Header Ads



வடக்கையும், கிழக்கையும் ஒருபோதும் இணைக்கமாட்டேன் - நாமல்


வடக்கையும், கிழக்கையும் மீண்டும் இணைக்க மாட்டோம். அத்தோடு, மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களும் வழங்கப்பட மாட்டாது என ஸ்ரீ லங்கா பொதுசன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.


கிண்ணியா நகர சபை நூலக மண்டபத்தில் நேற்று (09) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு, உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


ஸ்ரீ லங்கா பொதுசன பெரமுனவின் மூதூர் தொகுதி இணைப்பாளர் இப்ராஹிம் சதா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,


இந்த நாட்டில் இப்போது எல்லா சமூகங்களும், இனங்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் ஒன்றை உருவாக்கி கொடுத்திருக்கிறோம். எனவே இந்த நாட்டை பிரித்து, இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தோற்றுவிக்க முடியாது. இதன் காரணமாக நாங்கள் வட மாகாணத்தோடு, கிழக்கு மாகாணத்தை மீண்டும் இணைக்கமாட்டோம்.


நான் ஒரு பௌத்தன். இதன் காரணமாக ஏனைய மதங்களை நான் மதிக்கின்றேன். இஸ்லாமியர்களும், இந்துக்களும் தங்களுடைய மார்க்க வழிபாடுகளை இந்த நாட்டில் சுதந்திரமாக மேற்கொள்வதற்கும் அவர்களுடைய வாழ்வியல் உரிமைகளுக்குமான தேவையான பாதுகாப்பை புதிய அரசியலமைப்பின் ஊடாக ஏற்படுத்துவேன் என உறுதி அளித்தார்.


மதங்களையும், இனங்களையும் பிரிப்பதற்கு அரசியலை நான் ஒருபோதும் பயன்படுத்தமாட்டேன். நீங்கள் என்னை நம்புங்கள். சிலர், உங்களிடம் இருந்து எங்களை பிரிப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர். அவர்கள் இந்த நாட்டை பிரித்தவர்கள். நாங்கள் நாட்டை பிரிப்பதற்கு அரசியல் செய்ய வரவில்லை. நாங்கள் நாட்டை ஒன்று படுத்தியவர்கள். எனவே, என்னை நம்புங்கள். நான் பொய்யை கூறி உங்களிடம் வாக்கு கேட்டு வரவில்லை. செய்ய முடியுமானவற்றை செய்ய முடியும் என்று கூறுகிறேன். செய்ய முடியாதவற்றை செய்ய முடியாது என்று கூறுகின்றேன். உண்மைதான் கூறுகிறேன் என்றும் தெரிவித்தார்.


அவர் மேலும் கூறுகையில், மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சி காலத்தின் போது , அபிவிருத்தியில் வடக்கு மக்கள், தெற்கு மக்கள் என்று நாங்கள் பிரித்து பார்க்கவில்லை. தேசத்தின் மக்கள் என்ற வகையில், சகலருக்கும் சமனான தேவைகளையே பழங்கியிருக்கிறோம். அவ்வாறே நாங்கள் தொடர்ந்தும் பயணிப்போம்.


நான் ஒரு பௌத்தன். இதன் காரணமாக ஏனைய மத வழிபாடுகளை நான் மதிக்கின்றேன். இஸ்லாமியர்களும் இந்துக்களும் தங்களுடைய மார்க்க வழிபாடுகளை இந்த நாட்டில் சுதந்திரமாக மேற்கொள்வதற்கும் அவர்களுடைய வாழ்வியல் உரிமைகளுக்குமான தேவையான பாதுகாப்பை புதிய அரசியலமைப்பின் ஊடாக ஏற்படுத்துவேன் என உறுதி அளித்தார்.


இங்கு கூடியிருக்கின்ற அனைத்து இளைஞர்களும் சமூக வலைத்தளங்களோடு, என்னுடன் தொடர்பில் இருப்பவர்களே! எனவே எனது முற்போக்கான சிந்தனைகளும், இந்த நாட்டுக்கான எனது எதிர்கால வேலைத் திட்டங்களையும் நன்கு அறிந்து வைத்துள்ளீர்கள்.


மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில், இந்தப் பிரதேசத்தில் வரலாறு காணாத அளவுக்கு அபிவிருத்திகளை செய்திருக்கிறோம். 30 வருட காலமாக பல துன்பங்களை அனுபவித்து வந்த உங்களுடைய வாழ்க்கையை மாற்றியமைத்தோம். யுத்தத்தை முடித்தது மாத்திரமன்றி, தொழில்துறைகளையும் உங்களுக்கு கொண்டு வந்து, உங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தினோம்.


அதேபோன்று உங்களுடைய குழந்தைகளுக்கு சீரான கல்வியை நாங்கள் வழங்கி வைத்தோம். மேலும் இந்தப் பிரதேசத்தில் சுற்றுலா துறையையும் நாங்கள் அபிவிருத்தி செய்தோம்.


இந்த நாடு இன்னும் தொழில்நுட்ப ரீதியான கல்வியில் முன்னேற வேண்டி இருக்கின்றது. அதனை முன்னோக்கி கொண்டு செல்வது எங்களுடைய தார்மீக கடமையாகும். இளைஞர்களுக்கு அதிகூடிய வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்தப் பிராந்தியத்தில், ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப துறைசார் வளையமைப்பு ஒன்றை உருவாக்குவேன்.


மீன்வளம் உள்ள இந்தப் பிரதேசத்தில், அந்த தொழிலை செய்வதில், பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருவதாக மீனவர்கள் என்னிடம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவற்றுக்கான தீர்வுகளை நிச்சயம் வழங்குவேன் என்பதை இங்கு உறுதி கூறுகிறேன் என்றும் தெரிவித்தார்.


கிண்ணியா மத்திய நிருபர் கியாஸ்

No comments

Powered by Blogger.