நீங்கள் உண்ணும் உணவை அவதானித்தீர்களா?
மரங்களும், செடி கொடிகளும் எமக்காக இத்தகைய அறுசுவை உணவுத் தட்டுகளை தயாரித்துத் தர எத்தகைய பல இரசாயன மாற்றங்களை தாண்டி வருகின்றன என்று ஒரு கணம் சிந்தித்ததுண்டா?
நாம் ரசித்து ருசித்து உண்ணும் உணவுகள், தனியங்கள், பழங்கள் நமது உணவுத் தட்டுக்கு வந்து சேர முன்னர், மண்ணிலிருக்கும் நீரானது புவியீர்ப்பு விசையை எதிர்த்தவாறு மேலெழுந்து சென்று தாவரங்களின் தண்டுகளுக்கும்
இலைகளுக்கும் போய்ச் சேர வைத்த அந்த ஆற்றல் மிகுந்த சக்தி எதுவென்று கவனித்தீர்களா?
அல்லது தாவரங்களின் இலை குழைகள் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி எடுப்பதனூடாக, பழங்கள், தானியங்கள் என பல்சுவை ஆகாரங்களாக பரிணமிக்க வைத்த சக்தி எதுவென்று ஒரு முறை யோசித்தீர்களா?
அல்லது, சூரிய ஒளியின்முலம், அணுக்களுக்கு இடையே உள்ள பிணைப்பை உடைத்து, நமக்கான உணவுகள் உருவாக , பச்சை இலைகளுக்கு ஆற்றலையும் வலிமையையும் கொடுக்க வைத்த சக்தி எதுவென்று பார்த்தீர்களா?
இந்த அதி விசேஷ தயாரிப்பில் வரும் உணவுகளால்தான் நாம் பசியாறுகிறோம், வளர்கிறோம், ஆளாகிறோம், நடக்கிறோம்
உடல் தெம்பு பெறுகிறோம். வாழ்கிறோம், சாதிக்கிறோம்.
அகிலங்களின் ஆண்டவன் நமக்குப் போட்ட இந்த ஆகாரத்தை உண்டுவிட்டு மிருகங்கள் போல வாழ்ந்து விட்டு செல்வது தகுமா? நன்றி கூறாமல் நழுவிப் போவது முறையா?
இத்தகைய உணவுத் தட்டுகளும் சுவையான பழங்களும் நமது மேசைக்கு வர முன்னர் அந்த மரங்களும் செடி கொடிகளும் கடந்து வந்த மிகத் துல்லியமான மற்றும் தீர்க்கமான இரசாயன மாற்றங்களையும் ஒளிமின்னழுத்த தொழிட்பாடுகளையும் நாம் ஏன் அவதானிக்காமல் இருக்கிறோம்!
ஆண்டவன் ஆக்கி வைத்த இந்த ஆகாரத்தை உண்டு, வளர்ந்த நாம் அவனை நிராகரிப்பது தகுமா? அவன் இறக்கி வைத்த தண்ணீரை அருந்தி விட்டு அவனது இருப்பை மறுப்பது சரியா?
நாத்திகர்களும் இறை மறுப்பாளர்களும் இதனை பகுத்தறிவோடு பார்க்க வேண்டாமா?
அகிலத்தார் யாவருக்கும் உணவளிக்கும் பேரருளாளன் நம்மைப் பார்த்து பின்வருமாறு கேட்கிறான்:
((மனிதன் தனது உணவை (வந்த விதத்தை) கவனித்துப் பார்க்கட்டும். ))
மழையை எப்படியெல்லாம் பொழியச் செய்கிறோம் என்றும், பிறகு நிலத்தை எப்படியெல்லாம் பிளக்கச் செய்கிறோம் என்றும், பிறகு அதிலிருந்து வித்தை எப்படி முளைப்பிக்கிறோம் என்றும் கவனிக்கட்டும்!
(அதிலிருந்து) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயன்படுவதற்காக திராட்சைகளையும், புற்பூண்டுகளையும் ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் அடர்ந்த தோப்புக்களையும், பழங்களையும், தீவனங்களையும் (முளைக்க வைத்தோம் என்பதை கவனிக்கட்டும்))
📖 அல்குர்ஆன் : 80 / 24 -32
✍ மாஹிர் பக்ஜா ஜீ
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment