முஸ்லிம்களின் ஆடைகள் தொடர்பில், ரணில் வழங்கிய பதில்
அடுத்த 10 வருடங்களில் ஒவ்வொரு பிள்ளையும் ஆங்கில மொழிப் புலமையைப் பெறுவதற்குத் தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காக " English for all" என்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கல்வி அமைச்சராக தான், வெள்ளை அறிக்கை மூலம் இந்த பிரேரணையை கொண்டு வந்த போது அதற்கு எதிராக ஜே.வி.பி வீதியில் இறங்கியதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அந்த வேலைத்திட்டம் அன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று நாட்டில் ஆங்கில மொழி தொடர்பான பிரச்சினை ஏற்பட்டிருக்காது எனவும் சுட்டிக்காட்டினார்.
நேற்று (17) மல்வானை மக்களுடனான சந்திப்பின் பின்னர் ஆங்கில மொழி அறிவு இன்மையால் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தின் தீர்வு என்ன? என இளைஞர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
Gen Z தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதே தமது நோக்கம் என தெரிவித்த ஜனாதிபதி, வேலைத்திட்டங்களற்ற பொய்யான வாக்குறுதிகளுக்கு மட்டுப் படுத்தப்பட்ட சஜித் மற்றும் அநுரவின் அரசியல் நலன்களுக்கு இளைஞர்கள் பலியாக வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
மக்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:
நான் பிரதிநிதித்துவப்படுத்திய பியகம தொகுதிக்கு வருகை தரும் சந்தர்ப்பங்களில் மல்வானை மக்களை சந்திப்பதை நான் வழமையாகக் கொண்டிருந்தேன். மல்வானை மக்கள் எப்போதும் எனக்கு பாரியளவு ஆதரவை வழங்கியுள்ளனர்.
அன்று மல்வானை மிகச் சிறியதொரு நகரம். வர்த்தக வலயம் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மல்வானை ஒரு பாரிய நகரமாக மாறியது. இன்று பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மல்வானை வர்த்தகம் மற்றும் வர்த்தக வலயத்துடன் இணைந்து இந்தப் பகுதியில் அபிவிருத்தியடைந்த பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
2022 இல் பாரிய நெருக்கடியை சந்தித்தோம். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது, மல்வானை வர்த்தக மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பொருட்களை இறக்குமதி செய்ய அந்நியச் செலாவணி இருக்கவில்லை. தற்போது அந்த நிலையிலிருந்து விடுபட்டுள்ளோம். தற்போது நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது.
நான் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி எமக்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. பணத்தை அச்சிடவோ அல்லது கடன் பெறவோ முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, ரூபா வலுவடைந்து, பொருட்களின் விலைகள் குறைந்து, நாடு நிலைபெறத் தொடங்கியது. இவை அனைத்தையும் மேற்கொள்ளும் அதே நேரம், குறைந்த வருமானம் பெறுவோருக்கு சமுர்த்தியை விட மும்மடங்கு அதிகமாக பயன்களை அளிக்கும் “அஸ்வெசும” திட்டத்தை செயல்படுத்தவும், அரச துறை ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்காக தற்போது உதய ஆர்.செனவிரத்ன குழுவின் அறிக்கையை அமுல்படுத்தவும் எம்மால் முடிந்தது.
ஒருபுறம், பொருட்களின் விலையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் நிவாரணம் வழங்கவும் முடிந்துள்ளது. ஆனால் அதில் இன்னும் இடைவெளி இருக்கிறது. எனவே, இதை முறையாகக் கையாள்வதன் மூலம் அடுத்த ஆண்டு வாழ்க்கைச் சுமையை வெகுவாகக் குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறோம். நாம் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி, எமக்கு கடன் வழங்கிய 18 நாடுகள் வழங்கும் கடன் நிவாரணம் என்பன இன்றியமையாதது. அந்த ஆதரவினால்தான் இன்று இந்த நிலையில் இருக்கிறோம். இந்த இணக்கப்பாடுகளை எங்களால் மாற்ற முடியாது. அப்படிச் செய்தால் அனைத்தும் சிதைந்துவிடும்.
சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய இருவரும் வரிகளை குறைப்பதாக கூறுகின்றனர். அவ்வாறு செய்தால், சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து நாம் பெற வேண்டிய உதவிகளை இழக்க நேரிடும். டொலரின் பெறுமதி உயர்ந்து மீண்டும் அனைத்தும் வீழ்ச்சியுறும். அடுத்த 05 ஆண்டுகளில் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். ஏற்றுமதி பொருளாதாரத்தை நிறுவுவதன் மூலம் நமது வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டும்.
இங்கிருந்த ஒரு தென்னந்தோப்பை வர்த்தக வலயமாக மாற்றி புதிய பொருளாதாரத்தை அன்று உருவாக்கினோம். அதன் காரணமாக பியகம நகரமும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளைப் பெற்றன. பியகமவில் அன்று நான் செய்த முன்னேற்றத்தை முழு நாட்டுக்கும் செய்ய விரும்புகிறேன். அதற்காக பிங்கிரிய, திருகோணமலை, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை போன்ற இடங்களில் பாரிய முதலீட்டு வலயங்களை உருவாக்க எதிர்பார்க்கிறோம்.
மல்வானைப் பிரதேசத்தையும் நான் மறக்கவில்லை. கேரகல பிரதேசத்திலும் புதிய முதலீட்டு வலயமொன்றை உருவாக்க எதிர்பார்க்கிறேன். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதன் மூலம், அந்தப் பகுதியில் தொழில்நுட்ப வலயத்துடன் கூடிய புதிய நகரத்தை உருவாக்க முடியும். நீங்கள் அங்கு வர்த்தகத்தில் ஈடுபடலாம். மேலும், சியாம்பலாப்பே சந்தியில் உத்தேச புதிய வைத்தியசாலையையும் நாம் நிர்மாணிக்க வேண்டும். இவற்றை முன்னெடுப்பதற்காக கேஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க வந்தால் என்ன நடக்கும் என்பதை நான் புதிதாகக் கூற வேண்டியதில்லை. அதனால் நாம் அந்த நிலைக்கு செல்ல வேண்டுமா? நாம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். அவர்களுக்கு வாக்களித்து நாட்டை மீண்டும் இழக்காதீர்கள். அவர்கள் ஒருமுறை பேரகஸ் சந்தியில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும் சிலர் ஐக்கிய மக்கள் சக்திக்குச் செல்கிறார்கள். ஐக்கிய மக்கள் சக்தி என்பது, ஐக்கிய தேசியக் கட்சியல்ல. ஜனாதிபதி பிரேமதாசவும் நானும் இணைந்து செயற்பட்டே “பிரதீபகம” மாதிரிக் கிராமத்தை உருவாக்கினோம்.
அப்போது சஜித் இருக்கவும் இல்லை. எனவே சஜித்துக்கும் நாமலுக்கும் அளிக்கப்படும் வாக்குகள் தட்டில் வைத்து அநுரவுக்கு வழங்கப்படும் வாக்குகள் என்பதைக் கூற வேண்டும். மீண்டும் ஒரு முறை நான் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பிறகு இந்தப் பிரதேசத்தையும், பாடசாலைக் கட்டிட நிர்மாணப் பணியையும் நான் பொறுப் பேற்கிறேன்.
எனவே, செப்டெம்பர் 21 ஆம் திகதி, கேஸ் சிலிண்டருக்கு முன்னால் உங்கள் வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இங்கு கூடியிருந்த இளைஞர்கள், ஜனாதிபதியிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய பதில்களும் பின்வருமாறு:
கேள்வி : நான் முதல் முறையாக உங்களுக்கு வாக்களிக்கக் காத்திருக்கும் யுவதி. என்னைபோல பெருமளவானர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்: இன்னும் 25 வருடங்களில் 50 வயதை கடந்திருப்பீர்கள். உங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டமைக்க வேண்டியது அவசியம். ரூபாய் வலுவடைவதோடு, இளையோர் தத்தமது எதிர்காலத்தை தீர்மானின்ன வேண்டும். Gen Z தலை முறையினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.
கேள்வி : நாட்டில் பலருக்கு அரசியல் புரிவதில்லை என்பதால் பெரும்பாலானோர் நாட்டுக்கு எவ்வாறான தலைவரை தெரிவு செய்வது என்ற கேள்விக்குரியுடன் உள்ளனர். மக்கள் மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கான உங்களுடைய திட்டம் குறித்து குறிப்பிடுங்கள்?
பதில் : எவரும் இல்லாத வேளையில் ஜனாதிபதி பதவியை நான் ஏற்றுக்கொண்டேன். பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டுச் செல்வதற்காகவே நான் ஏற்றுக் கொண்டேன். தற்போது படிப்படியாக வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வருகிறோம். எமது செயற்பாடுகளை விரைவாக முகாமைத்துவம் செய்துகொள்ள முடிந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலுடன் எமக்கு கடன் வழங்கிய 18 நாடுகளும் கடன் சலுகைகளை வழங்கவுள்ளன. அதனால் நாம் இப்போது ஏற்றுமதி பொருளாதாரத்தை இலக்கு வைத்து நகர வேண்டியுள்ளது. அதன்படி பியகமவில் செய்த முன்னேற்றத்தை முழு நாட்டிலும் செய்ய எதிர்பார்க்கிறேன். அதன் ஊடாக ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாறலாம்.
கேள்வி : சில மாதங்களுக்கு முன்பு, ஹிஜாப், நிகாப் மற்றும் ஹபாயா அணியும் முஸ்லிம் பெண்கள் பொது இடங்களிலும் அலுவலகங்களிலும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்தனர். தற்போது சமூகமான நிலை ஏற்பட்டிருக்கிறது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு மீண்டும் முகம்கொடுக்க வேண்டியிருக்குமா? எதிர்காலத்தில் எமது கலாசார மற்றும் மதம் சார்ந்த ஆடைகளுக்கு மதிப்பளிக்கப்படுமா?
பதில் : நான் ஜனாதிபதியாக இருக்கும் வரையில் உங்களுக்கு அவ்வாறான பிரச்சினைகள் வராது. உங்கள் சம்பிரதாய ஆடை என்பது உங்களின் தெரிவாகும். அதனை வேண்டாம் என்று ஒதுக்குவதும் உங்கள் தீர்மானம். நீங்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள் எனக்கு புரிகிறது. முஸ்லிம் பெண்களை சோதனையிடக் கூடாது என்றும் அவர்களின் ஆடையை மாற்றுமாறு கட்டாயப்படுத்துவது பொருத்தமற்றது என்றும் கூறியமைக்காக ஆணைக்குழுவொன்றில் என் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. எதிர்ப்புக்களை பொருட்படுத்தாமல் உங்கள் அன்பானவர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட மன வருத்தத்தையும் நான் அறிவேன். இப்போது அதற்கான சட்டத்தையும் நிறைவேற்றவிருப்பதோடு, அது ஒவ்வொருவரினதும் தனியுரிமையாக மதிக்கப்படும்.
கேள்வி : அடுத்த 10 வருடங்களில் எவ்வாறான சமூக மாற்றத்தை எதிர்பார்க்கிறீர்கள்?
பதில் : சமூகம் துரித மாற்றத்தை நோக்கி செல்கிறது. அதற்கு செயற்கை நுண்ணறிவும் தாக்கம் செலுத்துகிறது. உங்களுக்கும் எனக்கும் இருக்கும் வேறுபாட்டை பார்க்கும் போது, நான் தொலைபேசியே இல்லாத காலத்தில் வளர்ந்தவன். அதனால் ஒவ்வொரு வருடனும் தொடர்புகளை பேண வேண்டும். தற்போது நீங்கள் இருக்கும் Gen Z தலை முறையினர் தொலைபேசிக்குள்ளேயே வாழ்கிறார்கள். அனைத்து விடயங்களும் அதை சார்ந்துள்ளன. அதனை மேலும் மேம்படுத்த முடியும். அதற்காக செயற்கை நுண்ணறிவும் அதிகளவில் புகுத்தப்படும். புதிய தொழில்நுட்பங்கள் பலவும் வரலாம். அது நல்லதா கெட்டதா என்பதையும் நாம் தீர்மானிக்க முடியும். இருப்பினும் நாடு பின்னோக்கிச் செல்வதை ஏற்க முடியாது. அதுகுறித்து உங்களின் ஊடாக மக்களை தெரியப்படுத் துவதே எனது நோக்கமாகும். அதனால் இன்னும் 20 வருடங்களில் அறிவுசார்ந்த பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய சவால்களுக்கு ஈடுகொடுக்க கூடியதாக அமையும். சவால்கள் எவ்வாறானது என்பதை நாம் அறிந்துகொள்வது கடினமாக இருக்கும்.
கேள்வி: இலங்கையின் கல்விச் செயற்பாடுகளுக்கு ஆங்கிலம் குறித்து அதிகமாக கவனம் செலுத்தப்படுவது ஏன்? அதேபோல் ஆங்கில மொழி பிரதான தொடர்பாடல் மொழியாக காணப்படும் பாடசாலைகளிலிருந்து பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுச் சேவை வழங்கும் இடங்களுக்குச் செல்வோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்திக்க அரசாங்கம் எவ்வாறான திட்டத்தை கொண்டுள்ளது?
பதில்: இலங்கைக்கான " English for all" என்னும் எனது வேலைத்திட்டத்தின் ஊடாக ஆசிரியர்கள் உள்ளடங்களாக அனைவருக்கும் ஆங்கிலம் கற்பிக்கும் நிலைக்குச் செல்ல வேண்டும். இந்த திட்டத்தை 1982 கல்வி வௌ்ளை அறிக்கையில் பரிந்துரை செய்தேன். அதற்கு எதிராக அன்று ஜேவீபி வீதியில் இறங்கியது. அதனால் இன்று நாம் முன்னோக்கிச் செல்வதில் இடர்பாடுகளை எதிர்கொள்கிறோம். அன்று அதனை முன்னெடுத்திருந்தால் இன்று பிரச்சினை ஏற்பட்டிருக்காது. ஜேவிபி எதிர்த்ததன் காரணத்தை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். இப்போது இந்த திட்டத்தை முன்னோக்கி கொண்டுச் செல்லும் எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். முதல் இரு வருடங்களில் ஆசிரியர்களை பயிற்றுவிப்பது குறித்து கவனம் செலுத்தியிருக்கிறோம். பின்னர் மற்றையவர்களுக்கு பயிற்சியளிப்போம். தனியார் துறைகளில் ஆங்கில கல்வி கற்கவும் நாம் வசதிகளை ஏற்படுத்துவோம்.அதனால் அடுத்த பத்து வருடங்களில் ஆங்கில கல்வியை மேம்படுத்த முடியும்.
கேள்வி: உத்தேச காலநிலை மாற்றங்கள் தொடர்பான பல்கலைக்கழகத்தில் எமது இளையோருக்கு கிடைக்கும் பலன் என்ன? அதனுடன் நாம் எவ்வாறு தொடர்புபடுவது?
பதில் : காலநிலை மாற்றம் நாம் முகம்கொடுக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும். அது தொடர்பில் கற்கவும் பட்டப்பின் படிப்புக்கள் மற்றும் பரிசோதனைகளை நடத்துவதற்கும் இடமொன்று இல்லை.அதனால் உலகத்திற்காக அந்த பல்கலைக் கழகத்தை கொத்மலையில் அமைக்க தீர்மானித்திருக்கிறோம். எமது நிறுவனங்களும் அதனுடன் தொடர்புபட முடியும். அதனால் அறிவும் மேம்படும். உலகின் எந்த நிறுவனமும் அதனுடன் தொடர்புபட முடியும். எமது எதிர்பார்ப்பும் அதுவேயாகும்.
ஊடகப் பிரிவு
Ranil24 - ரணிலால் இயலும்
2024-09-18
Post a Comment