Header Ads



அதிபர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் கலாநெஞ்சன் ஷாஜஹான்


நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றிய  ஜனாப் எம். இஸட். ஷாஜஹான் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் அதிபர் சேவையில் இருந்து  ஒய்வு பெறுகிறார்.


இந்தப் பாடசாலையில் கடந்த ஒன்பதரை வருட காலமாக இவர் அதிபராக பணியாற்றி உள்ளார். இவருடைய சேவை காலத்தில் இந்த பாடசாலை முன்னேற்றங்கள் பலவற்றை கண்டது. பல்வேறு தரப்பினருடன் தொடர்பு கொண்டு  இவர் பாடசாலையை  அபிவிருத்தி செய்தார்.


    எம். இஸட். ஷாஜஹான் 1990 ஆம் ஆண்டு சுகாதாரம் மற்றும் உடற்கல்வி  ஆசிரியராக நியமனம் பெற்று  கொழும்பு முகத்துவாரம் ஹம்ஸா முஸ்லிம் வித்தியாலயத்தில் பணியாற்றினார்.  பின்னர் மட்டக்குளி சேர் ராசிக் பரீத் முஸ்லிம் வித்தியாலயத்தில் 1995 வரை  சுகாதாரம் மற்றும் உடற்கல்வி  ஆசிரியராக சேவை புரிந்தார். 1995 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில்  ஆசிரியராக பணியாற்றினார்.


2001 ஆம் ஆண்டு முதல்  நீர்கொழும்பு மற்றும் களனி கல்வி வலயங்களில் சுகாதாரம் மற்றும் உடற்கல்வி  ஆசிரிய ஆலோசகராக பணியாற்றினார். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் சேவை பரீட்சையில்  சித்தி அடைந்து, நீர்கொழும்பு அல் - பலாஹ் முஸ்லிம் மகா வித்தியாலயம், கட்டானை வித்தியாலோக்க மகா வித்தியாலயம் ஆகியவற்றில் பிரதி அதிபராக பணியாற்றியுள்ளார்.


2015 ஆம் ஆண்டு முதல் நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் அதிபராக பதவியேற்று ஓய்வு பெறும் வரை அந்த பாடசாலையிலேயே பணியாற்றினார். 


2015 ஆம் ஆண்டு அதிபர் சேவையின் முதலாம் தரத்திற்கு பதவி உயர்வு பெற்றார். கல்விமானி, கல்வி முதுமாணிப் பட்டங்களையும் ஊடகத்துறையில் கல்வி டிப்ளோமாவையும், மனித உரிமை டிப்ளோமாவையும் பெற்றுள்ள ஜனாப் ஷாஜஹான் சமாதான நீதவனாகவும் நியமனம் பெற்றுள்ளார்.


அதிபர் ஷாஜஹான் பல்வேறு ஊடகங்களில்  பிராந்திய ஊடகவியலாளராக 25 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். அத்துடன் கடந்த 34 வருடங்களுக்கு மேலாக  கலாநெஞ்சன் ஷாஜஹான் என்ற பெயரில் கவிதை, கட்டுரை, சிறுகதை என்பவற்றை எழுதி வருகிறார்.


(1) மெட்டுச்சரம் (இஸ்லாமிய கீதங்கள்) 1990

(2) இதய கீதம் (இஸ்லாமிய கீதங்கள்) 1993

(3) ஏன் இந்த மௌனம் (கவிதை) 1999

(4) மீண்டும் ஒரு தாஜ் மஹால் (கவிதை) 1993

ஆகிய நூல்களை இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

ஊடகத்துறை,  கலை இலக்கியத்துறை, மற்றும் சமூக சேவை பங்களிப்புகளுக்காக 

 சாமஸ்ரீ தேச கீர்த்தி,  கவித்தீபம், காவியப் பிரதீப , கலாபூசண லங்காபுத்திர தேசபந்து ஆகிய பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.


அத்துடன் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட பல்வேறு இலக்கிய போட்டிகளில் விருதுகள் பலவற்றை இவர் வென்றுள்ளார். 


1991 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவின் போது இவர் இலங்கை ஒளிபரப்பு கூட்டத்தாபனத்தில் விளையாட்டு வர்ணனையாக பணியாற்றியுள்ளார். அத்துடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டத்தாபனத்தில் 1991 முதல் 1994 ஆம் ஆண்டு வரை பகுதி நேர நிகழ்ச்சி தயாரிப்பு உதவியாளராகவும். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் ரூபவாஹினி நேத்ரா அலைவரிசைகளில் பல்வேறு கவியரங்களிலும் இவர்   பணியாற்றியுள்ளார்.

No comments

Powered by Blogger.