வரலாற்றுத் தவறுகளைச் செய்திட வேண்டாம் - அநுரகுமார
தேர்தல் பரப்புரைகளுக்காக வடக்கு மாகாணத்துக்கு வருகைதந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திஸாநாயக்க, உதயன் பணிமனைக்கும் நேற்று வருகைதந்து, செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார் இதன்போதே அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
தெற்கில் இம்முறை பலமான மாற்றம் ஏற்பட ஆரம்பித்துள்ளது. தபால் வாக்களிப்பில் 75 வீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை நாங்கள் கைப்பற்றியுள்ளோம் என்பதை எம்மால் உணர முடிகின்றது. நிச்சயம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவோம். ஆனால், அதற்கு தமிழ் மக்களுடைய ஒத்துழைப்பும் எமக்குத் தேவை.
2010, 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின்போது, தமிழ் மக்களின் வாக்குகள் ராஜபக்சக்களுக்கு எதிரானதாக இருந்தன. அதில் ஒரு நியாயம் இருந்தது. எம்மால் அதை உணர்ந்துகொள்ள முடிகின்றது. ஆனால், இம்முறை நிலைவரம் அவ்வாறில்லை. மாற்றத்துக்கான நேரம் இது. நாட்டின் ஊழலைத் துடைத்தெறிய வேண்டிய நேரம். தெற்கு மக்கள் அதற்குத் தயாராகி விட்டார்கள். எனவே தமிழர்களும் இந்தப் பணியில் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் எவரை ஆதரிப்பது என்று முடிவெடுக்கும் உரிமை ஒவ்வொரு தனிநபருக்கும் உண்டு. அதேநேரம் அவர்களின் முடிவை சரியானதுதானா என்று கேள்விக்கு உட்படுத்தும் உரிமையும் எமக்கு உள்ளது. அதனால்தான் தமிழர்கள் நன்கு சிந்தித்து இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
வடக்கு மக்களும் எம்முடன் இணைவார்கள். அவர்களை இணைத்துக்கொண்டு பயணப்படுவோம் என்று நாம் காத்திருக்கும்போது தமிழரசுக் கட்சியினர் துரதிர்ஷ்டவசமாக சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் முடிவை அறிவித்திருக்கின்றனர் அன்று ராஜபக்சக்களுடன் இருந்த முகங்கள்தான் இன்று சஜித்துடன் இருக்கின்றன. பொதுஜன பெரமுனவின் உயர் தலைவர்களில் ஒருவரான இருந்த ஜி.எல்.பீரிஸ் இன்று சஜித்துடன் உள்ளார்.
சம்பிக்க ரணவக்கவாலும், ரிஷாத்தாலும் ஒரே அணியில் செயற்பட முடியுமா? ஆனால் அவ்வாறான அணியொன்றையே சஜித் உருவாக்கியுள்ளார். தேர்தல் இலாபங்களுக்காக அந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் கொள்கையுடையவர்கள். எம்முடன் இணைவதற்கு கொள்கைகள்தான் பிரதானம். ராஜபக்சக்களிடம் இருந்து சஜித் அணியில் இணைந்த பலரும் எம்முடன் இணைவதற்கு வந்தனர். ஆனால், நான் அவர்களை கிட்டவும் எடுக்கவில்லை. இவ்வாறான அரசியல் செய்யும் சஜித்துக்கு தமிழரசுக் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்திருப்பதானது எனது ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் தருகின்றது. எனவே, மக்கள்தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் - என்றார்.
Post a Comment