Header Ads



தொப்பி அணிந்தவரை மௌலவியாக்கி முஸ்லிம்களை, ஏமாற்றுவதை அனுரகுமார கைவிட வேண்டும்


ஊடகப்பிரிவு-

“தொப்பி அணிந்த ஒருவரை மௌலவியாகக் காண்பித்து, முஸ்லிம்களை ஏமாற்றும் கபடத்தனங்களை அனுரகுமார திஸாநாயக்க கைவிட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, வவுனியாவில் இன்று (03) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மக்கள் திரளுக்கு முன்பாக உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து பேசுகையில்,

“சாப்பாட்டுப் பார்சல்களுக்கும் சில்லறைச் சலுகைகளுக்கும் மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிக்கும் கூட்டத்தினரிடம் எச்சரிக்கையாக இருங்கள். நாட்டின் பொருளாதாரத்தையும் இந்தக் கள்வர் கூட்டமே களவாடியது. ராஜபக்ஷக்களிடம் இருந்த இக்கூட்டம், இப்போது ரணிலின் பாதுகாப்பில் தஞ்சமடைந்துள்ளது. இராஜாங்க அமைச்சர் ஒருவர் இவ்வளவு காலமும் எதையும் செய்யாமல், இப்போதுதான் பொழுது விடிந்ததுபோல ஓடித்திரிகிறார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டு, சகல சமூகங்களையும் சமமாக நேசிக்கும் பண்பட்ட அரசியல்வாதி சஜித் பிரேமதாச. பாடசாலைகளுக்கு "ஸ்மார்ட்" வகுப்பறைகள், பஸ்வண்டிகளை வழங்குகிறார். அனுரகுமார திஸாநாயக்க கல்வி பயின்ற பாடசாலைக்கும் இவை வழங்கப்பட்டுள்ளன. 
சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு இன்னும் சொற்பகாலங்களே உள்ளன. பஸ் வண்டிகளில் மக்களைக் கொண்டுவந்து, மாயை காட்டும் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப நாட்டு மக்கள் தயார். அரசியல் வாழ்வில் எதையுமே செய்யாத அனுரகுமார திஸாநாயக்க, ஆட்சிக்கு வந்தால், எதையும் செய்யுமளவுக்கு அனுபவம் இருக்காது. இவரது ஆட்சியைக் கற்பனை செய்யவே பயமாக உள்ளது.
சீனாவிலுள்ள உர்குர் இனத்து முஸ்லிம்களுக்கு நடப்பது என்ன? பள்ளிவாசலுக்குச் செல்ல முடியாது. நோன்பு நோற்க முடியாது. புனித ஹஜ்ஜுக்குச் செல்வதற்கு அனுமதியில்லை. இந்த அபாயகரமான நிலை இங்கும் வேண்டுமா?
மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழும் மாவட்டம் வவுனியா. இங்கு மூவாயிரம் வீடுகளை அமைத்தோம். தொழிலாளர்களை நேசித்தோம். விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு உதவினோம். இவை, எவற்றையும் செய்யாமல், வாக்குக் கேட்க வந்துள்ள ஏஜெண்டுகளை விரட்டிவிடுங்கள்.
அனுரகுமாரவுக்கு தொப்பி அணிந்த மௌலவி இருப்பதைப் போலவே, ரணில் விக்ரமசிங்கவுக்கு "கோட்" அணிந்த அலிசப்ரி இருக்கிறார். முஸ்லிம்களை ஏமாற்ற வந்த பேரினவாத ஏஜேண்டுகளே இவர்கள். எனவே இந்த தருணத்தில் நிதானமாக செயற்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.