Header Ads



ரணிலை ஆதரித்த பலர் SJB க்கு ஆதரவு, பிரதமர் வேட்பாளராகவும் ஏற்பு, பொதுஜன பெரமுனவிலும் சிலர் இணைவு


ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்திருந்த பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் பொதுஜன பெரமுனவில் இணைவதற்கு தீர்மானித்துள்ளனர்.


எனினும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைவதற்குத் தீர்மானித்துள்ளனர்.


ஐக்கிய தேசிய கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினருக்கும் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தரப்பினருக்கும் இடையே எதிர்கால அரசியல் செயற்பாடு தொடர்பில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.


கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.


இந்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த முன்னாள் ஆளுநர் நவீன் திஸாநாயக்க, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.


அவ்வாறு கூட்டணி ஒன்று உருவாக்கப்படுமாயின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேதாசவே இருப்பார் எனவும் முன்னாள் ஆளுநர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டார்.


அதேநேரம், இந்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இரு தரப்பினரும் இணைய வேண்டும் என தாம் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.


தற்போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் அனைவரும் நாட்டுக்காக ஒன்றிணைய வேண்டும் என ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.


இதேவேளை, குறித்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், தங்களது தரப்பு மீண்டும் மகிந்த ராஜபக்ச தரப்பினருடன் இணையவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.


இதன்போது ஊடகங்களுக்கு கருத்துரைத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க,


“தங்களது தரப்பு வலதுசாரி கூட்டணி ஒன்றை உருவாக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.


சுதந்திரக் கட்சியில் உள்ள தரப்பினரும் பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த தரப்பினரும் இணைந்து கூட்டணி ஒன்றை உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்துகின்றோம்.


அதேநேரம் பொதுஜன பெரமுனவும் வலதுசாரி கொள்கையை உடைய கட்சியாகும். எனவே அவர்களுடன் இணைவதில் எந்த பிரச்சினையும் இல்லை என முன்னாள் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இந்த கேடு கெட்ட தவளைகளின் பாய்ச்சல் நிச்சியம் புதிய ஆட்சிக்கு நிச்சியம் வலுவூட்டும் என்பதை எதிர்வரும் தேர்தல் முடிவுகளிலிந்து இந்த நாட்டு மக்கள் தெரிந்து கொள்வார்கள். எனவே கள்ளத் தவளைகள் கூட்டம் பாய்ந்து கொண்டே இருக்கட்டும். தொடர்ந்தும் அதிகமதிகமாக பாய்ச்சல் புதிய அரசாங்கத்தின் பாராளுமன்ற அங்கத்தவர்களின் தொகையையும் அதன் ஸ்திரத் தன்மையையும் அதிகரிக்கும். அதன் எதிர்காலத் திட்டங்களுக்கு பொதுமக்களின் ஆதரவு,ஒத்துழைப்புக்கு இன்ஷா அல்லாஹ் அது வலுவூட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.