ரணிலினால் ஜனாதிபதியாக வர முடியாது - ஹக்கீம் திட்டவட்டம்
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவை ஆதரித்து அக்கரைப்பற்றில் சனிக்கிழமை(14)நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் உரையாற்றினார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் மு.கா.தலைவர் ஹக்கீம் மேலும் கூறியதாவது,
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னனியிலுள்ள மூன்று வேட்பாளர்களைப் பற்றித்தான் கதைக்கமுடியும. நான்காவது வேட்பாளர் அருகிலுமில்லை. ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில், நாமல் ராஜபக்ஷவோடு மூன்றாவது இடத்தைப் பிடிப்பதற்கு கடுமையாகப் போட்டி போடுகிறார்
எனவே, அவருடன் இருப்போருக்கு ஒர் உண்மையைச் சொல்லவேண்டும். ரணில் விக்கிமசிங்கவை ஜனாதிபதி யாக்குவதற்கு உங்களிடம் வந்து வாக்கு கேட்டுள்ளேன். அதேநேரம் அவரைக்கொண்டு வெல்ல முடியாதென்றுதான் , சரத் பொன்சேகா மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரை தேர்தலில் முன்னிலைப் படுத்தினோம். அதேபோல், இப்போது சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்க முன்வந்துள்ளோம்.
இதேவேளை, முன்பு நடந்த தேர்தல்களில் ரணில் விக்கிரமசிங்கவை வைத்து தேர்தல் செய்யமுடியாதென்று தெரிந்து தான் அவரை ஒதுக்கிவைத்தோம். ஜனாதிபதி பதவி ரணில் சிக்கிரமசிங்கவுக்கு லொத்தர் கிடைப்பதுபோல் கிடைத்துள்ளது. இந்தப் பதவி அவருக்கு ராஜபக்ஷ குடும்பத்தின் தயவால் கிடைத்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து ராஜபக்ஷ குடும்பத்தைப் பாதுகாக்க ஒரு கேடயம்தேவைப்பட்டது அதற்காக அவரைப் பயன்டுத்திக் கொண்டார்கள்.தற்போது அவர்களும் செல்வாக்கிழந்து போயுள்ளார்கள்.
இது இவ்வாறு இருக்க, தற்போது அநுரகுமார திசாநாயக்கவை வெல்ல வைக்க சிலர் கடும் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் எங்கள் அணியிலுள்ளவர்களில் பிழைகளைத் தேடிக் கொண்டு வருகிறார்கள்.
நானும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் பாடலி சம்பிக ரணவக்கஆகியோரும் அரசாங்கத்தின் வீஸா ஊழல் மோசடி தொடர்பான வழக்கொன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். அதில் இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்டது மட்டுமல்லாமல், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு உயர்நீதிமன்றம் எங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது.
இந்த ஜனாதிபதியினுடைய வீசா சம்பந்தமான அமைச்சரவை தீர்மானம் மிகப்பெரிய மோசடிக்கு வழிகோலியது. இதே ரணில் விக்கிரமசிங்க நாங்களும் அமைச்சரவையில் இருக்கும்போது எங்களுக்குத் தெரியாமல் மத்திய வங்கிக் கொள்ளையோடு தொடர்பு பட்டிருந்ததாக பரவலாகக் கூறப்பட்டது.
இவ்வாறு நாட்டில் நடக்கும் மோசடிகளை அம்பலத்துக்குக் கொண்டுவருவதற்கு மூன்று இன அரசியல் தலைவர்களும் சேர்ந்து வழக்கொன்றைத் தாக்கல் செய்தோம்.
அநுர குமார திசாநாயக்கவுடன் இருப்போர் என்னிடமும் ரிஷாதிடமும் ."எவ்வாறு சம்பிக ரணவக்கவுடன் நீங்கள் கூட்டுச்சேர்ந்து ஒரு மேடையில் இருக்கலாம்"என்று கேட்கின்றார்கள். அவர்களிடம் நான்கேட்பது, இதே அநுர குமார திசாநாயக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தார்.அநுர குமாரவும் நாங்களும் சேர்ந்துதான் பிரச்சாரம் செய்தோம். அப்போது பாட்லி சம்பிக ரணவக்கவும் இருந்தார். அநுர குமார திஸாநாயக்க ஆதரிக்கும் போது சம்பிக ரணவக்கவுடன் இருக்கலாம்.இப்போது இருக்கக் கூடாது.அதுதான் அவர்களது நியாயம்.
சம்பிக ரணவின் கொள்கை, கோட்பாடு தொடர்பில் உடன்பாடில்லாமல் இருக்கலாம். அதேநேரம் சுமந்திரனின் கொள்கை கோட்பாட்டுக்கும் சம்பிகவுக்கும் உடன்பாடில்லாமல் இருக்கலாம்.ஆனால் சுமந்திரன் இருப்பது சம்பிகவுக்குப் பிரச்சினை இல்லை. சம்பிகவுக்கு சுமந்திரன் இருப்பது பிரச்சினை இல்லை. ஆனால் எங்களில் சிலருக்குத்தான் அதனால் கடும் காய்ச்சல் பிடிக்கின்றது.
இது நாட்டுக்கான தலைவர் ஒருவரைத் தேர்வு செய்யும் தேர்தல். இந்த தேர்தலில் விதம் விதமான கொள்கைகளையுடையவர்கள் இருப்பார்கள்.முழு நாடுமே ஒரே தொகுதியாக கணிக்கப்படும் தேர்தல்.
நாங்கள் தெரிவு செய்யப்போகும் வேட்பாளர் நடுநிலையானவர் ; நல்ல சிந்தனையுள்ளவர்.குறிப்பாக நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்த்து வைக்கக் கூடியவர் என்ற நம்பிக்கையில் நாங்கள் ஒன்று சேர்ந்து செயற்படுகின்றோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒரு சமரச முயற்சி செய்து பார்த்தோம்.,ஜனாதிபதித் தேர்தலில் விட்டுக் கொடுப்பதென்றால், அவரை நாங்கள் பிரதமராக்குவோம் என்று சமரசம் செய்தோம்.நிதர்சனமாக பேசினோம்.அவரைச் சூழவிருப்பவர்கள் அதை விரும்பவில்லை.
இதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், இலங்கையிலுள்ள நாட்டுப்புற அப்பாவி சிங்கள மக்களிடம் இனவாத்தை விதைத்து, முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக மிக மோசமான பிரசாரங்களை செய்து பௌத்த மக்களை நம்பவைத்து கோட்டாபாய வென்றபோது, சஜித் பிரேமதாசவும் 55 இலட்சம் வாக்குகளை எடுத்தார்.இப்போது அந்த இனவாதமுமில்லை, இனவாதத்தைப்பற்றி பேசவும் முடியாது. நாடு பாதுகாப்பு அச்சத்தில் உள்ளதென்றுயாரும் பேசவும் முடியாது.நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு எங்கள் அணியிலுள்ள பொருளாதார நிபுணர்களை வைத்து தீர்க்கமுடியும் என்றார்.
Post a Comment