Header Ads



செயற்கையான அலையை ஏற்படுத்தி, ஆட்சியை பிடிப்பதாக NPP மக்களை ஏமாற்றறது


அநுரகுமாரவுக்கு  வாக்களிப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து 15 இலட்சம் பேர் வர இருப்பதாகத் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எத்தனை பேர் வந்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் 8தினங்களே இருக்கும் நிலையில் குறைந்தது 10 இலட்சம் பேராவது வருவார்களா என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். 


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் அநுர குமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச முன்னர் இருந்ததைவிட பின்தள்ளப்பட்டு தோல்வியின் விளிம்புக்கு சென்றுள்ளனர். இவர்கள் தேர்தல் பிரசார கூட்டங்களில் சேறு பூசும் பிரசாரமே செய்கிறார்கள். நாட்டை பொறுப்பேற்று எவ்வாறு முன்னேற்றுவது என்ற திட்டங்கள் எதுவும் இவர்களிடம் இல்லை.


நிவாரணம் வழங்கும் திட்டமே இவர்களிடம் இருக்கின்றன. அதனையே அவர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி செயற்கையான மக்கள் அலை ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு, ஆட்சியை கைப்பற்றுவதாக மக்களை ஏமாற்றி வருகிறது.


இவர்களின் இந்த போலி பிரசாரம் தற்பாேது அம்பலமாகி இருப்பதால், இவர்களுக்கான மக்கள் ஆதரவு குறைந்து வருகிறது. அதனால் இவர்கள் தற்போது மக்களை அச்சறுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.


அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு சென்று மக்களை அச்சுறுத்தும் வகையில் தெரிவித்த கருத்தே மக்கள் விடுதலை முன்னணியின் உண்மையான சுயரூபம். அநுரகுமார திஸாநாயக்கவின் தீவிர ஆதரவாளர்களும் மக்களை அச்சுறுத்தும் காட்சிகள் தற்போது சமூகவலைத்தலங்களில் பரவி வருகின்றன.


வெளிநாடுகளில் இருக்கும் இவர்களின் ஆதரவாளர்களே இதனை செய்து வருகின்றனர். மேலும் அநுரகுமாரவுக்கு வாக்களிப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து 15இலட்சம் பேர் வர இருப்பதாகத் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எத்தனை பேர் வந்துள்ளார்கள் என கேட்கிறோம்.


தேர்தலுக்கு இன்னும் 8தினங்களே இருக்கும் நிலையில் குறைந்தது 10 இலட்சம் பேராவது வருவார்களா? அவ்வாறு வருவதாக இருந்தால் அவர்களுக்கு விசேட விமான சேவை முன்னெடுக்க வேண்டி ஏற்படும். அதனால் இது சாத்தியமில்லாத விடயமாகும்.


எனவே இவர்களின் பொய் பிரசாரங்கள் தொடர்பில் மக்கள் தற்போது விளங்கி வருகின்றனர். அதேபோன்று நாட்டை யாருக்கும் கட்டியெழுப்ப முடியும் என்ற உண்மை நிலையையும் மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.


அதனால் தேசிய மக்கள் சக்தியின் அச்சுறுத்தல்களுக்கு மக்கள் சரியப்போவதில்லை. எவ்வாறான அச்சுறுத்தலாலும் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியைத் தடுக்க முடியாது. இவர்களின் அச்சுறுத்தல்களுக்கு மக்கள் எதிர்வரும் 21ஆம் திகதி புள்ளடி மூலம் பதிலளிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.