கோட்டாபயவை ஜனாதிபதியாக்கிய சூத்திரதாரி ரணில்தான் - சஜித்
எமது நாட்டின் அரச கொள்கைகளை செயல்படுத்துவது அரச ஊழியர்கள் ஆகும். தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கின்ற சந்தர்ப்பத்தில், அரச ஊழியர்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், திடீர் திடீரென்று சம்பளத்தை அதிகரிப்போம் என்று பொய் வாக்குறுதிகளை வழங்குகின்ற இந்த நிலையில், ஒட்டுமொத்த அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை 24% ஆல் அதிகரிப்பதோடு, வாழ்க்கைச் செலவு கொடுப்பணவை 17800 ரூபாயிலிருந்து 25,000 ரூபா வரை அதிகரித்து, அடிப்படைச் சம்பளத்தை 57 500 ரூபா வரை அதிகரிப்போம். தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அசாதாரண வரிச்சூத்திரத்தை மாற்ற நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
6-36% ஆக காணப்படுகின்ற வரிச்சூத்திரத்தை 1-24% வரை குறைத்து, அரச ஊழியர்களையும் நடுத்தர வகுப்பினர்களையும் வலுப்படுத்துவோம். சுமார் 7 இலட்சம் அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில், ஐக்கிய மக்கள் சக்திக்கு உங்களுடைய வாக்கை அளிக்குமாறு கோருகின்றோம். அத்தோடு அரச ஊழியர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வதோடு அவர்களுக்கான சம்பள அதிகரிப்பையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் 31 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (03) வவுனியா young star விளையாட்டரங்கில் வெற்றிகரமாக இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் என பெரும் திரளானோர் இப்பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
முகாமைத்துவ, அபிவிருத்தி துறை, கிராம உத்தியோகத்தர், விவசாய துறை, கல்வித்துறை, மற்றும் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரச ஊழியர்களும் இந்நாட்டின் வளங்களாகும். அரச ஊழியர்கள் இந்நாட்டின் சுமை என்று இந்த அரசாங்கம் கருதியது. அரச சேவை துறை இந்த நாட்டை பாதிக்கின்றது என்று மாற்று அரசியல் சக்திகள் கூறியது. அரச சேவையை பாதுகாத்து, புதிய பயிற்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தி, திறமைகளையும் ஆளுமைகளையும் தொழில்நுட்பத்தின் ஊடாக விருத்தி செய்து அதனை முன்னெடுத்துச் செல்வது ஐக்கிய மக்கள் சக்தி என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
பொலிஸாருக்கு வழங்கிய மூன்று மாதங்களுக்கான மேலதிக கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குவதோடு, பதவி உயர்வுகளையும் மீள பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். முப்படைகளில் வன் ரேங்க் ஒன் பே திட்டத்தை செயல்படுத்துவதோடு, சிவில் பாதுகாப்பு அதிகாரிகளையும் பாதுகாத்து எமது நாட்டின் அரச சேவையை நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுப்போம். அத்தோடு அரச சேவையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் பயிற்சிகளும் வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
🟩 கோட்டாபயவை அதிகாரத்திற்கு கொண்டுவர ரணில் செயல்பட்டார்.
அத்தோடு கோட்டாபயவின் அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்ட வீடமைப்பு திட்டத்தை மீண்டும் ஆரம்பித்து, கம்உதாவ யுகத்தை உருவாக்குவோம். அன்று மக்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை வழங்கியிருந்தால் இன்று அந்த வீடுகள் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும். கோட்டாபயவை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கான மூலோபாயத்தின் சூத்திரதாரி ரணில் விக்ரமசிங்க ஆகும். அவர் கோட்டாபயவை வெற்றி பெறச் செய்வதற்கான தந்திரங்களையும் மேற்கொண்டார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
🟩 வறுமையை போக்க புதிய வேலைத்திட்டங்கள்.
வறுமையை போக்குவதற்கான புதிய வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படும். நுகர்வு, முதலீடு, சேமிப்பு, உற்பத்தி, மற்றும் ஏற்றுமதி ஆகிய ஐந்து துறைகளை மையமாகக் கொண்டு வறுமையை ஒழிப்பதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும். மாதம் ஒன்றுக்கு 20,000 ரூபா வீதம் 24 மாதங்களுக்கு நிவாரணங்களை வழங்கி, வறுமையை ஒழிக்கும் சிறந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 சர்வதேச நன்கொடையாளர் மாநாடு கூட்டப்படும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கடந்த ஜனாதிபதிகளாலும் தற்போதைய ஜனாதிபதிக்கும் கூட கூட்ட முடியாமல் போயிருக்கின்றது. அவர்களின் இயலாமை மற்றும் இனவாத கொள்கை என்பனவற்றினாலே இந்த மாநாட்டை கூட்டமுடியாதுள்ளனர். எனவே ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக இரண்டு மாகாணங்களையும் மையமாகக் கொண்டு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டி, அதனுடாக முழு நாட்டுக்கும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது மேலும் சுட்டிக்காட்டினார்.
Post a Comment