Header Ads



இறுதி தேர்தல் பிரச்சாரத்தில், ரணில் தெரிவித்த விடயங்கள்



செப்டெம்பர் 21ஆம் திகதி தனது வெற்றி உறுதியானது என்று தெரிவித்த  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அனைவரையும் ஒன்றிணைத்து வலுவான பொருளாதாரத்துடன் அபிவிருத்தியடைந்த நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.


அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு 2022ஆம் ஆண்டு அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டுக்காகவே தான்  முன்னோக்கி வந்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.


அனைவரும் இணைந்து இளைஞர் யுவதிகளுக்கு வளர்ந்த நாடொன்றைப' பெற்றுக் கொடுப்பதற்கான பொறுப்பை நிச்சயம் நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


கொழும்பு கிரேண்ட்பாஸில்  இன்று (18)  இரவு நடைபெற்ற 'ரணிலால் இயலும்' இறுதி வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.


2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற பொதுக் கூட்டங்களின் தொடரில் இறுதிப் பொதுக்கூட்டம் இதுவாகும். இதில் மத்திய கொழும்பைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.


பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதியை பொதுமக்கள் பெரு வரவேற்பளித்தனர்.


''இந்த மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், 


நாட்டை மீண்டும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளாத பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு மக்களின் ஆணையைக் கோருவதாகவும் தெரிவித்தார்.


நாட்டை வங்குரோத்தில் தள்ளும் சஜித் மற்றும் அநுரவின் கொள்கைகளை இந்நாட்டு மக்கள் செப்டெம்பர் 21 ஆம் திகதி தோற்கடிப்பார்கள் என தெரிவித்த ஜனாதிபதி, நாட்டை நேசிக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டை வெற்றிகொள்ளும் வேலைத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாகவும் வலியுறுத்தினார்.


இந்த பேரணிக்கு முன்னர் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற  பூஜையிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றிக்கு ஆசிர்வாதம் வழங்கும் முகமாக இளம் தொழில்முனைவோர்கள் இந்த விசேட பூஜையை  ஏற்பாடு செய்திருந்தனர்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது,


''கட்சி சார்பாக அன்றி சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் களமிறங்கியுள்ளேன். 2 வருடத்திற்கு முன்பிருந்த நிலையை நினைவில் கொள்ள வேண்டும். வாழ்க்கை சவால்கள் நிறைந்தது. ஒன்றில் வெற்றி பெறும் போது மற்றொரு சவால் எழும். வாழ்வில் பாராட்டும் விமர்சனமும் மாறி மாறிக் கிடைக்கும். நான் பொறுப்பை ஏற்ற போது அனைவரும் தப்பி ஓடினார்கள். மக்கள் என்னை நிராகரித்தாலும் எனக்கு மக்களை நிராகரிக்க முடியாது. சஜித்திற்கும் அநுரவிற்கும் உங்களை நிராகரிக்க முடிந்தது. மக்கள் என்னை மறந்தாலும் நான் அவர்களை மறக்கவில்லை.


எனது வீட்டை எரித்த போதும் நான் ஒதுங்கிச் செல்லவில்லை. மக்கள் கஷ்டப்பட்டார்கள். வங்குரோத்தடைந்த நாடாக அறிவிக்கப்பட்ட நிலையில்தான் நாட்டை பொறுப்பேற்றேன். மக்களுக்காக முடிவுகளை எடுத்தேன். விமர்சனங்கள் ஏச்சுப் பேச்சுகள் கேட்க நேரிட்டது. எமது முன்னெடுப்பினால் வருமானம் அதிகரித்தது. அடுத்த வருடம் வாழ்க்கைச் செலவை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவேன். 


கடனை மீளச் செலுத்த முடியாததே பிரதான பிரச்சினையாக இருந்தது. 18 நாடுகளிடம் கடன் பெற்றிருந்தோம். சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கடன் பெறப்பட்டிருந்தது. கடனை மீளச் செலுத்த முடியாது என அந்த நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டது. 17 நாடுகளுடனும் சீனாவுடனும் உடன்பாடுகள் எட்டப்பட்டன. நாளை சிங்கப்பூர் பங்குச் சந்தையில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். ஐ.எம்.எப் ஒப்பந்தத்தை மீற செயற்பட்டால் நிவாரணம் கிடைக்காது. வங்குரோத்து நிலையில் இருந்து நாடு விடுபட்டால் வெளிநாட்டு உதவிகளைப் பெற முடியும். எம்மால் முன்னேற முடியும். நாம் எந்தநாளும் வறுமையில் இருக்கப் போகிறோமா? பொருளாதாரத்தைப் பலப்படுத்தி அனைவரையும் செல்வச் செழிப்புள்ளவர்களாக மாற்ற வேண்டும். 


ஐ.எம்.எவ். ஒப்பந்தத்தை மீறிச் செயற்பட்டால் இரு வேளை பட்டினியாக இருக்க நேரிடும்.  ஒரேயொரு ஐக்கிய தேசியக் கட்சி தான் உள்ளது என்பதை  ஐதேகவினருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். பிரேமாஸவின் பின்னர் நான் தான் கட்சியைப் பாதுகாத்தேன். எந்தநாளும் பிச்சையெடுக்க முடியாது. இதனை மாற்றியமைக்க வேண்டும்.


பொய்யான அரசியலால் பயனில்லை. எமது மக்களை வசதிபடைத்தவர்களாக மாற்ற வேண்டும். எம்மால் இயலும். நாம் வெல்வது உறுதி" என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.


ஊடகப் பிரிவு

Ranil24 - ரணிலால் இயலும்

2024-09-18

No comments

Powered by Blogger.