Header Ads



இரவு விழுந்த குழியில் பகல் விழப் போகிறோமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்


 மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதே தனது முதல் நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துள்ள ஒப்பந்தங்களை பாதுகாப்பது அத்தியாவசியமானது எனவும் சஜித் மற்றும் அநுர கூறுவது போன்று அந்த உடன்படிக்கைகளை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


மேலும், சஜித் மற்றும் அநுரவின் ஆலோசனைகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் இல்லையெனவும், அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்திற்கே ஆதரவு உள்ளது என்றும் தெரிவித்த ஜனாதிபதி, “IMF வேலைத்திட்டத்தில் இலங்கை அடைந்துள்ள சாதனைகளைப் பாதுகாத்து முன்னேறுவது முக்கியம்" என அதன் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கொசெக் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் என்றும் தெரிவித்தார்.


ஹொரணை பொது விளையாட்டரங்கில் இன்று (15) பிற்பகல் இடம்பெற்ற “ரணிலால் இயலும்” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.


இந்தப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:


மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்க வேண்டும் என்பதே எனது முதல் நோக்கம். சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளை நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியம் இல்லாமல், எங்களுக்கு உதவ வேறு யாரும் இல்லை. சர்வதேச நாணய நிதியத்தின் காரணமாக எங்களுக்கு 18 நாடுகளின் ஆதரவு கிடைத்தது. மேலும், நாம் செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டியை செலுத்துவதில் 10 பில்லியன் டொலர்கள் நன்மையைப் பெறுகிறோம்.


இந்த நாட்டில் ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். எங்களால் எப்போதும்  கடன் வாங்க முடியாது. ஏற்றுமதி வருமானத்தை விட நமது இறக்குமதி செலவு அதிகம். எனவே, நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருக்க, ஏற்றுமதி பொருளாதாரத்திற்குச் செல்ல வேண்டும். பொருளாதாரத்தை நவீனமயமாக்குவதன் மூலம் நாம் முன்னேற வேண்டும். நிவாரணங்களை வழங்குவதன் மூலம் ஒரு நாட்டை முன்னேற்ற முடியாது. எனவே, நாம் ஒன்றிணைந்து முன்னேற்றமான பொருளா தாரத்தை உருவாக்குவோம்.


மக்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக கஷ்டப்படுகிறார்கள். அந்த பிள்ளைகளுக்காக சிறந்த நாட்டை உருவாக்க வேண்டும். இன்று சஜித்தும் அநுரவும் அனைத்தையும் இலவசமாகத் தருவதாக  கூறுகிறார்கள். அவ்வாறு வழங்குவது சாத்தியமில்லை. வாக்குகளைப் பெறுவதற்காக மக்களை ஏமாற்றுகிறார்கள். சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவதாக கூறினாலும், இதுவரை அதுபற்றி பேசவில்லை. 


இதற்கு முன்னர் ஐ.தே.க வேட்பாளராக போட்டியிட்டேன். இம்முறை சுயேட்சை வேட்பாளராக உங்கள் முன்வந்துள்ளேன்.நாடு குறித்து சிந்தித்தே சகல கட்சியினரும் இணைந்து பணியாற்றுகிறோம்.  ஐ.தே.கவின் வெற்றிக்காக பங்காற்றியவர்களில் நான் மட்டும் தான் எஞ்சியுள்ளேன். எனவே கட்சியை பாதுகாக்கும் பொறுப்பு எனக்குள்ளது. ஐமசவில் எவருக்கும் ஐதேக பற்றிப் பேச எந்த உரிமையும் கிடையாது. சஜித்தை அரசியலுக்கு கொண்டு வந்தது நான் தான் . பிரேமாஸ அல்ல. அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கியதும் நான் தான். நாம் அனைவரும் நாட்டுக்காக ஒன்று பட்டுள்ளோம். எனவே ஐதேக ஆதரவாளர்கள் எம்முடன் இணைய வேண்டும்.


1977 களவரத்தின் போது ஜேஆர் ஜெயவர்தனவுக்கு அன்று சிரிமாவோ பண்டாநாயக்க உதவினார். இன்று நாம் அனைவரும் நாட்டுக்காவே ஒன்று பட்டுள்ளோம்.


மக்கள் கஷ்டப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாததால் தான் பொறுப்பை ஏற்றேன். சஜித்திற்கோ அநுரவிற்கோ உங்கள் கஷ்டம் தெரியவில்லை.அவர்களுக்கு மனம் இறங்கவில்லையா? 


ஆனால் தற்போது இலங்கை வரலாற்றில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக இந்த வேலைத்திட்டத்தின் நோக்கங்களை அடைவது மிகவும் முக்கியமானது என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. மேலும் பொருளாதார சீர்திருத்தங்களை தொடர்ந்து செயல்படுத்துவது அவசியம். அதாவது நான் தொடங்கிய திட்டத்தை தொடர வேண்டும். எனவே இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல என்னால் மட்டுமே முடியும்.


“அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முடிவை இலங்கை மக்களே எடுக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் பார்வையில், இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளதை நாம் கண்டோம். இலங்கை தனது வரலாற்றில் சந்தித்த மிக மோசமான நெருக்கடியிலிருந்து முழுமையாக மீள்வதற்கு இந்த வேலைத்திட்டத்தின் மூலம் பெற்ற வெற்றியை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது" என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.


சஜித்துக்கோ அல்லது அனுராவுக்கோ சர்வதேச நிதியத்தின் ஆதரவைப் பெறமாட்டார்கள். அந்த ஆதரவு எங்கள் திட்டத்திற்கு உள்ளது. எனவே இவர்களது பொய்களில் சிக்கி இரவு விழுந்த குழியில் பகல் விழப் போகிறோமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.


எனவே, நாட்டின் பொருளாதாரத்தையும், உங்கள் எதிர்காலத்தையும் காக்க, கேஸ் சிலிண்டருக்கு செப்டம்பர் 21 ஆம் திகதி வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.