தங்க முலாம் பூசப்பட்ட, போலி நகைகளை அடகு வைத்து பணத்தை எடுத்த பெண்
- ரஞ்சித் ராஜபக்ஷ -
தங்க முலாம் பூசப்பட்ட மற்றும் போலி நகைகளை அடகு வைத்து பணத்தை எடுத்த பெண், ஹட்டன் நீதவான் எம்.பரூக்தீனின் உத்தரவின் பேரில், எதிர்வரும் 9 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹட்டன் பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (24) கைது செய்யப்பட்ட அந்த பெண், ஹட்டன் நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (25) ஆஜர்படுத்தப்பட்டார்.
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிஓயா தோட்டத்தில் வசிக்கும் 48 வயதுடைய தாயே விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இவர் மூன்று பிள்ளைகளின் தாயாவார்.
கொழும்பு பகுதியில் பணிபுரியும் சந்தேகத்திற்கிடமான பெண், போலியான தங்க முலாம் பூசப்பட்ட சிறிய மோதிரங்கள், பஞ்சாயுதங்கள், காதணிகள் போன்றவற்றை பிரதான நகரங்களில் உள்ள அடமான மையங்கள், பொது மற்றும் தனியார் வங்கிகளுக்கு கொண்டு சென்று அடமானமாக பணம் பெற்று வந்துள்ளார்.
அடகு எடுத்துச் செல்லும் தங்க நகைகளை ஆய்வு செய்யும் இயந்திரங்களில் கூட சிக்காத வகையில் இந்த போலி நகைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு தயார் செய்யப்பட்ட சில போலி மோதிரங்களை பெண் அடகு அடகு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவை தொடர்பில் அடகு நிலைய உரிமையாளர் ஹட்டன் பொலிஸாரின் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் ஹட்டனில் (25) குறித்த அடகுக் கடையில் சந்தேகநபரான குறித்த பெண்ணை ஹட்டன் பொலிஸாரின் உத்தியோகத்தர்கள் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து பல போலி மோதிரங்களை கண்டுபிடித்துள்ளனர். சந்தேகத்திற்குரிய பெண் நீண்டகாலமாக இந்த மோசடியை வெற்றிகரமாக மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கு (24) முதல் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்கிடமான பெண் நீண்டகாலமாக இந்த முறைகேடான நடவடிக்கைகளை மேற்கொண்டு பெருமளவு பணம் சம்பாதித்துள்ளதாகவும், சந்தேகநபர் ஹட்டன் நகரில் இவ்வாறு தங்க நகைகளை அடகு வைத்துள்ளதாகவும் ஹட்டன் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் ஜயசேன தெரிவித்தார்.
Post a Comment