திருடர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புமாறு நாங்கள் கூறவில்லை - ரணில்
உண்மையைப் பேச அரசியல்வாதிகள் தயாரில்லை என்பதாலும், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற பெருமளவிலான கடன்களைப் பெற்றுக்கொண்டதாலுமே நாட்டின் பொருளாதாரமும் அரசியலும் சரிவைக் கண்டதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மாற்றம் தேவை என்று கூறும் தலைவர்கள் இன்றும் பொய்களையே கூறிவருவதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்துடன் விளையாடுவதற்கு இனி எவருக்கும் இடமளிக்கக்கூடாது எனவும் தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள வோட்டர்ஸ் ஏட்ஜ் ஹோட்டலில் நேற்று (13) நடைபெற்ற பிரத்தியேக வகுப்பு ஆசிரியர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
"நாட்டுக்காக சிந்திக்கும் ஆசிரியச் சமூகம்" என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவான பிரத்தியேக வகுப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மோசடியாளர்களையும் பொறுப்புக்களிலிருந்து தப்பிச் செல்லும் அரசியல்வாதிகளையும் பாராளுமன்றத்திற்கு அனுப்பாதிருப்பது மக்களின் பொறுப்பாகும் என்றும் தெரிவித்தார்.
நாடு பிரச்சினையில் இருக்கும்போது பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஒன்றிணையுமாறு மற்றைய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த போதிலும், அவர்கள் தமது பொறுப்பை தட்டிக்கழித்ததாகவும் ஜனாதிபதி கூறினார்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரத்தியேக வகுப்பு ஆசிரியர்கள், இதுவரையில் ஜனாதிபதி ரணிலுக்கு வாக்களித்திருக்காவிட்டாலும், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி எடுத்த வேலைத்திட்டத்தின் காரணமாகவே தாங்கள் அவருக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்தனர்.
எனவே கட்சி, நிற பேதமின்றி ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை வலுப்படுத்துவது இலங்கையர் அனைவரினதும் பொறுப்பாகும் என சுட்டிக்காட்டிய பிரத்தியேக வகுப்பு ஆசிரியர்கள், அரசியலில் அனுபவம் மிகுந்த தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க;
"இந்தத் தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இந்த நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாக அமையும். இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தபோது, நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு பாடுபட்டோம். அதற்காக சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் எமக்கு கடன் வழங்கிய 18 நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின்படி செயல்படுவதா இல்லையா என்பது இந்தத் தேர்தலில் முடிவு செய்யப்படும். மற்றைய வேட்பாளர்கள் ஒப்பந்தத்திற்கு வௌியிலிருந்து செயற்படுவதற்கான அனுமதியைக் கோரவுள்ளதாகக் கூறினாலும் இதுவரையில் அதுபற்றி எவற்றையும் பேசுவதாகத் தெரியவில்லை.
நிலைத்தன்மைக்கான ஒப்பந்தத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகளுக்கும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளுக்கும் தனித்தனியான திட்டங்கள் உள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் இணையத்தளத்தில் இந்த முறை முழுமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது மாறாது. தகவல்களை மாத்திரமே நாம் அதற்கு இணைக்க முடியும்.
எதிர்தரப்பு வேட்பாளர்கள் மக்கள் முன் வந்து இவற்றை மாற்றுவோம் என்று கூறுகிறார்கள். அவர்கள் இன்றும் பழைய அரசியல் செய்கிறார்கள். அந்த அரசியல் முறையே நாட்டின் பொருளாதாரத்தையும் அரசியலையும் அழிவுக்கு உட்படுத்தியது. அப்படியிருந்தும் எவரும் உண்மைகளை சொல்வதில்லை. நாட்டின் பொருளாதார பிரச்சினைகளைத் தீர்க்க 6 பில்லியன் டொலர் தேவைப்படும். கடந்த தேர்தல் காலத்தில் அந்த உண்மையை நான் கூறியபோது எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
எல்லாவற்றையும் தருவோம் என்று சொல்லி மக்களை மகிழ்விப்பதுதான் நம் நாட்டின் அரசியல் முறையாகும். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாரியளவில் கடன் வாங்கியதால், கடன் சுமை அதிகரித்து நாளடைவில் நாட்டின் பொருளாதாரம் சரிந்தது.
அப்போது, நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க யாரும் முன்வரவில்லை. இருந்த அரசாங்கம் வெளியேற வேண்டிய நிலை வந்தது. தமது அரசியல் எதிர்காலம் அழிந்துவிடும் என நினைத்து எதிர்கட்சிகள் எவையும் நாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த பொருளாதார, அரசியல் முறைமைகளை நாம் மறுசீரமைக்க வேண்டும். மாற்றம் என்பது முகத்தை மாற்றுவது அல்ல. நாம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டும். 2048 வரையிலான எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும். நாட்டின் எதிர்காலத்தையும் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு நாம் முன்னேற வேண்டும்.
ஏற்றுமதிப் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவற்றை மையப்படுத்திய திட்டங்களை வகுத்திருக்கிறோம். ரூபாயின் பெறுமதியை ஸ்திரப்படுத்தவும், வருமானத்தை அதிகரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏற்றுமதி வர்த்தகத்தை இலக்கு வைத்து விவசாயத்தை நவீனமயமாக்கல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
எதிர்காலத்தில் உலக மக்கள்தொகை 7 முதல் 9 பில்லியனாக அதிகரிக்கும். எனவே 2 பில்லியனுக்கான உணவுத் தேவை அதிகரிக்கும். அதேபோல் சுற்றுலாத்துறை மற்றும் புதிய தொழில்நுட்பத் துறைகளை மேம்படுத்துவதும் அவசியமாகும்.
அதேபோல் சமூக ரீதியிலான மாற்றமொன்றையும் ஏற்படுத்த வேண்டியுள்ளது. மக்களுக்கான அஸ்வெசும, உறுமய உள்ளிட்ட நிவாரணத் திட்டங்களையும் நாம் செயற்படுத்துகிறோம்.
இலங்கையின் விவசாயிகள் நில உரிமை இல்லாமலேயே நாட்டை அரிசியால் தன்னிறைவு அடையச் செய்தனர். அவர்களுக்கு நாம் உரிமை வழங்க வேண்டும். தோட்டப் பகுதிகளை கிராமங்களாக மாற்ற வேண்டும். அதேபோல் பெண்களை வலுவூட்ட வேண்டும். சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்றும் நிறுவப்பட வேண்டும். இதனால் சமூகத்திற்குள் பாரிய மாற்றம் ஏற்படும். 2048 இற்குப் பொறுத்தமான ஒரு சமூக மாற்றத்தை நோக்கி நாம் நகர வேண்டியது அவசியமாகும்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதா அல்லது அதனைத் தக்கவைப்பதா என்ற கேள்வி உள்ளது. ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதாக சொன்ன எவரும் அதனை செய்யவில்லை.
எனவே, அதைப் பற்றி விவாதிப்பதை விடுத்து, நாட்டில் உள்ள மற்றைய பிரச்சனைகள் குறித்து ஆராய வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதியோ நிறைவேற்று பிரதமர் பதவியோ நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை அன்று. மாறாக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் உள்ளதா என்பதே நாட்டின் பிரச்சினையாகும்.
அரசியல்வாதிகள் மேற்சொன்ன பிரச்சினைகளிலிருந்து தப்பியோடுவதையே செய்தனர். பெண்கள் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல், மாகாண சபை முறைமையை செயற்படுத்துதல் மூலம் இவை அனைத்தையும் மாற்றியமைக்க வேண்டும். இல்லையெனில் இந்த நாட்டிற்கு எதிர்காலம் இல்லை. சுயேட்சை வேட்பாளராக, அனைவரையும் ஒன்றிணைத்து பணிகளை முன்னெடுப்பதற்காக இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியிருக்கிறேன்.
எமக்கு அரசியல் கட்சிகள் தேவை. ஆனால் நாட்டுக்கு ஏற்ப அரசியல் செய்ய வேண்டும். பழைய அரசியல் முறை நாட்டை அழிவுக்கு கொண்டுச் சென்றது. நாடும் மக்களும் சிரமங்களை எதிர்கொண்டபோது எவரும் பொறுப்பேற்க முன்வரவில்லை. திருடர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புமாறு நாங்கள் கூறவில்லை. திருடர்களையும், பொறுப்பில் இருந்து தப்பிக்கும் தலைவர்களையும் பாராளுமன்றத்திற்கு அனுப்புவது நல்லதல்ல.
நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் இணையுமாறு அனைத்துத் தலைவர்களுக்கும் பல சந்தர்ப்பங்களில் அழைப்பு விடுத்துள்ளேன். ஆனால் அவர்கள் வரவில்லை. நாடு நெருக்கடிக்குள் சிக்கினால் அதிகாரம் கிடைக்கும் என்பதை மட்டுமே சிந்தித்தனர். எனவே இவ்வாறான முறைகளை மாற்றவே "இயலும் ஸ்ரீலங்கா" திட்டத்தை முன்மொழிந்திருக்கிறோம்.
எனவே, மீண்டும் 2022 பழைய நிலைக்குச் செல்வதா அல்லது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி முன்னேறுவதா என்பதை தீர்மானிப்பதற்காக ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்." என்றார்.
இந்நிகழ்வில் அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஊடகப்பிரிவு
Ranil24 -
Post a Comment