அனுராதபுரம் பாடசாலையொன்றில், மிகப்பெரும் அவலம்
(அததெரண)
பாடசாலை அமைப்பில் மதுபானம் மற்றும் போதைப்பொருளை ஒழிப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் அவை உண்மையான வெற்றியை பெற்றுள்ளதா என்பது கேள்விக்குறியாகும்.
பாடசாலைகளில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பரவலின் தீவிரத்தன்மையை வௌிப்படுத்தும் மற்றுமொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கெக்கிராவை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் மாணவர்களால் போதைப்பொருள் மறைத்து வைக்கப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
அந்த பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் சிலர் பல்வேறு வகையான சட்டவிரோத மது மற்றும் போதைப்பொருட்களை பாடசாலைகளுக்கு கொண்டு வந்து, மற்ற மாணவர்களுக்கு வழங்கும் நோக்கத்தில் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர், ஒழுக்காற்று ஆசிரியர் மற்றும் ஏனைய ஆசிரியர்கள் மாணவர்களை எச்சரித்துள்ளனர்.
ஆனால் நடந்தது என்னவென்றால், ஆசிரியர்கள் மாணவர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும், மாணவர்களை மருத்துவமனையில் சேர்த்ததாகவும் பெற்றோர்கள் பொலிஸில் முறைப்பாடு அளித்தனர்.
பாடசாலைக்குள் போதைப்பொருள் கொண்டுவந்து பாடசாலையில் பயன்படுத்திய மாணவர்கள் தொடர்பில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்த போதிலும் பொலிஸார் இது தொடர்பில் மௌனம் காத்தனர்.
சிறுவர்களை தண்டித்ததற்காக பாடசாலை அதிபர் உட்பட பல ஆசிரியர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அண்மையில் பாடசாலையின் ஆசிரியர் ஊழியர்கள் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தி, பிள்ளைகளை வழிநடத்தும் முயற்சியில் தாங்கள் எதிர்நோக்கும் சிரமங்களை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இவ்வாறாக பாடசாலை மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி பாடசாலையில் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றமை பாரதூரமான விடயமாகும்.
பொலிஸாரும் கல்வி அதிகாரிகளும் பாரிய போதைப்பொருள் எதிர்ப்புப் பிரச்சாரத்தை அமுல்படுத்தாவிடின், இந்நாட்டின் பாடசாலை அமைப்பு எதிர்காலத்தில் இன்னொரு பாரிய பேரழிவைச் சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Post a Comment