பட்ட போது பெரும்பாலானோர் புத்தளத்திற்குதான் வருகை தந்தனர். 1989ஆம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் பிறந்த நானும் 1990ஆம் ஆண்டு குடும்பத்தோடு இடம்பெயர்ந்து புத்தளத்தில்தான் குடியேறினோம். புத்தளம் மண் என்பது எனது இரண்டாவது தாய் மண்.
சுமார் 34 வருடங்களாக புத்தளத்தில் வாழ்ந்து வரும் நான் சாஹிரா தேசியப் பாடசாலையில் கல்வி கற்று 2008ஆம் ஆண்டு பொறியியல் பீடத்திற்கு எமது பகுதி சார்பில் தெரிவுசெய்யப்பட்ட முதல் மாணவனும், சாஹிரா கல்லூரியில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஒரேயொரு மாணவனும் நான்தான். இது எனக்கு மாத்திரமல்ல புத்தளம் மண்ணுக்கும், மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாக நான் அன்று உணர்ந்தேன்.
எனவே, எனது தாய் மண்ணுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட மாட்டேன். எமது அரசியல் செயற்பாடுகளை விரும்பாத சிலர் எங்களுக்கும், புத்தளத்து மக்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை செய்து வருகிறார்கள்.
நாங்கள் செல்லாத சில இடங்களுக்கு எதிர்த்தரப்பினர் அங்கு சென்று இப்படியான ஒருவர் வருவார் என்று என்னை அறிமுகப்படுத்திவிட்டுச் செல்வது எமது வெற்றிக்கு எதிர்த்தரப்பினர்களே பெரிதும் முயற்சிகளை செய்து வருகிறார்கள் என்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
எமக்கு எதிரான ஒரு பிழையான விம்பத்தை மக்கள் மத்தியில் காட்டுவதற்கு சிலர் எடுக்கும் முயற்சிகளுக்கு, நாங்கள் ஆதாரபூர்வமாக , யதார்த்தமாக சில கருத்துக்களை முன்வைத்து அதனை மக்களுக்கு தெளிவுபடுத்தும் போது மக்கள் மிகவும் இலகுவில் ஏற்றுக்கொள்கிறார்கள்.
எமது புத்தளம் மக்கள் கல்வி, சுகாதாரம், விளையாட்டு என எல்லா துறைகளிலும் பின்னோக்கி காணாப்படுகிறார்கள். முறையான திட்டங்களை வகுத்து புத்தளம் மக்கள் எதிர்நோக்கி வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நாங்கள் முயற்சிகளை மேற்கொள்வோம். புத்தளத்தில் இதுவரைகாலமும் அரசியல் வியாபாரம்தான் நடைபெற்றது. இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை விட, தமது வருமானத்திலேயே அரசியல்வாதிகள் குறியாக இருந்தனர்.
நாங்கள் வெளிப்படத் தன்மையோடு அரசியல் நடவடிக்கைகளை, மக்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
பொதுமக்களுக்கு தெளிவூட்ட ல்களை வழங்குவோம். அரசியல்வாதிகள் பிழை விடுகின்ற சந்தர்ப்பங்களில் அதனை மக்கள் தட்டிக் கேட்க வேண்டும். அந்த சூழ்நிலையை நாங்கள் உருவாக்குவோம். நாம் பிழை செய்தாலும் அதனை மக்கள் கேள்வி கேட்க வேண்டும். மக்கள்தான் எங்களை வழிநடத்தவும் வேண்டும்.
புதிதாக அரசியலுக்குள் நுழைந்த நீங்கள் ஏன் இந்த தராசு கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடுகிறீர்கள் என்று பலர் கேட்கிறார்கள். கடந்த முப்பது வருடங்க ளுக்கும் மேலாக புத்தளத்தில் ஒரு சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்த போது, கடந்த 2020ஆம் ஆண்டு அனைத்து கட்சிகளையும் சார்ந்தவர்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டணியாக களமிறங்கியதன் விளைவுதான் தமக்கான ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பெற்றுக்கொண்டனர்.
ஆகவே, அனைவரும் ஒன்றினைந்து ஒரு கூட்டணியாக களமிறங்கினால்தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பெறலாம் என்பது கடந்த பொதுத் தேர்தலில் நாம் கற்றுக்கொண்ட பாடமாகும். இது எங்களை எதிர்ப்பவர்கள், விமர்சிப்பவர்களுக்கும் நன்கு தெரியும்.
எமக்கு பயணம்தான் முக்கியமே தவிர, பக்கத்தில் இருப்பவர்கள் முக்கியமல்ல. கடந்த 2020 ஆம் ஆண்டு எப்படி ஒரு அணியாக செயற்பட்டார்களோ அதுபோலதான் இந்த முறையும் நாங்கள் ஒரு கூட்டணியாகவே களமிறங்கியிருக்கிறோம். இது ஒருவருக்கு மட்டும் சொந்தமான கட்சியல்ல என்பதை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
எனக்கு அரசியல் செய்ய தொரியாது என்று மக்கள் மத்தியில் கூறிவருகிறார்கள். முன்னுக்கு பின் முரணாக பேசுவது, போலி வாக்குறுதிகளை வழங்குவது, மக்கள் மத்தியில் நடிப்பது, நம்பிக்கைக்கு துரோகமிழை ப்பது என்பதுதான் அரசியல் என்றால் உண்மையில் எனக்கு அரசியல் தெரியாது என்றே வைத்துக்கொள்ளட்டும். இவ்வாறு ஏமாற்றுகின்ற, நடிக்கின்ற ஒரு கொள்கைதான் அரசியல் என்றால் அந்த அரசியல் எனக்கு தெரியாமலேயே இருக்கட்டும்.
எங்களை பொதுத் தேர்தலில் இருந்து ஓரங்கட்டுவதற்கு, பலவீனப்படுத்துவதற்கு ஆரம்பம் முதல் இன்று வரை பல்வேறு வகையிலும் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். ஆனால், நானும், எங்களது அணியினரும் ஒருபோதும் சோர்ந்து விடவில்லை. எங்களோடு மக்கள் இருக்கிறார்கள். மக்களோடு நாங்கள் இருக்கிறோம் என்றார்.
Post a Comment