சஜித் பிரேமதாசவை நான், டட்லி சேனாநாயக்க போன்று உணர்கிறேன் - இம்தியாஸ் Mp
மக்களிடத்தில் பிரிவினைவாதம் இல்லை. முரண்பாடுகள் இல்லை.ஆனால் தேர்தல் அண்மிக்கும் போது மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. நம்பிக்கையின்மை கட்டியெழுப்பப்படுகிறது. பிரிவினைவாத அணுகுமுறை, சிந்தனை, எண்ணங்கள் காரணமாக கடந்த காலங்களில் நாம் பல துன்பங்களை அனுபவித்துள்ளோம். அதுவே நாட்டின் வீழ்ச்சிக்கு காரணம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மார்கார் தெரிவித்தார்.
எனவே நாடு மிக மோசமான படுகுழிக்குள் தள்ளப்பட்டுள்ளது. குழிக்குள் விழுந்தமைக்கான காரணத்தை தேடிக்கொண்டும் பிறர் மீது குற்றம் சுமத்தி கொண்டிருக்கும் நேரமும் இதுவல்ல. பொறுப்புணர்வுடனும் புரிந்துணர்வுடனும் ஒவ்வொருவரையும் சமமாக மதித்து நாட்டின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் ஒற்றுமையாக செயல்படக் கூடிய அணியுடன் எதிர்காலத்தில் மக்கள் அணி திரள வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் விடிவெள்ளிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவரது நேர்காணல் வருமாறு…
நேர்காணல்: எம்.வை.எம்.சியாம்
Q: கேள்வி -ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றி வாய்ப்பு எந்தளவுக்குள்ளது? அவர் 50 வீதத்துக்கு மேல் பெறுவாரா?
ஆம். அவர் உறுதியாக 50 வீதத்துக்கும் அதிகப்படியான வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார்.
Q: தற்போதைய பிரதான நான்கு வேட்பாளர்களுள் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க சஜித் பிரேமதாசவுக்கு சவாலாக விளங்குகிறாரா?
ஆம். நிச்சயமாக. உண்மையில் அவர்கள் எழுச்சி அடையவில்லை என என்னால் கூற முடியாது. தேசிய மக்கள் சக்தியின் வரலாற்றைப் பார்க்கும் போது அவர்கள் வன்முறை அரசியல் இருந்து விடுபட்டு தற்போது ஜனநாயக அரசியல் கோட்பாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர். இவர்களது இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. நான் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயக கொள்கைகளை பின்பற்றி மக்கள் முன்னால் சென்று அவர்களின் கொள்கைகளை முன்வைத்து மக்களாணையை பெற்றுக்கொள்ள முயற்சிப்பது சிறந்த விடயமாகும்.
இருப்பினும் கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் மீது மக்கள் கொண்ட அதிருப்தி காரணமாகவே நாட்டில் மக்கள் எழுச்சிப் போராட்டம் வெடித்தது. இம்முறை ராஜபக்ஷக்களுடைய பெரும்பாலான வாக்குகள் மக்கள் விடுதலை முன்னணிக்கு செல்வதற்கு வாய்ப்புள்ளது.
இருப்பினும் நாட்டு மக்கள் புத்திசாலிகள். நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கொள்கையை கொண்ட தரப்பினருக்கே வாக்களிப்பார்கள். திறமை, அனுபவம் கொண்ட சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய அணிக்கே மக்கள் ஆதரவு வழங்குவர். எனவே மக்கள் தவறான தீர்மானங்களை எடுக்கமாட்டார்கள்.
Q: இம்முறை தேர்தல் பொருளாதார நெருக்கடியிலிருந்த நாட்டை மீட்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதற்காக ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்காலத்தில் எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்?
உலக பொருளாதார கொள்கைகளை எம்மால் மாற்ற முடியாது. எமது நாட்டை சர்வதேச நாடுகள் ஏளனமாக பார்த்தன. இலங்கை சுதந்திரம் அடையும் போது ஜப்பானுக்கு ஒத்த வளர்ச்சியைக் கொண்ட நாடாக இலங்கை காணப்பட்டது.
ஆனால் இன்று எமக்கு என்ன நடந்துள்ளது? இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் குரோதத்தை ஏற்படுத்தி பிரித்தாளும் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பிரதிபலனை நாம் தற்போது அனுபவித்து வருகிறோம்.
எனவே தற்போது நாட்டுக்கு பொருத்தமான பொருளாதார கொள்கை கொண்ட அணியே தேவைப்படுகிறது. அத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் இலங்கையர் எனக் கருதும் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க கூடிய தலைவர் ஒருவரே நாட்டுக்கு தேவைப்படுகிறார்.
Q: நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு தன்னால் மாத்திரம் தான் முடியும் என ஜனாதிபதி ரணில் கூறி வருகிறாரோ? நெருக்கடியான நேரத்தில் சஜித் பிரேமதாச நாட்டை பொறுப்பேற்க வரவில்லையே?
நாட்டு மக்களை சிறு பிள்ளைகள் என ரணில் விக்கிரமசிங்க நினைத்துக் கொண்டிருக்கிறார். சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருக்கிறார். ஆனால் அப்போதைய ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம். தற்போதைய பாராளுமன்றத்தின் பெரும்பான்மையுடன் அன்றைய தினம் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால் எதிர்காலத்தில் எமது பயணத்தை முன்னெடுக்க முடியாமல் போயிருக்கும்.
நிபந்தனைகள் எதுவுமின்றி எம்மால் ரணில் விக்கிரமசிங்கவை போன்று திருடர்களை பாதுகாக்க வேண்டி ஏற்படும். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவை மக்களாணையுடனேயே அரசாங்கத்தை அமைக்குமாறு வலியுறுத்தினார்கள். மக்களாணையுடனயே எமது பயணத்தை ஆரம்பிப்போம். அதனை விடுத்து கோட்டாபய அரசாங்கத்தில் பதவிகளை ஏற்க வேண்டிய தேவை எமக்கில்லை.
Q: சிலிண்டருக்கு வாக்களிக்காவிட்டால் சிலிண்டரும் வெடிக்கும் அதன் பின்னர் நாடும் பங்களாதேஷைப் போன்று வெடிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். இது நாட்டு மக்களை அச்சுறுத்தி வாக்கு கேட்பது போன்றுள்ளதல்லவா?
இதுவே அவரது குணம். மக்களையும் அச்சுறுத்துகிறார். பாராளுமன்றத்துக்கும் அச்சுறுத்தல் விடுக்கிறார். நீதிமன்றத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கிறார். அவர் தனக்கு நெருங்கிய ஒருவரை பொலிஸ் மா அதிபரதாக நியமித்தார். உயர்நீதிமன்றம் அதற்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. புதிய ஒருவரை நியமிக்குமாறு உத்தரவு பிறப்பித்தும் இதுவரை அவர் அதனை செய்யாமல் சபாநாயகரும் பிரதம நீதியரசரும் இணைந்து ஒரு தீர்மானத்துக்கு வருமாறு கூறுகிறார்.
ஜனாதிபதி ஒருவருடைய அதிகாரத்தை குறைப்பதற்காகவே சுயாதீன ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் அதிகாரங்கள் பிரித்து கொடுக்கப்பட்டது. ஆனால் அவற்றுக்கு மரியாதை அளிப்பது இல்லை.கட்டுப்பட்டு நடப்பதும் இல்லை. மக்களை அச்சுறுத்தி அதிகாரத்தை தக்க வைக்கலாம் என நினைக்கிறார்.
Q: நாடு வங்குரோத்து அடைய ஊழல், மோசடி பிரதான காரணமாக அமைந்தன. ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் அதிகாரிகளை சஜித் ஆட்சிக்கு வந்தால் தண்டிப்பாரா?
நாடு வங்குரோத்து அடைய ஊழல், மோசடி மாத்திரம் காரணமல்ல.கோட்டாபய அரசாங்கம் செலந்தவர்களுக்கு கோடிக்கணக்கில் வரிச் சலுகை அளித்தது. நாட்டின் தேசிய வருமானம் பாரியளவில் இழக்கப்பட்டது. நாடு வங்குரோத்து அடைய இதுவே பிரதான காரணமாகும். ஏற்றுமதி உற்பத்திகள் பாரியளவில் குறைவடைந்தன. தவறான பொருளாதார கொள்கைகள் மற்றும் முதலாளித்துவ கொள்கை என்பனவும் பிரதான காரணமாகும்.
எவரையும் பழிவாங்குவதற்காக நாம் அரசியல் செய்யவில்லை. தெளிவான திட்டங்களை முன்வைத்துள்ளோம். கடந்த இரண்டு வருடங்களாக பல கலந்துரையாடல்களில் ஐக்கிய மக்கள் சக்தி ஈடுபட்டது. தொழில் வல்லுநர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், தொழிற்சங்கள், சிவில் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடினோம். இரவு பகல் பாராமல் திட்டங்களை வகுத்துள்ளோம். அதன்படி 27 துறைசார் குழுக்களை நியமித்துள்ளோம். செப்டம்பர் 21 க்கு பின்னர் எமது துறைசார் குழுக்கள் முன்வைத்த அந்த கொள்கைகளுக்கு அமைய எமது எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
Q: கொவிட் காலப்பகுதியில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிக்கப்பட்டன. இதற்காக அண்மையில் அமைச்சரவை முஸ்லிம் மக்களிடத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தது. உண்மையில் இந்த மன்னிப்பு தேர்தலில் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கான உத்தியா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களுடைய அரசாங்கத்தில் நீதி பெற்றுக்கொடுக்கப்படுமா?
முஸ்லிம் மக்கள் அரசாங்கத்திடம் மன்னிப்பையோ அல்லது நட்டயீட்டையோ எதிர்பார்க்கவில்லை. இது சபிக்கப்படும் குற்றமாகும். உடல்களை அடக்கம் செய்யக்கூடாது என விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் முன்வைக்கப்படாத நிலையில் ஒரு குறிப்பிட்ட இனத்தை அடிப்படையாக்கொண்டு பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலாகும்.
இந்த தீர்மானத்தை எடுத்தவர்கள் யார்? உண்மையில் இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார்? என்பதை ஆராய்ந்து நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்துவோம். முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பும் அதுவே. காரணம் இதுபோன்ற சம்பவம் பிறிதொரு சமூகத்துக்கு ஏற்பட்டு விடக்கூடாது.
Q: கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத கருத்துக்களைப்பேசிய புத்தகம் வெளியிட்ட சம்பிக்க ரணவக்க தற்போது உங்களோடு இருப்பதை சிலர் விமர்ச்சிக்கின்றார்களே?
நாம் தேர்தலில் வெற்றி பெற அதிக வாக்குகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.அந்த வாக்குகளில் கறுப்பு வெள்ளை என பாகுபாடு கிடையாது. அனைத்து வாக்குகளும் சமமானவையே. எமது கொள்கைகளுக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடக்க முடியுமானால் எவர் வேண்டுமானாலும் எம்முடன் இணைந்து கொள்ளலாம்.
நான் சஜித் பிரேமதாசவை டட்லி சேனாநாயக்க போன்று உணர்கிறேன். இன, மத வேறுபாடின்றி வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற பேதமின்றி அனைத்து மக்களையும் ஒரு குடையின் கீழ் வழிநடத்தக்கூடிய அனைத்து மக்களினதும் அபிமானத்தை வெல்லக் கூடியவர் என நான் அவரை காண்கிறேன். எனது இந்த நம்பிக்கையை அவர் கட்டியெழுப்பி நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பாடுபடுவார் என உறுதியாக நம்புகிறேன்.
Q: முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான ஹக்கீம் மற்றும் ரிசாட் போன்றவர்கள் எவ்வாறான நிபந்தனைகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்கிறார்கள்? அனைத்து நிபந்தனைகளையும் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளதா?
-நான் அறிய அவர்கள் அவ்வாறான எந்த உடன்படிக்கையிலும் கைச்சாத்திடவில்லை. நாட்டின் அனைத்து மக்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றக்கூடிய கொள்கை கொண்ட ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தி என அவர்கள் கருதுகிறார்கள். நாம் அனைவரும் ஒரே கோட்டில் பயணிக்ககூடிய அரசியல் கொள்கைகளை கொண்டவர்கள். எம்முடன் எந்த இரகசிய ஒப்பந்தங்களையும் அவர்கள் செய்துகொள்ளவில்லை.
Q: முஸ்லிம் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் ஒரு பக்கமும் அதன் உறுப்பினர்கள் வேறு பக்கமும் நிற்கிறார்கள். முஸ்லிம் மக்கள் தம்முடனேயே இருக்கிறார்கள் என பகிரங்கமாக கூறிவருகிறார்களே?
-அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்கும் கட்சி தாவும் அரசியலே நாட்டில் உள்ளது. இது தொடர்பில் நான் கவலையடைகிறேன். இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். இதுபோன்ற அரசியல் நாம் செய்யக்கூடாது. அவர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களை கௌரவப்படுத்தும் அரசியலையே செய்ய வேண்டும்.
Q: இந்த காலப்பகுதியில் மக்களை நேரடியாக சந்திக்கும் போது உங்களிடம் அவர்கள் கூறுவது என்ன? அவர்களது மனோநிலை எவ்வாறுள்ளது?
-நான் சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் வாழும் அனைத்து பகுதிகளுக்கும் செல்கிறேன். மக்களுக்கு இடையில் பிரிவினைவாதம் இல்லை. முரண்பாடுகள் இல்லை. ஆனால் தேர்தல் அண்மிக்கும் போது மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. நம்பிக்கையின்மை கட்டியெழுப்பப்படுகிறது.
கடந்த 50 வருடங்களாக ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொண்டோம். உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. பிரிவினைவாத கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி மூன்று அடிப்படை தூண்களை கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ளது.ஒன்று நாட்டுக்குள்ளும் கட்சிக்குள்ளும் ஜனநாயகத்தை பேணுவது, இரண்டாவது சமூகங்களுக்கு நீதியை பேணுதல், மூன்றாவது வேற்றுமையில் ஒற்றுமை காண்பது என்பனவாகும். இதன்காரணமாகவே சிங்கள, முஸ்லிம், தமிழ் தலைவர்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குகிறார்கள்.
Q: சிறுபான்மையினரும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினரும் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் முன்வைக்கும் நியாயங்கள் என்ன?
-நாம் அனைவரும் இலங்கை மக்கள். தலையை நிமிர்த்தி அனைவரும் சமமாக கேள்வி எழுப்பக் கூடிய உரிமைகளை அனுபவிக்க கூடிய நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.அதற்கு தலைமைத்துவம் வழங்கக்கூடிய அணி எங்கு இருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும். வெறும் வாக்குறுதிகளால் மாத்திரம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனை நடைமுறையில் செய்து காட்டக்கூடியவர் யார் என்பதை மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். – Vidivelli
Post a Comment