Header Ads



அநுரகுமார அரசாங்கம் 13 நாட்களில், 41900 கோடி ரூபா கடன் பெற்றுள்ளது


ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் 13 நாட்களில் 41900 கோடி ரூபா கடன் பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரட்ன இந்த குற்றச்சாட்டை தம்புள்ள பிரதேசத்தில் வைத்து முன்வைத்துள்ளார்.


அரசாங்கம் தொடர்ச்சியாக வரையின்றி கடன் பெற்றுக்கொள்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


எனினும், நாட்டு மக்களுக்கு எவ்வித உணரக்கூடிய நிவாரணங்களும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அரசாங்க ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு வழங்கப்பட முடியாது என்பது தெளிவாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.


அத்துடன், ஓய்வூதியம் பெற்றுக்கொள்வோருக்கான 3000 ரூபாவினை இன்னமும் செலுத்த முடியாத நிலைமை உருவாகியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


கடந்த 2ஆம் திகதி, 9ஆம் திகதி, 11ஆம் திகதி மற்றும் 15ஆம் திகதிகளில் அரசாங்கம் பெருந்தொகை பணத்தை கடனாக பெற்றுக்கொண்டுள்ளது எனவும் இதன் மொத்த தொகை 41900 கோடி ரூபா எனவும் தெரிவித்துள்ளார்.


இதன்படி, புதிய அரசாங்கம் மணித்தியாலத்திற்கு 134.9 கோடி ரூபா என்ற அடிப்படையில் கடன் பெற்றுக்கொண்டுள்ளது என ரோஹினி கவிரட்ன தெரிவித்துள்ளார்.  

No comments

Powered by Blogger.